இத்தனை நாளாய் எங்கிருந்தாய்(23)

‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ முழு நாவலை…
1. மின்னூலாகப் பெற :
2. அச்சு நூலாகப் பெற (இந்தியாவிற்குள்
மட்டும் அனுப்பப்படும்) :


ரேஷ்மியோடு வெளியில் சாப்பிடச் சென்றபோது, "நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே?" என்ற அவளின் கேள்விக்கு, "பண்ணிக்க வேண்டியதுதான்" என்றான் ஹரி

"எனக்கும் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகணும்னு ரொம்ப ஆசை. ஆனா நடக்க மாட்டேங்குது. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா, ஹரி?" என்றாள் ரேஷ்மி

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டவன், "உன்னை யாருக்குத்தான் பிடிக்காது, ரேஷ்மி?" என்று சமாளிப்பாய்ச் சொன்னான்.
பெருமூச்செறிந்தாள். "நமக்கு நெருக்கமானவங்களை இழக்கும் போது பலவீனப்படற மனசு சீக்கிரமே இன்னொருத்தர் பக்கம் சாயும்னு சொல்வாங்க. அப்படித்தான் இருக்கு எனக்கும். உன் ஃப்ரண்ட்ஷிப் பிடிச்சிருக்கு. தேவையா இருக்கு" என்று அவனுடன் கை கோர்த்துக் கொண்டாள்

பின், "ஹேய், பயப்படாதே. உன்கிட்ட நான் எதையும் எதிர்பார்க்கலை. எனக்குத் தோணினதை உங்கிட்டே சொன்னேன். அவ்வளவுதான்" என்று சேர்த்துக் கொண்டாள்

ஹரிக்கு இத்தகைய உறவுகள் புதிதில்லையாதலால் சகஜமாய் அவளுடன் கை கோத்து நடந்தான்.

****

அடுத்த இரு வாரங்களில் ஹரிக்கு மனம் தெளிவானது. தான் எடுத்திருந்த முடிவு திருப்தியாய் இருந்தது. புவனாவுக்கு அதிலொன்றும் ஆட்சேபனை இருக்காதென்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவளைக் காயப்படுத்தாத விதத்தில் தன் மனதை வெளிப்படுத்துவதுதான் சவாலாய் இருக்கும் போலிருந்தது. தன் அமெரிக்க வாசத்தை முடித்துக் கொள்வதற்காகத் தான் மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான் ஹரி.

ஹரி வந்திருப்பதாய் பிரதீப் சொன்னதிலிருந்து புவனாவுக்கு அலுவலகத்தில் இருப்புக் கொண்டிருக்கவில்லை.

மாலை பிரதீப்பின் அபார்ட்மெண்டில் அவனைப் பார்த்த போது அவனின் பல நாள் தாடியும் களை இழந்த முகமும் சோகம் கப்பிய கண்களும் புவனாவை என்னவோ செய்தன. குழந்தை போல் அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது.

அவள் மனதைப் படித்தது போல் அவன் அருகில் வந்து அவளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாய் தோளில் முகம் புதைத்தான் – பிரதீப் பாத்ரூமிலிருந்த தைரியத்தில். அவள் கைகள் அனிச்ச¨யாய் அவன் முதுகை வருடின. விலகவே மனமில்லாமல் நின்றிருந்தவர்கள் பாத்ரூம் கதவு திறக்கும் ஓசையில் சட்டெனப் பிரிந்தார்கள். பிரதீப் அறைக்குள் நுழைந்ததும் ஹரியிடம் "டேக் கேர்" என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வெளியேறினாள் புவனா

மனசு குறுகுறுவென்று உறுத்திற்று அவளுக்கு. ப்ரதீப் துக்கித்தால் இப்படி கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லி இருப்பேனா என்று நினைக்கையில் குறுகிப் போனாள். ‘ஏன் இவனைக் கண்டால் எனது அத்தனை கட்டுப்பாடும் நொறுங்கிப் போகிறது? ஏன் இவனிடம் மட்டும் எப்போதும் இந்த சரணாகதி?’ இனி ஹரியுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களை எப்படியாவது தவிர்த்தாக வேண்டும் என்று மனதுக்குள் கங்கணம் கட்டிக் கொண்டாள்

படுக்கையில் படுத்தபோது அவனது அந்த இறுக்கமான அணைப்புக்காக மனது ஏங்கியது. அவனது அருகாமையில் எல்லாக் கவலைகளும் விலகிவிட்டாற்போல மனசு லேசாக இருப்பதும் சிப்பிக்குள் முத்து போல பாதுகாப்பாய் உணர்வதையும் அவளால் மறுக்க இயலவில்லை. இது வெறும் உடம்புப் பசியோ என்று எண்ணுகையில் கண்ணில் நீர் பெருகி கன்னத்தில் வழிந்தது. கண்ணீர் பலவீனத்தின் அறிகுறி என்ற எண்ணம் எழுந்து அவளுக்குத் தன் மேல் முதன் முறையாய் வெறுப்பு எழுந்தது.

