இது வேறுலகம் தனியுலகம் (2)

அப்பா டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் கிளம்பிப் போன பின்னால் தான் இவன் வீட்டை விட்டு வெளியேற முடியும்.

காலையிலிருந்து இவனுடைய பரபரப்பை வேவு பார்த்த அப்பா, அவனைக்குறித்து அம்மாவிடம் மெல்லக் கேட்பது, அவரை வேவு பார்த்துக் கொண்டிருந்த இவனுடைய காதில் விழுந்தது.

"தொரை காலங்காத்தால டிப் டாப்பா எங்கக் கெளம்பிட்டாராம், கலெக்டர் வேலக்கி எதாச்சும் இன்ட்டர்வ்யூ வந்திருக்காமா? எந்த இன்ட்டர்வ்யூக்குப் போய்க் கிழிச்சான். கதை எழுதறேன் கவிதை எழுதறேன்னு பீச்லயோ பார்க்லயோ ஒக்காந்து பராக்குப் பாத்துட்டிருப்பான். எழுதறது தான் எழுதறான், காசு குடுக்கற பத்திரிகைக்கி எழுதறானா, எல்லாம் தண்டம்!"

அம்மா அப்பாவை அடக்கினாள்.

"சும்மா சும்மா கரிச்சிக் கொட்டாதீங்க. நீங்க நெனக்கிற மாதிரி இல்லீங்க, ஒரு பெரிய ஆளப் புடிச்சி வச்சிர்க்கான். இவனோட ரசிகராம். அண்ணா நகர்ல பெரீய்ய கடை வச்சிர்க்காராம். இன்னிக்கி மத்யான சாப்பாட்டுக்கு இவனக் கூப்ட்டிர்க்காராம். அதான் கெளம்பிட்டிர்க்கான்."

"அப்ப, ஒரு வேள தண்டச் சோறு மிச்சம்."

‘ரெண்டு வேளை’ என்று இவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். காலையில் டிஃபனும் வேண்டாமென்று அம்மாவிடம் நேற்றே சொல்லியாச்சு.

இந்த இட்டிலிகளுக்கு வயிற்றில் இட ஒதுக்கீடு செய்து, மதிய உணவுக்கு மனக்கசப்பு ஏற்படுத்துவானேன்?

அப்பாவின் ஆதங்க வெளிப்பாடுகள் புதுசில்லை இவனுக்கு. இது ஒரு வயசுக்கோளாறு.

நடுத்தர வயசிலிருந்து முதுமையை நோக்கி நகர்கிற ஒரு ரெண்டுங் கெட்டான் பருவத்தில், பெற்ற மகனைக் கரித்துக் கொட்ட ஓர் அரிப்பு எல்லாத் தகப்பன்களுக்கும் ஏற்பட்டாக வேண்டும் என்பது இந்தக் கவிஞன் கம் எழுத்தாளனின் ஆராய்ச்சி முடிவு.

அப்பா ஆஃபீஸூக்கு கிளம்பியதும் அம்மாவிடமும் வேணியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

அயனாவரம் மேட்டுத் தெருவில் படியிறங்கி, மெட்ரோ வாட்டர் காம்பவுண்டை ஒட்டி நடந்து, புதிய ஆவடிச் சாலையைக் குறுக்கு வெட்டில் கடந்து எட்டிப் பார்த்தால் அண்ணா நகர்.

மிஞ்சி மிஞ்சிப்போனால் முக்கால் மணி நேர நடை.

நடந்தான்.

அவ்வப்போது கர்ச்சீஃபையெடுத்துக் கழுத்தைச் சுற்றி வியர்வையைத் துடைத்தபடி நடந்தான்.

அந்த ஆர்ப்பாட்டமான டிபார்ட்மென்ட் ஸ்டோரின் முகப்பைப் பார்த்தாலே ஒரு மனச் சிலிர்ப்பு.

