இயற்கை உலகம் (06)

இரத்தக் காட்டேரி வௌவால் (Vampire Bat) :

மைய அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் வெப்பப் பகுதிகளில் உள்ள பல்வேறு வகைப்பட்ட குறிப்பிட்ட சில வௌவால்கள் இரத்தக் காட்டேரி வௌவால்கள் என அழைக்கப்படுகின்றன; இவை குதிரைகள், கால்நடைகள், பறவைகள் மற்றும் வெப்ப இரத்தம் கொண்ட விலங்குகள் ஆகியவற்றைத் தாக்கி அவற்றின் இரத்தத்தைக் குடிக்கும். இது 8 செ.மீ. நீளம் உள்ள சிகப்பு-பழுப்பு கலந்த நிறத்திலான ஓர் உயிரினம். இது மிகவும் கூர்மையான, முக்கோண வடிவம் கொண்ட முன்பற்களைக் கொண்டுள்ளது; இப்பற்கள் கத்தி போல் வெட்டக்கூடியவை. இதன் உணவுக்குழல் (esophagus) மிகவும் சிறியது, குறுகலானது மற்றும் நீர்மப் பொருளை மட்டுமே அனுமதிக்கக் கூடியது. இப்பாலூட்டி விலங்குகளின் கொடூரத் தன்மை பற்றிய பல புதிர்க் கதைகள் உள்ளன. இதன் பெயரிலுள்ள இரத்தக் காட்டேரி (vampire) என்பது மனித உயிர்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு கற்பனை உயிரினத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும்.

வௌவால் உயிரினங்கள் கூட்டங்கூட்டமாய் ஆயிரக் கணக்கில் ஒன்றிணைந்து வாழ்பவை. வௌவால்களில் பெரும்பாலானவை பகல் பொழுதைத் தூங்கியே கழிக்கும்.

ஒட்டகத்தின் முதுகில் உள்ள தசை முண்டுப் (hump) பகுதி :

ஒட்டகத்தைப் “பாலைவனக் கப்பல் (the ship of the desert)” என அழைப்பர்; இது மிகச் சரியான பெயர் எனக் கூறலாம். தண்ணீரில் மிதந்து செல்லும் போது உண்டாகக் கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஒரு கப்பல் உருவாக்கப்படுவது போன்றே, பாலை நிலத்தில் பயணம் செய்யும் ஒட்டகம் உயிர்வாழவும், தனது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையிலும் அதன் உடற்பகுதி அமைந்துள்ளது. உணவும் நீரும் இன்றி பிற உயிரினங்கள் நீண்ட நாள் உயிர் வாழ இயல்வதில்லை; ஆனால் நீரையும் உணவையும் உடன் எடுத்துச் செல்வதால் அவற்றைக் கொண்டு ஒட்டகம் நீண்ட நாட்கள் உயிர் வாழும். பாலைவனத்தில் பயணத்தைத் தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்னர் ஒட்டகம் உண்பதையும் நீர் அருந்துவதையும் தவிரப் பிற வேலைகள் எதையும் செய்வதில்லை. பெருமளவுக்கு உணவை உண்டு சுமார் 45 கிலோ வரையிலான கொழுப்பை முதுகிலுள்ள தசை முண்டுப் பகுதியில் ஒட்டகம் சேமித்துக் கொள்கிறது. எனவே அதன் தசை முண்டு கொழுப்பைச் சேமிக்கும் பகுதியாக விளங்குகிறது; இக்கொழுப்பு உணவை, ஒட்டகம், பயணம் செய்யும்போது பயன்படுத்திக் கொள்கிறது. அதன் வயிற்றுப் பகுதியில் குடுவை போன்ற பைகள் அமைந்து அவற்றில் நீரும் சேமித்துக் கொள்ளப்படுகிறது. இத்தகைய வசதிகள் இருப்பதால், ஒட்டகம் நீரும் உணவும் இன்றிப் பல நாட்கள் பாலை நிலத்தில் பயணம் செய்கிறது.

ஒட்டகத்தில் இரு வகைகள் உள்ளன: 1) அராபிய ஒட்டகம் ஒரே தசை முண்டைக் கொண்டிருக்கும். 2) பாக்ட்ரியன் ஒட்டகத்திற்கு இரு தசை முண்டுகள் அமைந்திருக்கும்.

About The Author