இயற்கை உலகம் – 04

பறவைகள் நீருக்குள் நீந்துவது:

சில பறவைகள் நீரின் மேற்பரப்பிலும் நீருக்குள்ளும் நீந்தக்கூடிய திறன் வாய்ந்தவை. தண்ணீருக்குள் நீந்தக்கூடிய பெரும்பாலான பறவைகள் மேற்பரப்பிலிருந்து நீருக்குள் தலைகீழாகப் பாய்ந்து சென்று நீந்தக்கூடியவை. இவை தலையைக் கீழ்ப்புறம் செலுத்தி தண்ணீருக்குள் சென்று நீந்தும். மீன்கொத்திப் (kingfisher) பறவைகள் போன்ற மீன் உண்ணும் பறவைகள் மிக உயரத்திலிருந்து தண்ணீருக்குள் பாய்ந்து செல்லக்கூடியவை. அவை நீந்தாமல் தண்ணீர்ப் பரப்பின் மேலும் கீழும் அலைபாய்ந்து மேலே பறந்து சென்றுவிடும். மேலும் சில பறவைகள் தேவையான அளவு காற்றைத் தமது இறக்கைகளுள் அடக்கிக்கொண்டு தேவையான அளவு ஆழத்தில் நீந்திச் செல்லும். இப்பறவைகள், சிறிய அளவு காற்றை மெதுவாக வெளிப்படுத்தி, நீருள் வேண்டுமளவு ஆழத்தில் மூழ்கியவாறு, தமது தலைப்பகுதியை தண்ணீரின் மேற்பரப்பில் பெரிஸ்கோப் (periscope) கருவியைப் போன்று வெளிப்படுத்தியவாறு நீந்திச் செல்லும் ஆற்றல் பெற்றவை; இதனால் எதிரிகள் தம்மை அறியாதவாறு அதே நேரத்தில் தாம் அவற்றைக் கண்டறிந்து நீந்திச் செல்லும்.

படை எறும்புகள் (army ants) :


படை எறும்புகள் தீவிரமாகப் போரிடும் குணம் கொண்டவை. இவ்வகை எறும்புகள் குழுக்களாகத் தரையில் ஊர்ந்து செல்லும்; மேலும் மண்ணுக்கு அடியில் உள்ள பள்ளங்களிலும் ஊர்ந்து செல்லக்கூடியவை இவை. படை எறும்புகளுக்கு, பிற புழு பூச்சிகள், சிலந்தி போன்றவை இரையாகும். சில நேரங்களில் இவ்வகை எறும்புகள் பெரிய விலங்குகளையும் கூட, அவை தப்பிக்க முடியாத நிலையில், கொன்று தின்னக் கூடியவை.

படை எறும்புக் குழுக்களில் பத்தாயிரம் முதல் பல லட்சம் எறும்புகள் வரை அடங்கியிருக்கும். தரைக்கு மேல் இருக்கும் இவ்வெறும்புகள் கூடுகள் எதையும் கட்டுவதில்லை. அவை ஊர்ந்து செல்லாமல் நிலையாக இருக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டியவாறு பெரும் அளவிலான குழுவாக அமைந்திருப்பது உண்டு. மரக்கிளைகள், மரப் பொந்துகள் அல்லது வசதியான இடங்களில் இவை குழுவாக இணைந்திருக்கும். இராணி எறும்பும் அதன் குழுவும் ஒன்றிணைந்து கூடு போல் சேர்ந்திருக்கும்.

சிலவகை படை எறும்புகள் சில வாரங்கள் வரை தொடர்ந்து வேட்டையாடி, அடுத்த சில வாரங்கள் ஓய்வாக இருப்பதுண்டு. இவை வேட்டைக் காலத்தின்போது ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இடங்களில் கூடு கட்டி வாழும். ஓய்வுக் காலத்தின்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்; அப்போது இராணி எறும்பு ஆயிரக்கணக்கில் முட்டைகளை இடும்.

About The Author