ஆதிபகவன் – திரை விமர்சனம்

ஆதிபகவன். அமீரின் நீண்டகால உழைப்பு. ஆக்ஷன் திரில்லர்தான் கதை என்று டிரைலரும், காதலும் உள்ளது என்று யுவனின் இசையும் முன்னமே நமக்குச் சொல்லி விட்டன.

கடத்தல் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனின் காதலும் மோதலும்தான் கதை. ஐதராபாத்தில், அண்மை நிகழ்வான கிரானைட் ஊழலில் தொடங்குகிறது படம். ரெட்டி சகோதரர்களுக்குப் பதில் இங்கே ராவ் சகோதரர்கள்!

ஊழல் பற்றிய செய்தி வெளியானதும் ஜெயம் ரவி சி.பி.ஐ அதிகாரியாக வருகிறார். அவர் தலைமையில் ஒரு குழு சென்று சோதனை நடத்துகிறது. நிறைய பணமும் கைப்பற்றப்படுகிறது. சரி, அரசியல் படம்தான் என்று சாய்ந்து உட்கார்ந்தால் அங்கே திருப்பம்! சோதனை செய்தவர்களே போலி அலுவலர்கள்!

பின்பு, கதை பாங்காக் நகர்கிறது. இங்கே, கொள்ளை அடித்ததைப் பங்கிடும்போது ஆதிக்கும் (ரவி), அங்கே இருக்கும் தலைவனுக்கும் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஆதியைக் கொல்ல முடிவு செய்கிறார்கள். ஆதி தன் அம்மாவைப் பார்க்க வருகிறார். தவறான வழியில் செல்லும் மகனிடம் அவருக்குக் கோபம். இவனிடம் பேசுவதையே தவிர்க்கிறார். படத்தில் இது சில நிமிடக் காட்சிதான். ஆனால், அதில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. இங்கே வரும் சிறிய முன்கதைச் சுருக்கம் ஒன்று, ஆதி கொள்ளைக் கும்பலில் சேர்ந்த கதை சொல்கிறது.

கொள்ளைக் கும்பல் ஆதியைக் கொல்ல முயலும் காட்சிகளில் யாரோ அவரைக் காப்பாற்றுகிறார்கள். சாலையில் தற்செயலாக நாயகியைப் பார்க்கிறார். தமிழ்த் திரைப்பட நாயகிகளுக்கே உரிய வழக்கத்தை மீறாமல், இவரும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்டுபவர்தான். பின் ஒரு குடிப்பகத்தில், பரிதாபமான நிலையில் நாயகியை நாயகன் பார்க்க நேர்கிறது. வழக்கம் போல நமது கதாநாயகன் அவரைக் காப்பாற்றிக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அமீர் ஏன் இந்தப் பழைய காட்சிமுறையைக் கையிலெடுத்தார் என்று நினைத்தேன். அதற்கு இரண்டாம் பாதியில் பதில் கிடைக்கிறது. உங்களுக்கு இதன் இறுதியில் கிடைக்கும்.

ஆதி தன் பிறந்தநாள் அன்று அம்மாவைப் பார்க்கச் சென்று ஏமாற்றத்தோடு திரும்புகிறார். அப்போது பியானோ வாசிப்பது போல் ஒரு காட்சி. உண்மையிலேயே, அதில் இசை நன்றாக இருந்தது. அப்போது கரிஸ்மா (நீது சந்திரா) ஆதியைத் தேற்றும் அந்தக் காட்சிகள் அழகான கவிதை! தனது தங்கை தவறான ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் அவளை அழைத்துப் பேசும்போதும், இறுதியில் அவனைச் சுட்டுத் தள்ளும்போதும் வரும் இசை அட! இடையில், மும்பை காவல்துறையினரும் ஆதியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வணிக ஒப்பந்தம் பேசப் போகும் இடத்தில் மீண்டும் கொலை முயற்சி! அதில் குண்டடிபட்டுத் தப்பிக்கிறார் ஆதி. பின் ஒருநாள் தன் காதலைச் சொல்லக் கரிஸ்மா அவரை மும்பைக்கு அழைக்கிறார், பொய்க் காரணம் கூறி.

கரிஸ்மா ஏமாற்றுகிறாள் என்று காட்டிவிட்டார்கள். அப்படியானால் இரண்டாம் பாதிக் கதை இதுதான் என்று நாம் ஒன்று நினைக்க, அதற்கு மாறாக, அதிரடியாக அறிமுகம் ஆகிறார் ‘பகவான்’. பெண்ணின் நளினம் கலந்த உடல்மொழியுடன் ஜெயம் ரவி!

