ஆஸ்கருக்கு அனுப்பப்படும் ‘பர்ஃபி’!

"ஆஸ்கர் விருது என்பது, அமெரிக்கர்கள் அவர்களுக்குள்ளேயே தந்துகொள்ளும் விருது! நானும் கூட ‘ஹாஸன் அவார்ட்ஸ்’ என்று நம்மூர்த் திரைப்படங்களுக்கு விருதுகளை வழங்கலாம்" என்று நம் உலகநாயகன் சில வருடங்களுக்கு முன் சொன்னார். அது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நம்மூர் மக்களிடம் ஆஸ்கரின் மதிப்பும் கூடிவிட்டது. அமீர்கானின் ‘லகான்’ திரைப்படம் வெளிநாட்டுத் திரைப்பட வரிசையில் தேர்வாகிப் பெரும்புகழைப் பெற்றது. அதன் பிறகு, நம் இசைப்புயலும் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுவிட்டார். இதனால், ஆஸ்கார் விருதுத் தேர்வுக்கு நாம் எந்தப் படத்தை அனுப்பப் போகிறோம் என்னும் எதிர்ப்பார்ப்பும் விழிப்புணர்ச்சியும் நம் மக்களிடம் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கின்றது.

ஹிந்திக்கு அடுத்தபடியாகத் தமிழ்த் திரைப்படங்களையே அதிகமாக ஆஸ்கர் தேர்வுக்கு இந்தியா அனுப்பியிருக்கின்றது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? சிவாஜி கணேசனின் ‘தெய்வ மகன்’ கூட ஆஸ்கர் வரை சென்றது, தெரியுமோ?!
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி, ஆஸ்கருக்கு அனுப்பலாம் என்று தேர்வு செய்யப்பட்டிருக்கும் ‘பர்ஃபி’ திரைப்படம் பார்த்தேன். எத்தனை அழகாய் எடுத்திருக்கிறார்கள்! அப்பப்பா!! மொத்தப் படமும் ஒரு கவிதையைப்போலே இருக்கிறது. அவ்வளவு அற்புதமாக, ரொம்பவும் ஃபோகஸ்டாகப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அனுராக் பாஸு! இவரா சில வருடங்களுக்கு முன், ஹ்ரிதிக் ரோஷன் நடித்து வெளிவந்த ‘கைட்ஸ்’ என்ற குப்பைத் திரைப்படத்தை இயக்கியவர்?! நம்பவே முடியவில்லை!

படத்தின் கதைதான் என்ன? ரொம்பவும் எளிமையான கதை. டார்ஜிலிங்கில், 1972இல் வாழும் நாயகன் ரன்பீர் கபூர், பிறப்பிலேயே பேசவும் கேட்கவும் இயலாத மாற்றுத் திறனாளி. அந்த ஊரில் வாழும் அழகிய இலியானாவைக் காதலிக்கிறார். ‘நண்பன்’ திரைப்படத்தில் பார்த்ததை விடக் கொஞ்சம் இடுப்பைக் கூட்டியிருக்கும் இலியானாவிற்கும் காதலுண்டு. ஆனால், ஏழை ரன்பீரை மறந்துவிட்டு ஏதோ பணக்கார மாப்பிள்ளையை மணக்கிறார். காதலில் தோல்வியுற்ற ரன்பீரை, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு, இன்னொரு துக்கம் தாக்குகின்றது. தன் அப்பாவுக்குச் சிறுநீரகம் செயலிழக்க, மருத்துவச் செலவுக்கு நிறையப் பணம் தேவைப்பட, பணக்கார வீட்டுப் பெண்ணும், சிறு வயதுத் தோழியுமான ப்ரியங்கா சோப்ராவைக் கடத்த முயற்சி செய்கிறார். ப்ரியங்காவிற்கு ‘ஆடிஸம்’ எனும் மூளை வளர்ச்சிக் குறைபாடு. பணத்தாசை படைத்த அப்பா, அன்பில்லாத அம்மா என்றிருக்க, அவரின் தாத்தா, இறக்கும் தறுவாயில் எல்லாச் சொத்தையும் அனாதை விடுதி ஒன்றுக்கு எழுதி வைக்கிறார். ஒருபுறம், ரன்பீர் பிரியங்காவைக் கடத்த நினைக்க, மறுபுறம், இன்னதென்று தெரியாத வேறொரு கும்பலும் அவரைக் கடத்த முயற்சிக்கிறது. ரன்பீர் அவரைக் கடத்தியும், தன் அப்பாவை இழக்கிறார். அதே நேரம், ரன்பீர் காட்டும் அன்பினால் அவரைப் பிரிய மறுக்கிறார் பிரியங்கா. இருவரும், இலியானா வாழும் கொல்கத்தாவிற்குப் போகிறார்கள். அங்கு இலியானாவுக்கும் ரன்பீருக்கும் பழக்கம் ஏற்பட, அவரும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். திடீரென்று ப்ரியங்கா மீண்டும் காணாமற்போக, ரன்பீர் என்ன செய்கிறார், ப்ரியங்கா எங்கே போனார் என்ற கேள்விகளுக்கான விடையை உணர்ச்சிக் குவியலாகத் தருகிறது ‘பர்ஃபி’!

