இது வேறுலகம் தனியுலகம் (3)

உள்ளே ரெஸ்ட்டாரன்ட்டில், செவிவழிச் செய்தியாய்க் கூட இவன் அறிந்திராத உணவு வகைகள்.

அப்புறமாய் அம்மாவிடமும் வேணியிடமும் ஒப்பிப்பதற்காகச் சில பெயர்களைப் பரிச்சயம் செய்து கொண்டான்.

அப்பழுக்கில்லாத நாப்கினை உதடுகளின் விளிம்பில் ஒற்றியெடுத்தபடி இவனுடைய குடும்பத்தைப் பற்றிக் கேட்டார்.

சொன்னான். பட்டம் பெற்று மூணேமுக்கால் வருஷமாய் வேலை அமையாமலிருப்பதை.

சகோதரியும் சிநேகிதியுமான வேணிக்குக் கல்யாணத்துக்கு வேளை வராமல் காலங்கடந்து கொண்டிருப்பதை.

லெளகீக யதார்த்தங்களுக்கு முன்னால் இவனுடைய எழுத்துக்கள் அவமரியாதைப்பட்டு நிற்பதை.

இவனைக் குறித்து அப்பாவுக்கு நிறைய வருத்தம் இருப்பதை.

எல்லாவற்றையும் சிரத்தையோடு செவியேற்றுக் கொண்டவர், கொஞ்சம் யோசனையோடு சொன்னார், “மிஸ்டர் ராஜா, நா ஒண்ணு சொல்லுவேன், நீங்க தப்பாவே எடுத்துக்கக் கூடாது.?”

“நீங்க ஒரு படைப்பாளி, நா ஒங்களோட தீவிர வாசகன்ங்கற உன்னதமான நிலையிலயிருந்து பூமிக்கி எறங்கி வந்து நாம நண்பர்களாப் பேசுவோம். ஒரு ஃப்ரண்டுங்கற மொறையிலயும், ஒங்களவிட வயசுல மூத்தவன்ங்கற மொறையிலயும், ஒங்களவிட தேவைகள் குறைவா உள்ளவன்ங்கற மொறையிலயும் ஒங்களுக்கு எதாவது செஞ்சாகணும்னு நா ஆசப்படறேன். அந்தக் கடமையும் உரிமையும் எனக்கிருக்குன்னு நெனக்கிறேன். ஆனா ஒங்க ப்ரியாரிட்டி என்னன்னு எனக்குத் தெரியாது. அத நீங்கதான் சொல்லணும். சொல்லுங்க. மிஸ்டர் ராஜா, நீங்க ஏதாவது ஏன்ட்டக் கேட்டுத்தான் ஆகணும். ப்ளீஸ். இப்ப சொல்லாட்டி கூட பரவாயில்ல. சாவகாசமாச் சொல்லுங்க. ஆனா, கட்டாயம் சொல்லணும். நா காத்திட்டிருப்பேன்.”

இவனுக்கு என்ன சொல்லவென்று புரியவில்லை.

இலக்கிய சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, படைப்பாளி கிரீடத்தைத் துறந்து விட்டு ஒரு சாமான்யனாய், பாமரனாய் இந்தத் தொழிலதிபர் முன்னே நின்று கொண்டிருப்பது போலிருந்தது.

அம்மாவும் வேணியும் மனசுக்குள் இட வலமாய்ப் பெண்டுலமாடினார்கள்.

அப்பாவுந்தான்.

தேவைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தீர்த்து வைக்க ஒரு புண்ணியவான் தயார் நிலையிலிருக்கிறார்.

‘சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாய்ப் பயன்படுத்திக் கொள், தப்பே இல்லை’ என்றது பொது அறிவு.

‘உன்னுடைய மேதாவிலாசத்தை இந்தப் பணக்காரக் கால்களில் இடற விடத்தான் போகிறாயா’ என்று கேட்டது சிந்தனைச் செருக்கு.

“சார், நா அப்பறமா யோசிச்சிச் சொல்றேனே” என்று சமாளித்தான்.

“நோ ப்ராப்ளம், ஐ வில் வெய்ட். ஆனா என்ன ஏமாத்திரக் கூடாது, நா அப்ஸெட் ஆயிருவேன்.”

வீட்டில், ராத்திரி சாப்பாட்டு வேளையிலும் மனசு யோசனையாய்த்தானிருந்தது.

அம்மாவிடமும் வேணியிடமும் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்துச் சொல்லி முடித்திருந்தான். இந்தக் கடைசி ஐட்டத்தை மட்டும் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்திருந்தான்.

அப்பா இன்றைக்கு சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார். வேணி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

“ரசம் இன்னுங்கொஞ்சம் விடட்டா ஃப்ரண்ட்? நெய்யில்ல, ரசம்.”

அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான். இப்போது சொல்லி விட வேண்டியது தான்.

சொன்னான்.

“நீ என்னடா கேட்ட?” என்றாள் அம்மா, ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும்.

“யோசிச்சிச் சொல்றேன்னு சொன்னேம்மா.”

“யோசிக்க என்னடாயிருக்கு, பெரிய பணக்காரங்கற, பெரிய கடை வச்சிர்க்கார்ங்கற, அவரோட கடையில ஒரு சூப்பர்வைசர் வேல போட்டுத் தரச் சொல்லிக் கேக்கறது தான?”