ஒருவன் "மன்னிச்சுடு பகவான்!" என்று கெஞ்சுகிறான். அதைக் கொஞ்சமும் காதில் வாங்காமல் அவனை உயிருடன் கொளுத்துகிறார்.

"நீ கேட்டா மன்னிக்க மேல இருக்கிற பகவான் இல்ல, நான் மும்பை பகவான்" என்று அதகள அறிமுகம்! உதட்டுப்பூச்சு, கண் மை, கடுக்கண், கைகளில் மோதிரம் என உடையிலும் நடையிலும் பகவானாக மாறியிருக்கிறார்.

மும்பை வரும் ஆதியைக் கைது செய்து அடித்துத் துவைக்கிறது காவல்துறை. ஆதியுடன் பகவானின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனும் சிறையில் இருக்கிறான். அவன்தான் ஆதிக்கு மொத்தக் கதையையும் சொல்கிறான்.

ராணி (அதாங்க முன்பாதியில் கரிஸ்மா) பாங்காக் சென்றது, ஆதியைக் காதலித்தது எல்லாம் திட்டமிட்ட செயல் என்றும், பகவானுக்கு பதிலாகப் போலித் துப்பாக்கிச் சூட்டில் போட்டுத் தள்ளத்தான் ஆதியை இங்கு வரவழைத்தார்கள் என்றும் தெரிய வருகிறது.

அடுத்து ஆதியைப் பார்க்க வரும் ராணி அவனிடம் நடந்ததைச் சொல்லும்போது நீது சந்திராவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. துரோகத்தை விவரிப்பது, சாவுக்கு வாழ்த்து சொல்வது என மிரட்டலாக நடித்திருக்கிறார். "Lets meet in the Hell!" – ஆதி கையில் ரோஜாவைக் கொடுத்து விட்டு ராணி பேசும் வசனம்!

பிறகு சுட்டுத்தள்ள அழைத்துச் செல்லப்படும்போது தப்பித்துவிடும் ஆதி, பகவானையும் ராணியையும் என்ன செய்தார் என்பது மீதி!

நடிப்பில் அசத்தியிருக்கிறார் ஜெயம் ரவி! அதுவும் பகவானாக, அதே நளினத்தோடு அவர் போடும் சண்டைகள் நடிப்பில் அவரது முதிர்ச்சியைக் காட்டுகின்றன. ராணி இறந்து கிடப்பதைப் பார்த்து அவர் காட்டும் பாவனை, ஆதியைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் சண்டை போடுவது என்று பல இடங்களில் ஆதியை நடிப்பில் முந்திக்கொள்கிறார். முதலில் இப்படி எதிர்மறையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்ததற்காகவே ரவியைப் பாராட்ட வேண்டும்.

இறுதி இருபது நிமிடங்களுக்குச் சண்டைக் காட்சிகள் மட்டும்தான். ஆனால், அந்த நீளம் கொஞ்சம் கூடச் சலிப்பைத் தராமல் காட்டியிருப்பது திறமை! அதுவும் ஆதியும் பகவானும் மோதிக்கொள்ளும் காட்சிகள் நல்ல வடிவமைப்பு.

அமீர் படத்தில் யுவனின் இசைக்குக் கேட்கவா வேண்டும்! பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்! பகவானுக்கு ஒலிக்கும் அந்தத் தபேலா கலந்த இசை, நல்ல ரசனை!

ஒளிப்பதிவு தேவராஜ். அது ஐதராபாத்தோ, பாங்காக்கோ இல்லை மும்பையோ அழகாகக் காட்டியிருக்கிறார். ஆடை வடிவமைப்பும் கொள்ளைக் கும்பல் கதை என்பதற்கேற்ப அடர்த்தியான நிறங்களே பயன்படுத்தப்பட்டிருப்பதும் அழகு!

அமீர் இதில் சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். டூயட் பாடலில் கூடக் கருப்பு உடைகள், கதாபாத்திரத்தின் குணம் சொல்ல. தாமதமாக வந்தாலும் தரமாக வந்திருக்கிறது! 

இரண்டாம் பாகத்தையும் நாம் எதிர்பார்க்கலாம்.

ஆதிபகவன் – ஆக்ஷன் அவதாரம்!

About The Author