வறுமைக் கோட்டைப் பற்றிக்கொண்டு ஊசலாடிக் கொண்டிருக்கிற இவனுடைய வர்க்கத்துக்கு மறுக்கப் பட்டிருக்கிற பாணியிலமைந்த பிரமாண்டமான கடை. இதன் உரிமையாளர் சந்தேகமில்லாமல் ஒரு மேல் தட்டுக் கோடீஸ்வரனாயத்தானிருக்க வேண்டும்.

ஜோல்னாப்பை அறிவுஜீவிகள் பாஷையில், பூர்ஷ்வா.

ஸோ வாட்?

இவர் என்னுடைய வாசகர்.

ஏதோ ஓர் அம்சத்தில் என்னைவிடத் தாழ்ந்தவர்.

ஆரம்பத் தயக்கத்தைத் தலையைத்தட்டி அமுக்கி விட்டுப் படியேறினான்.

இவனுடைய வரவுக்காகவே காத்திருந்த மாதிரி முகம் நிறையப் புன்னகையோடு எதிர்த்திசையிலிருந்து வந்தவர், “மிஸ்டர் ராஜா?” என்கிற வரவேற்போடு இவனைக் கை குலுக்கக் கரம் நீட்டினார்.

வசீகரம் வஞ்சனையில்லாமல் வியாபித்திருக்கிற முகம். வயது நாற்பதைத் தாண்டியிருக்கலாம். ஆனாலும் முப்பதுகளுக்கான கம்பீரமான இளமை. தொப்பை கிப்பை போடாத கச்சிதமான உடலமைப்பு.

ரொமான்ட்டிக் புளு கலரில் முழுக்கை சட்டை. அதைத் தாங்கிப் பிடிக்கிற மாதிரி அடர்ந்த நீலத்தில் பான்ட். என்ன நிறம் என்று ஊகிக்க சிரமப்படுத்துகிற பளபளக்கும் ஷூ. உடையின் வர்ணத்தோடு இழைக்கிற மாதிரிப் பொருத்த மாய் ஒரு ட்டை. தாராளமாய், ஏராளமாய்த் தலைமுடி. சிகரெட் கறையால் களங்கமடைந்து விடாத உதடுகளின் மேலாய் நேர்த்தியாய்ச் செதுக்கப்பட்ட மீசை. அதற்குக் கீழே ஒரு காந்தப் புன்னகை.

கவிஞர் கம் எழுத்தாளனாய் மட்டுமல்லாமல், கவிஞர் கம் எழுத்தாளர் தம் ஓவியராய் இருந்திருந்தால் இந்த உருவத்தை மனசில் இருத்தி, வீட்டுக்குப் போய்த் தூரிகை கொண்டு தீட்டியிருக்கலாம்.

தன்னுடைய ப்ரத்யேக அறைக்கு இவனைக் கை பிடித்து வழி நடத்திச் சென்றார்.

உள்ளே புகுந்ததும் முகத்தில் பனியடித்தது.

இவனுடைய கதைகளிலிருந்து சில விசேஷமான வரிகளை மிகுந்த ஈடுபாட்டோடு இவனோடு பகிர்ந்து கொண்டு இவனைப் புளகாங்கிதப் படுத்தினார்.

இவனுடைய லேட்டஸ்ட் வரதட்சணைக் கவிதையை வார்த்தை வார்த்தையாய் அலசினார்.