எல்லாவற்றையும் விட அற்புதம் படத்தின் திரைக்கதை! முன்பு சொல்லியிருந்த ஆதரவற்றோர் விடுதியில் பணிபுரியும், வயதான இலியானா கதையைச் சொல்வதுபோல அமைத்திருக்கிறார்கள் திரைக்கதையை. ப்ரியங்காவைக் கடத்தியதற்காகப் போலீஸ் ரன்பீரைக் கைது செய்யும் காட்சியுடன் தொடங்கும் பர்ஃபி, முன்னும் பின்னுமாகச் செல்கிறது. படம் முடியும்போதே முழுக்கதையும் புரிகிறது. எல்லாருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இளைய தலைமுறை இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர் தான்தான் என்று ரன்பீர் நிரூபித்திருக்கிறார்.

சரி, படத்தை நன்றாகப் பாராட்டிவிட்டோம்! ஆஸ்கருக்கு அனுப்பவும் முடிவு செய்துவிட்டோம். அங்கே என்னவாகப் போகிறது எனச் சற்றே யோசிப்போம்! யாரோ வெள்ளைக்காரத் தேர்வாளர் படத்தைப் பார்க்கப் போகிறார். என்ன நினைப்பார்?… "கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இந்த இந்தியர்களுக்குச் சொந்தமாக யோசிக்கத் தெரியாதா!? கிட்டத்தட்ட, பத்துப் பதினைந்து பழைய படங்களிலிருந்து முக்கால் மணிநேரக் காட்சிகளை அப்படியே ஈ அடித்தான் காப்பி என்று சொல்வது போலக் காப்பி அடித்திருக்கிறார்களே! இதற்கு விருது வேறு வேண்டுமா!?" என்றுதான் நினைப்பார்!

உண்மைதான்! இன்ஸ்பிரேஷன் வேறு, காப்பி வேறு. சார்லி சாப்ளின், ஜாக்கி சான் நடித்த நிறைய காட்சிகளை, அப்படியே பர்ஃபியிலும் காணலாம். அக்காட்சிகளைப் போல் வேறு காட்சிகள் என்றால் மன்னித்து விடலாம். ஆனால், அதே காட்சிகள் என்றால்…? படத்தின் மையக் கதைக்கு அப்படிக் காப்பியடிக்க வேண்டும் என்கிற அவசியமே கிடையாது. ஆனால், காமெடிக் காட்சிகளும் மற்ற பல காட்சிகளும் கூடக் காப்பிதான்!!

எடுத்துக்காட்டுக்கு, இலியானா நாயகனை நிராகரிக்கும் காட்சி. ‘தி நோட்புக்’ எனும் ஆங்கிலப் படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள். இக்காட்சிகள் எல்லாமே அற்புதமான காட்சிகள்தான்! ஒரிஜினல்களைப் பார்த்திராதவர்கள் மிகவும் ரசிப்பார்கள். ஆனால், சர்வதேச சினிமா உலகுக்கு இக்காட்சிகள் அசல் அல்லவே! உங்களுக்குத் தெரியுமா? நம் இந்தியாவின் தேசிய விருதுகள் கூட ரீமேக் படங்களுக்குத் தரமாட்டார்கள்.

இதனால், பர்ஃபி நல்ல படமாக இருந்தும், சர்வதேச விருதுக்கான தேர்வுக்கு அனுப்பத் தயக்கமாயிருக்கிறது. சர்வதேச சினிமா ரசிகர்கள் நம்மூர் சினிமாவைப் பற்றி என்ன நினைப்பார்களோ என யோசிக்க வைக்கிறது. பர்ஃபி நல்ல படமா?… சந்தேகமின்றி, அற்புதமான படம்! திரையரங்கிற்குச் சென்று பார்க்கலாமா?… கண்டிப்பாகப் பாருங்கள்! ஆனால், ஆஸ்கருக்கு அனுப்புவதற்கு முன் சற்று யோசிப்போமா?!

About The Author

1 Comment

  1. Suriya

    சொனது சரியே என்ன செய்கிறார்கள் என்று பொருத்திரு ந்து பார்ப்போம்

Comments are closed.