இதம் தரும் – (1)

கச்சிதமாக ஒரு வாடகை வீடு அமைந்துவிட்டது குறித்து ஏகப்பட்ட மகிழ்ச்சி இவனுக்கு. பார்த்தவுடனே சட்டென்று பிடித்துவிட்டது. இவனுடைய மனைவிகூட வழக்கத்திற்கு மாறாக தூக்கலாகவே புன்னகைத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகள் இருவரும் எதிர்ப்புறம் குவிந்து கிடந்த மணல் முகட்டில் சரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். குடி வந்த ஒரே நாளில் அவர்களுக்கு ஏகப்பட்ட சினேகிதர்கள். குழந்தைகள் தாம் எப்படி அழகாக சினேகிதத்தைப் பேணுகின்றன?
ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி எந்தவித தயக்கமுமில்லாமல் உள்ளே வந்தாள். விசாரித்தாள். "என்ன புதுசா குடி வந்திருக்கியளா. நான் உங்க பக்கத்து வீட்டுக்காரிதான். எதுனா வேணும்ன்னா கூச்சம் வேணாம். கேளுங்க. பக்கத்து வீட்டுக்காரங்கன்னா ஒரு அன்யோன்யம் வேணும்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். தாறுமாறாகக் கலைந்து கிடந்த சாமான்களைப் பார்த்துவிட்டு ஆங்காங்கே நகர்த்தி வைத்து ஒழுங்குபடுத்தினாள்.மனசுக்கு இதமாக இருந்தது.

"என்ன சார் எங்கே ஒர்க் பண்றீங்க. ஓ… காஸ் ஏஜென்சியிலா. நான் ரிடைர்ட் தாசில்தார். ரெண்டு வீடு தள்ளி குடியிருக்கேன். சொந்த வீடுதான். பையன் சண்டிகர்லே பாங்க் மேனேஜரா இருக்கான். ஒரே பெண். கட்டிக் கொடுத்திட்டேன். நானும் என்னோட ஒய்பும்தான். நல்லது கெட்டது எதுனாலும் சொல்லுங்க. வீடு வசதியா இருக்கும். வீட்டுச் சொந்தக்காரனும் நல்ல மனுஷன். ‘சர்வே’யிலே இருக்கான். இப்போ புரமோஷன்லே மதுரை போயிட்டான். மச்சினன்தான் வாடகை வசூல் பண்றது… கரண்ட் பில் கட்றது…" பெரியவர் பேசிக் கொண்டே இருந்தார். அலுப்பாக இருந்தாலும் அக்கறை பிடித்திருந்தது.

மாலைக்குள் தெருவே வந்து விசாரித்தது. உதவி செய்வதற்காகவே காத்திருந்ததைப்போல தாங்களாகவே முன் வந்து பீரோவை நகர்த்தி வைத்தனர். மேஜை நாற்காலியை தோதான இடத்தில் வைத்தனர். "களைப்பா இருக்கும். சமைக்க வேணாம். எங்க வீட்டிலே சாப்பிட்டுக்கலாம்" என்று உபசரித்தனர்.

நகரங்களில் இவை ஆச்சரியம்தான். அண்டை வீடு எதிர் வீடு என்பதொன்றுமில்லை. அவரவர் வேலை அவர்களுக்கு. எதிரெதிரே சந்தித்துக் கொண்டாலும் லேசான ஒரு புன்னகைக்குக்கூட பஞ்சம். தொலைக்காட்சிப் பெட்டிகளும் சம்பாதிக்கும் வேகமும் மட்டுமே உயரிய நேசத்தை காணாமல் போகச் செய்துவிடும் என்பது நம்பும்படியாக இல்லை. மனசில்லை என்பதுதான் நிஜம். சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவது என்பது அனாவசியமான ஒன்றாகிவிட்டது. எல்லாம் லாப நஷ்ட கணக்குதான்.

மணல் குவியல்களைக் கண்டால் ஓடிப்போய் ஏறிக் குதித்து விளையாட இஷ்டமில்லாத குழந்தைகளின் பழக்கம் குறித்து மனசு துக்கித்தது. இதுவரை இருந்த வீட்டுத் தெருக்களில் பலூன்காரர்கள் எவரும் வந்ததாக நினைவில்லை. குரங்கு வித்தைக்காரர்களுக்கோ குடுகுடுப்பைக்காரர்களுக்கோ வேலையே இல்லை. குழந்தைகளை வேறு திசையில் திருப்புவது ஒருவித வன்முறை.