"இந்த அற்புதமான கவிதை மட்டும் ஒரு பதினஞ்சு வருஷம் முந்தி எழுதப்பட்டிருந்தா மிஸ்டர் ராஜா, நா நிச்சயமா வரதட்சணை வாங்காமத்தான் கல்யாணம் பண்ணியிருந்திருப்பேன். ஒங்களுக்கு இருக்கிற முற்போக்கு சிந்தனை, ஒங்க வயசுல அப்ப எனக்கு இல்லாமப் போனதுக்கு நா வெக்கப்படறேன் மிஸ்டர் ராஜா. ஆனா, அதுக்கு ப்ராயச்சித்தம் பண்றதுக்கு சில வருஷங்கள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரத்தான் போகுது. எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். பையனுக்குக் கல்யாண ஏற்பாடு நடக்கறப்ப நிச்சயமா அவனுக்கு வரதட்சணைப் பேரம் பேச மாட்டேன். ஒரு பைசாக் கைமாறாமத்தான் அவன் கல்யாணம் நடக்கும். திஸ் இஸ் ய ப்ராமிஸ்."

உணர்ச்சி கொப்பளிக்க அவர் சொன்னதற்கு ஒரு திருத்தத்தை ராஜா முன்வைத்தான்.

"பாதி ப்ராயச்சித்தம் தான் சார் அது."

"என்ன சொல்றீங்க?"

ஆமா சார். பையனுக்கு வரதட்சணை வாங்கறதில்லன்னு எப்படி உறுதியாயிருக்கீங்களோ, அதே உறுதி, பொண்ணுக்கு வரதட்சணை குடுக்கறதில்லங்கறதிலயும் இருக்கணும். முன்னத விட இதான் கஷ்டமான காரியம். இதயும் நீங்க செஞ்சு காட்டிட்டீங்கன்னா, அதான் முழு ப்ராய்ச்சித்தம். முழு வெற்றி.”

மேஜைக்குக் குறுக்காய்க் கைகளை நீட்டி இவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டார் அவர்.

"மிஸ்டர் ராஜா, யூ ரியலி ஆர் ய ஜீனியஸ் ஐ ஸே! இந்த விஷயம் எனக்குத் தோணாமப் போயிருச்சு பாத்தீங்களா! இதான் ஒரு இலக்கியவாதிக்கும் ஒரு வியாபாரிக்குமுள்ள வித்யாசம். என்ன சொல்றீங்க!"

என்ன சொல்லுவான்?

சிரித்தான்.

மனசுக்குள் அப்பா எட்டிப் பார்த்து விட்டுப் போனார்.

இப்படியாகவே மதிய உணவுக்கு வேளை வந்தது.

"வாங்க மிஸ்டர் ராஜா, லஞ்ச்சுக்குப் போகலாம். வீட்ல யாருமில்ல, ஹோட்டேல் தான். எங்க போலாம் சொல்லுங்க."

"ஹோஸ்ட் நீங்க, எங்க கூட்டிக்கிட்டுப் போனாலும் சரிதான்."

செவிவழிச் செய்தியாய் மட்டுமே இவன் அறிந்திருந்த நட்சத்திர ஹோட்டேல் ஒன்றின் பெயரை உச்சரித்து, அங்கே போகலாம் என்றார்.

கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய் மாதிரியான தோற்றத்திலிருந்த உயரமான காவலாளி திறந்து விட்ட, டாலடிக்கிற உலோகக் கைப்பிடியால் பார்டர் போட்ட ராட்சசக் கண்ணாடிக் கதவுக்குள்ளே பிரவேசிக்கவே பிரமிப்பாயிருந்தது.

மெத்து மெத்தென்ற கார்ப்பெட் விரிப்புக்கு இவனுடைய ரப்பர் செருப்புகள் ஒரு முரணாயிருந்தன.

பிரமிக்கவோ சங்கடங்கொள்ளவோ இதிலென்ன இருக்கிறது ராஜா?

நீ ஒரு தமிழ்க் கவிஞன்.
நீ ஒரு தமிழெழுத்தாளன்.
நீ சராசரிக்கு மேம்பட்டவன்.
நீ வித்யாசமானவன்.

நட.
நெஞ்சை நிமிர்த்தி நட.
தலை நிமிர்ந்து நட.
தமிழ்த் திமிரோடு நட.

நடந்தான்.

(தொடரும்)

About The Author