இனிப்பான வாழ்விற்குக் கசப்பே வா!

கசப்பான உணவுகளைச் சாப்பிடும்போது இனி முகம் சுளிக்க வேண்டாம்! அவை சுவாச நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றனவாம்!

அமெரிக்காவின் மாசசூட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் கசப்பான உணவுப்பொருட்கள் ஆஸ்துமா தாக்குதலையும் மற்ற நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்களையும் சரி செய்கின்றன என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

மென்மையான சுவாச அமைப்பின் தசைச் செல்களுடைய சுருக்கத்தின் காரணமாக இந்த நோய்கள் ஏற்படுகின்றன. மூச்சுக் குழாய்கள் குறுகிவிடுவதால் மூச்சு விடுதல் கடினமாகிறது. பொதுவாக, நுரையீரலின் மூச்சுக்குழாய்களை விரிவாக்கும் ப்ரான்கோ டைலேட்டர்ஸ் போன்ற மருத்துவச் சாதனங்களால் இதைக் குணப்படுத்துவார்கள். இந்தச் சாதனங்கள் சில சமயங்களில் முழுப் பலனைத் தராததோடு இரத்தக் கொதிப்பு, அசாதாரண மூச்சு விடுதல் போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

அண்மையில் உயிரியல் ஆய்வாளர்கள், நாக்கில் உள்ள உணவின் ருசியைத் தடுக்கிற சில வேதிப் பொருட்கள் மூச்சுக் குழாய்களின் மெல்லிய செல்களிலும் தென்படுவதைக் கண்டார்கள். ஆகவே, இந்தப் புரதப்பொருட்கள் மூச்சு சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் பங்கு வகிக்கும் என்று நம்பினார்கள். சுவாச அமைப்பில் காற்றின் இயக்கத்தை ஆய்வு செய்தார்கள். இதற்காக குளோரோ குவீன் டினோடோனியம் போன்ற கடுமையான கசப்பு வேதிப்பொருட்களை ஆஸ்துமா போன்ற நோய்களில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத எலிகள், மனிதர்கள் மீது ஆய்வு செய்தார்கள். அப்போது, இவை மூச்சுக்குழாய்களை விரிவாக்குகின்றன என்று கண்டறிந்தார்கள். இந்த வேதிக் கலவைகள் மூச்சுக்குழாயின் ஓட்டத்தைத் தடை செய்யும் கால்சியத்தைத் தடுத்து சுவாசத்தை எளிதாக்குகிறது.

இந்த ஆய்வில் பங்கு கொண்ட ஆய்வாளர்களுள் ஒருவரான மாசசூட்ஸ் நுண்ணிய உயிரியல் பிரிவுப் பேரரசிரியர் ரோங்கு ஜோகே என்பவர், "புதிதாக நாம் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலமாக இன்னும் சக்தி வாய்ந்த கசப்பு வேதிப்பொருட்களைக் கண்டுபிடித்து ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருத்துவரீதியாகத் தீர்வு காணமுடியும்" என்று கூறுகிறார்.

ஆயுர்வேத மருத்துவமுறையின்படி, கசப்பு உணவுகள் ஆஸ்துமாவைக் குணப்படுத்தப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாகற்காயின் விதைகள் ஆஸ்துமாவைக் குணப்படுத்த ஒடிசாவில் பயன்படுத்தப்படுவதாகத் தோட்டக்கலைப் பரிசோதனைகளின் ஆய்வாளரான திரு.பாரதி கூறுகிறார்.

உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி, இருபத்தி மூன்று கோடியே ஐம்பது இலட்சம் பேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, குழந்தைகள் பலர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வாமை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல இந்த ஆஸ்துமா நோய்க்குக் காரணம் என்று கூறும் மதுரை அப்பல்லோ மருத்துவ மையத்தின் மூத்த மருத்துவ ஆலோசகர் பழனியப்பன், கசப்பான உணவுகளைக் குறைவாக சாப்பிடுவதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்று குறிப்பிடுகிறார்.

எனவே, கசப்பான உணவுகளை இனி கை நீட்டி வரவேற்போம்!

About The Author