இப்போது மனசு நிறைந்திருந்தது. புதுப்புது ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்த அன்யோன்யமான விசாரிப்புகள் பிடித்திருந்தன. அனுசரணையான அணுகுமுறை இதமாக இருந்தது. இதுவரை குடியிருந்த வீடுகள் வசதிக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று பார்த்தால் நிம்மதி இல்லை. சதா சண்டையிடும் அண்டைவீட்டார். வாடகைக்குக் குடியிருப்பதாலேயே அடிமைகளாக நினைத்து எள்ளல் பேசும் வீட்டுச் சொந்தக்காரர்கள், சோடியம் விளக்குகளின் கண்களைக் கூசச் செய்யும் அபரிமிதமான ஒளி வெள்ளம், எப்போதும் லாரிகள், பஸ்கள் ஆட்டோக்களின் பேரிரைச்சல். வாழ்தல் கொடுமைதான்.
சொந்த வீடு என்பது இந்த அற்ப சம்பளத்தில் கனவுதான். வாடகைவீடே கதி என்றான பிறகு எதையும் சகித்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற ஞானம் கைவரப் பெற்றது. ஆரம்பத்தில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தபோது ஏகப்பட்ட கனவுகள் இருந்தன. பிழைப்புக்கு கிராமத்தில் வழியில்லை. நகரத்தில் பெரிய உத்யோகம் பார்க்க படிப்பு பணம் செல்வாக்கு போன்ற யோக்யதாம்சங்கள் இல்லை. இந்த லட்சணத்தில் என்ன வேலை கிடைக்கும்? மளிகைக் கடை, ஓட்டல் மேனேஜர், சினிமாக் கொட்டகையில் டிக்கெட் கிழிக்கும் அலுப்பூட்டும் வேலை, பிளாஸ்டிக் சாமான்களை தள்ளுவண்டியில் போட்டு விற்பனை, ஒவ்வொன்றிலும் மூணுமாசம் நாலுமாசம்தான் கணக்கு. இப்போது ஒரு காஸ் ஏஜென்சியில் கணக்காளர் வேலை. கொஞ்சம் பரவாயில்லை. ஆறு மாதம் தள்ளியாகிவிட்டது.

இவளுக்கும் ஒருவேலை இருந்தால் கொஞ்சம் சமாளிக்கலாம் சவுகரியப்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு டிராவல் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துவிட்டது. தன் பிரம்மாண்டமான வீட்டின் பின்பகுதியில் குறைந்த வாடகைக்கு இருக்கச் சொன்னான் முதலாளி. நான்கு நாட்கள் எல்லாம் சரியாக இருந்தது. அய்ந்தாம் நாளே இவளிடம் வழிய ஆரம்பித்துவிட்டானாம். "ரெண்டு குழந்தைகளா உனக்கு. நம்ப முடியலே. கட்டுவிடாம இருக்கே" என்று நேராக விஷயத்திற்கு வந்துவிட்டிருக்கிறான். சட்டென அணைத்துக் கொண்டானாம். புருஷனை விட்டுட்டு வந்துடு. நான் காப்பாத்தறேன். என் பொண்டாட்டியும் வியாதிக்காரி…

இவள் கொஞ்சம் கூடுதலான அழகுதான். கோதுமை நிறம். புடைத்த மார்பகங்கள். செழிப்பான தோள்கள், இவள் சாப்பிடும் சத்தற்ற ஒரு வேளை சாப்பாட்டிற்கு இவ்வளவு வசீகரம் ஆச்சரியம்தான்.

வியர்வை வழிய வழிய ஓடி வந்து சொன்னவளை மேலும் கீழுமாய்ப் பார்க்கத்தான் முடிந்தது. வெறுமே கட்டிப் புடிச்சானா வேறு ஏதாவது பண்ணித் தொலைச்சானா அந்த மீசைக்கார பாவி என்று கேட்கத் தோன்றியது. கேட்கவும் முடியுமோ?
டிராவல் கம்பெனி வேலையை விட்டுவிட்டு குறைந்த வாடகைக்குத் தருகிறேன் என்ற வீட்டையும் நிராகரித்துவிட்டு வந்தபின் வேறு வீடு பார்க்கும் அலைச்சல் –

