இயற்கை உலகம் (08)

பசுவுக்கு நான்கு வயிறுகளா :

பசுவுக்கு உண்மையில் நான்கு வயிறுகள் உள்ளனவா? இவ்வினாவிற்கான விடை ‘இல்லை’ என்பதே ஆகும் – கால்நடைக்கு இருப்பது ஒரே வயிறுதான்; ஆனால் இவ்வயிற்றில் நான்கு அறைகள் (compartments) உள்ளன. இவ்வகை வயிற்றின் மூலம் விழுங்கப்பட்ட உணவு மீண்டும் வாய்க்குக் கொண்டுவரப்பட்டு மெல்லப்படுகிறது (chewed); மெல்லப்பட்ட உணவு பின்னர் மீண்டும் விழுங்கப்படுகிறது; இச்செயலே அசை போடுதல் என்பதாகும். இவ்வகை விலங்கினம் அசைபோடும் விலங்கினம் (ruminant) என அழைக்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட நான்கு அறைகள் ‘அசையும் இரைப்பை (rumen)’, ‘ரெட்டிகுலம் (reticulum)’, ‘இழை இரைப்பை (omasum)’, மற்றும் ‘செரிமான இரைப்பை (abomasum)’ என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அறையிலும் வயிற்றிலுள்ள பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்கள் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகளின் உதவியுடன் உணவு செரிமானமாகிறது. நான்காவது அறையே உண்மையான வயிறு ஆகும். மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் வயிற்றில் நடைபெறுவது போன்ற செரிமானச் செயல்பாடு இங்கேதான் நடைபெறுகின்றது.

ஆடு மாடுகள் போன்றவற்றிற்கு வாயின் மேற்புறத்தில் முன் பற்கள் இருப்பதில்லை. மாறாக இப்பகுதியின் ஈறு தடிமனான அட்டை போன்று அமைந்து உணவை மெல்லுவதற்கு உதவுகிறது.

மான் (deer) தனது கொம்புகளை (antlers) உதிர்ப்பது :

மான், தனது எலும்புகளைத் தலையில் கொம்புகளாகக் கொண்டிருக்கும் ஒரு விலங்கினமாகும். மான் கொம்புகள் அதன் மண்டையோட்டின் (skull) ஒரு பகுதியாக விளங்குகின்றன. கடினமான, எலும்புகளாலான, கூர்முனை கொண்ட மான் கொம்புகள் அபாயமான ஆயுதங்களாகச் செயல்படுபவை. மான்கள் தம் கொம்புகளைக் கொண்டு தம் இணைகளுடன் சண்டையிடவும் குழுவில் தலைமையை நிலை நாட்டவும் செய்கின்றன. மிதமான மற்றும் குளிர்ந்த சூழலில் வாழும் மான்களுக்கு குளிர்காலத்தில் கொம்புகள் உதிர்ந்து இளவேனிற்காலத்தில் புதிய கொம்புகள் முளைக்கத் துவங்கும். வெப்பப் பகுதியில் வாழும் மான்களுக்குக் கொம்புகள் உதிர்வதும் புதிதாக முளைப்பதும் இதற்கு நேர்மாறாக நடைபெறுகின்றன. புதிதாக முளைக்கும் கொம்புகள் மென்மையாகக் கொழுந்து போன்று அமைந்து விரைவாக வளரும். மான் கொம்புகளைச் சுற்றியுள்ள மெல்லிய தோல் போன்ற போர்வையில் இரத்த நாளங்கள் அமைந்திருக்கும்; இவை கொம்புகள் விரைந்து வளர உதவுகின்றன. இந்தத் தோல் போர்வையில் சிறிய மென்மையான முடிக்கற்றை அமைந்து வெல்வெட் (velvet) போர்வை போன்று காட்சியளிக்கும். மான் கொம்பு வளர்ச்சியடைந்து முழுமை பெற்ற பின்னர் இந்த வெல்வெட் அமைப்பு உலர்ந்து போகும்; இந்நிலையில் மான்கள் இவ்வமைப்பைத் தரையில், மரத்தில் அல்லது புல்வெளியில் தேய்த்து கொம்புகளிலிருந்து நீக்கிவிடும்.

எல்லா மான் கொம்புகளிலும் கிளைகளும் அமைந்திருக்கும். ஒவ்வொரு பக்கக் கொம்பும் ஐந்து அல்லது ஆறு கிளைகளைக் கொண்டிருக்கும். சில மான்களின் கொம்புகளில் மிகுதியான கிளைகளும் இருப்பதுண்டு.

About The Author