“அவர் பணக்காரர் தாம்மா, ஆனா என்னோட வாசகர். எம்மேல மரியாதை வச்சிர்க்கறவர். அவர்ட்ட கை கட்டி எப்டீம்மா நா வேல பாக்க முடியும்.”

இவன் சொன்னதைக் கேட்டு அம்மாவின் சுருதி பிசகி விட்டது.

“சரிப்பா, அவர் கடையில வேண்டாம். அவருக்குத் தெரிஞ்ச பெரிய மனுஷங்க எத்தன பேர் இருப்பாங்க, யார்ட்டயாவது சொல்லி ஒரு வேல வாங்கிக் குடுப்பார்ல்ல, நீ கேட்டிர்க்கலாமே ராஜா?”

இந்தக் கட்டத்தில் அப்பா உள்ளே புகுந்தார்.

“அவர் தாம் பெரிய எழுத்தாள மேதையாச்சேடி, யார்ட்ட கை கட்டி சேவகம் செய்வார்? எவனாவது ஒசியில தீனி போட்டா போய்த் தின்னுட்டு வருவார். ஏண்டா அந்த ஆள் அவ்ளோ ஸீரியஸ்ஸாப் பேசினான்னு சொல்றியே, கேக்க வேண்டியது தானடா. எங்கக்காக்குக் கல்யாணம் ஆகவேண்டியிருக்கு, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பான்னு கேக்க வேண்டியது தானடா, கேட்டியா நீ?”

அவர் முஸ்லிம்ப்பா.

சொல்லிவிட்டு நாக்கைக் கடித்து கெண்டான். வழுக்கி விட்டது உறைத்தது. அனிச்சைச் செயல் மாதிரி, இவன் சொல்லக் கருதியிராத வாக்கியம் எப்படியோ வெளியே வந்து விழுந்து விட்டது.

அப்பா பிடித்துக் கொண்டார்.

“ஒங்கக்காவ ரெண்டாந்தாரமாக் கட்டிக்கவாடா அந்த ஆளக் கேக்கச் சொல்றேன்? கல்யாணச் செலவுக்கு அம்பதாயிரமோ ஒரு லட்சமோ அந்த ஆள அசத்தி வாங்கப்பாருன்னா, சம்மந்தமேயில்லாம அவர் முஸ்லிம்ங்கறியே. கேட்டுப் பாக்கறது, குடுத்தா வாங்கிக்கிறது குடுக்காட்டி போடான் னுட்டு வந்துர்றது. ஒனக்கு எங்க அவ்ளோ பொறுப்பு! ஒங்கக்காவையும் ஒன்னையும் காலேஜ்ல படிக்கவக்க அழுத பணத்துல இவ கல்யாணத்த முடிச்சிர்க்கலாம்.”

வழக்கமாய் இவனுக்காகப் பரிந்து பேசுகிற அம்மா இப்போது வாயைத் திறக்காதது, அப்பா சொன்னதில் அம்மாவுக்கும் சம்மதந்தான் என்று உணர்த்தியது.

இவனுக்குள் நியாயமாகவோ அநியாயமாகவோ ஒரு சங்கடம் பரவியது. தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. தலை கவிழ்ந்து, பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.

நிசப்பத்தை விலக்கிக் கொண்டு இவனுடைய தலைக்கு மேலாய் ஒலித்தது வேணியின் குரல்.

“ஊறுகா வக்யட்டுமா ஃப்ரண்ட்?”

இந்த சந்தர்ப்பத்தில் அப்பா திரும்பவும் வெடித்தார். “ப்ரண்ட் என்னடி ஃப்ரண்ட்? பேரச் சொல்லிக் கூப்புடேண்டி! நீயும் அவனுக்கு ஜால்ரா தட்டித் தட்டித்தான் ஒன்னால நாங்கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு ஆய்ட்டீங்க.”

ராஜாவைப் போல மெளனியாயிராமல், வசமாய் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் வேணி அப்பாவை மீறிக் குரல் கொடுப்பாள்.

அப்படியரு சந்தர்ப்பம் இப்போது.

“ஸு.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா. ஒங்களுக்கு இதெல்லாம் புரியாது. ப்ரண்ட், ஊறுகா?”

அவளைத் தலைநிமிர்ந்து பார்க்க இயலாதவனாயிருந்தான். “ம்” என்கிற ஓரெழுத்தில் ஊறுகாய்க்கு ஒப்புதல் அளித்தான்.

கண்ணாடி பாட்டிலிருந்து ஒரு ஊறுகாய்த் துண்டைக் கரண்டியிலெடுத்து இவனுடைய ப்ளேட்டின் விளிம்பில் வைத்தபடி வேணி சொன்னாள் மெல்ல:

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டேல்ல லஞ்ச் சாப்ட்டியே, ஒன்னோட ஹோஸ்ட் கிட்ட சொல்லி லெஃப்ட் ஓவர்ஸ் எல்லாம் பாக் பண்ணி எடுத்துட்டு வந்திர்க்கலாம்ல நீ, இந்த ஃப்ரண்டுக்காக…”

இப்போது இவன் அவளைத் தலைநிமிர்ந்து பார்த்தான்.

(தீராநதி, ஏப்ரல் 2003)

About The Author

1 Comment

  1. anand

    ரெஅல்ல்ய் சுபெர்ப் சிர்… நிcஎ என்டிங்

Comments are closed.