அடுத்து ஒரு நர்சரி ஸ்கூல் வாத்திச்சி வீட்டின் முன் போர்ஷனில் குடியிருப்பு. குறைந்த வாடகை. அவள் ஒண்டிக்கட்டை, நடுத்தர வயதைத் தாண்டியவள். இவளுக்கு சினேகிதமானாள். சினிமா என்ன கடைத்தெரு என்ன கோயிலுக்குப் போவதென்ன ஒரே குதூகலம். குழந்தைகள் இரண்டும் அவளுடைய வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்தன. நல்ல பருமன். முகத்தில் ஏராளமான அம்மைத் தழும்புகள். புருஷன் வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு ஓடிப்போய் விட்டானாம். அவளுடைய சோகக் கதை கேட்டு உருகிப் போனாள். பாவம்’ங்க என்றாள் அடிக்கடி. இரண்டு பேருமாகச் சேர்ந்து கொல்லைப்புறம் இருக்கும் சொற்ப இடத்தையும் கொத்திக்கிளறி ஏதோ பண்ணி – மூன்றே மாதத்தில் ரோஜாச் செடிகளும் மல்லிகைச் செடிகளும் பூத்துக் குலுங்கின. செடிகளின் மேல் கொண்ட அவளின் பிரேமை பிடித்திருந்தது.

"என்னங்க வேலைக்குப் போகலையா? அக்காவ எங்க காணும். தர்மாஸ்பத்திரிக்குப் போகனும்னாங்க -" உள்ளே வந்தாள்.

காலம்பரவே போயிட்டா. அப்படியே அவ அக்கா வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வரதாச் சொன்னா. நானும் வேலைக்குப் போகலே. ராத்திரியிலிருந்தே தலைவலி.

"கூப்பிடக்கூடாது. ஸ்கூல்லேருந்து இன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டேன். மாத்திரை எதுனாலும் சாப்பிட்டீங்களா?"
கிடுகிடுவென கிட்டே வந்தாள். ஒரு அங்குல இடைவெளி கூட விடாமல் நெருக்கமாக நின்றாள். மூச்சுக் காற்றுபட்டது. நெற்றிப் பொட்டுகளை இதமாக அழுத்திவிட்டாள். உடம்பு கூசியது. பருத்த உடம்பு. பருத்த ஸ்தனங்கள் முகத்தை உரசின. அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும். சோப் வாசனை தூக்கலாக அடித்தது. "ஏன் இப்படி உம்மணா மூஞ்சியா இருக்கீங்க. சந்தோஷமா இருக்க வேண்டாமா. கஷ்டம்கறது நமக்கெல்லாம் நிரந்தரமானது…"

மளமளவென சேலையை அவிழ்த்துப் போட்டுவிட்டு மூர்க்கமாகக் கட்டிக் கொண்டாள். வேகத்தோடு தரையில் சாய்த்தாள். என்ன ஆவேசம். உடம்பு நெருப்பாய்ச் சுட்டது. மேனியிலிருந்து திடீரென கற்றாழை நாற்றம் வீசியது. காமம் கொப்பளித்துத் ததும்பும் அடையாளங்களாக – முனகினாள். குண்டான பெண்கள் எப்போதுமே விருப்பமானவர்கள். நெஞ்சு கொள்ளாத மார்பகங்கள் உடம்பை அழுத்தி திக்குமுக்காட வைத்தன.

லேசான கண்ணசைவு சம்மதத்திற்குக்கூட காத்திராமல் புடவையை அவிழ்த்துப்போடும் காமம் அழகுதான். பிடித்தமானதுதான். விரும்பத்தக்கதுதான். முறைதவறிய சுகங்களுக்காக ஏங்கியதில்லை. ஏங்குவதற்கான தகுதியும் இல்லை. இப்போ காலடியில் கொட்டிக் கிடக்கும்போது அள்ளிக்கொள்ள மறுப்பது அறிவீனம் மட்டுமல்ல பலவீனம். ஜாக்கெட் பட்டன்கள் பட்பட்டென தெறித்து விழுந்தன.

இவ்வளவு கொள்ளை ஆசையை மனசிலே வச்சிகிட்டு என் ராசா… என் ராசா… ஏய்யா சும்மாக் கிடந்தே. எமகாதகப்பயலா இருக்கியேடா… எலே… எலே…லே… கம்மனாட்டி… நாயே… என் கண்ணூ…என்று கட்டுப்பாடின்றி உளறினாள்.

மூலைக்கொன்றாய்க் கிடந்த துணிகளை அள்ளி வந்து புடவையை நிதானமாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது கச்சிதமாக இவள் வந்து சேர்ந்தாள். "தூத்தேறி…"

ராத்திரி லேசாகக் கத்தினாள். "உங்க புத்தி ஏங்க இப்படிப் போச்சு."
(தொடரும்)

About The Author

1 Comment

  1. Krishnamurthy

    ஈன் திச் இச்சுஎ ஒf நிலசரல், அல்ல் தெ லின்க்ச் அரெ மெச்செட் உப்! Yஒஉ cலிcக் ஒன் ஒனெ தெ இடெம் ஒபென்ச் உப் இச் அல்டொகதெர் டிffஎரென்ட் ஒனெ!

Comments are closed.