அடுத்த நாளே அவன் கிளம்பி விட்டதில் ஒரு புறம் ஏமாற்றமும் மறுபுறம் நிம்மதியுமாயிருந்தது புவனாவுக்கு.
"புவனா, நான் ஹரியை ஏர்போர்ட்ல விட்டுட்டு மூணு நாள் சின்சினாடில இருப்பேன். ஏதாவது வேணுன்னா கூப்பிடு, என்ன?" என்ற பிரதீப் ஹரியின் பெட்டிகளை இழுத்துக் கொண்டு காருக்கு நடந்தான்.

ஹரிக்கு அவளிடம் நேரடியாய்க் கேட்டுவிட ஏனோ துணிச்சல் வரவில்லை. அவளிடம் விபரமாய்ப் பேச சந்தர்ப்பம் இடம் கொடுக்காததும் ஒரு விதத்தில் நல்லதுக்கே என்றிருந்தது. அதிகம் பேசினால் உளறிக் கொட்ட வாய்ப்பிருக்கிறது. ‘வில் யூ மேரி மீ?’ என்று கேள்வி கேட்ட அந்த அழகான கார்டை எடுத்துக் கையெழுத்திடப் போனான். பிரதீப் திரும்பி வருவது தெரிந்ததும் அருகிலிருந்த ஜனனி வாரப் பத்திரிகைக்குள் அவசரமாய் அதை மறைத்தான்.

"கிளம்புடா, டைம் ஆச்சு" என்று வந்த வாக்கில் துரிதப்படுத்திக் கொண்டே பிரதீப் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு கதவருகே நின்றான். ஹரி வேறு வழியில்லாமல் கையோடு ஜனனியையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
கதவை இழுத்துச் சாத்திய போது, அவனது காதலைச் சொல்லவிருந்த அந்த கார்டு பத்திரிகையிலிருந்து நழுவி விழுந்து பரிதாபமாய்க் கதறியது அவனுக்குக் கேட்டிருக்கச் சாத்தியமில்லை.

அவசரமாய் புவனாவின் அறைக் கதவைத் தட்டி, "கிளம்பறேன்" என்றான் கனத்த மனதுடன். உரிமையோடு அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்ப வேண்டும் என்றுதானிருக்கிறது. சூழல் எதிராக இருக்கிறதே!
ஜனனியை அவளிடம் தயக்கமாய் நீட்டி, "ஹேவ் அ லுக்" என்றுவிட்டு விருட்டென கிளம்பியவனைக் குழப்பமாய்ப் பார்த்தாள் புவனா.

அவன் காரிலேறும் வரை ஜன்னலோரம் நின்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பத்திரிகையைப் பிரித்தாள். உள்ளே எதேனும் கடிதம் இருக்கிறதாவென்று தேடி ஏமாந்து போனவள் பக்கம் பக்கமாய்ப் புரட்டி அதில் குறிப்பு ஏதேனும் எழுதி இருக்கிறானாவென்று ஆராய ஆரம்பித்தாள்.

அப்படியும் ஏதுமிலாமல் போக எதற்காக அதைக் கொடுத்தான் எனப்புரியாமல் குழம்பித் தவித்தாள். ‘ஒருவேளை இதில் எதையாவது நான் படிக்க வேண்டுமென்று விரும்பியிருப்பானோ?’

மறுபடியும் இதழைப்பிரித்து ஒன்றுவிடாமல் வாசித்துக் கொண்டு வர அவன் எதற்காக அதைக் கொடுத்துவிட்டுப் போனான் என்று அவளுக்குத் துல்லியமாய்ப் புரிந்தது. அந்த செய்தியிலிருந்து விடுபடுவது அவளுக்கு அவ்வளவு எளிதாக இல்லை.
ஹரிக்கும் ரேஷ்மிக்கும் ஏற்பட்டிருக்கும் நட்பைப் பற்றி நாலு பக்கத்துக்கு அலசிருந்த கட்டுரையிலிருந்த புகைப்படத்தை வெறித்துக் கொண்டெ ‘ஹரி போன்ற ஒரு மனிதனிடம் வேறு என்ன எதிர்பார்த்திருக்க முடியும்!’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டாள் புவனா.

(தொடரும்)


‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ முழு நாவலை…
1. மின்னூலாகப் பெற :
2. அச்சு நூலாகப் பெற (இந்தியாவிற்குள் மட்டும் அனுப்பப்படும்) :

About The Author