இரத்தினச் செவ்வி – திருமதி பிரேமா

கடின உழைப்பு, மன உறுதி, பணிவு, உற்சாகம், திறமை என்று இவரிடம் பாராட்ட பல விஷயங்களுண்டு. ‘Prema’s Kitchen’ என்ற பகுதியில் அன்றாட தேவைகளுக்கான சமையல் குறிப்புகளை எழுதி அவற்றை மின் புத்தகமாகத் தானே வடிவமைத்து நிலாச்சாரல் வாசகர்களுக்கு இலவசமாக அளித்திருக்கிறார். ஆன்மீகம், இசை, சினிமா என்று பல களங்களிலும் கட்டுரைகள் எழுதும் வல்லவர். கதைகளும் எழுதியுள்ளார். அவருடைய அனைத்து படைப்புகளையும் காண இங்கே சொடுக்கவும்.

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Prema

நிலாச்சாரலுக்காக நேரம் ஒதுக்கி விளக்கமாக பதில் அளித்து இரத்தினச்செவ்வியைச் சிறப்பித்தமைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி

Prema..1. உங்கள் கை மணம் பற்றி எப்போழுது அறிந்தீர்கள்?

சுவையான ஆரோக்கியமான உணவு ஒவ்வொருவரின் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி எனலாம். தாய் வழி,பாட்டி வழி என்று சுவை அரும்புகளுக்கு உயிரூட்டும் கலை இயல்பாக அமைந்ததாகவும் இருக்கலாம். மருத்துவர்களுக்கு கைராசி என்று சொல்வது போல் கையளவு, கண்ணளவு என்று உப்பும், உறைப்பும் அளவாக சேர்த்து பக்குவமாக தயாரித்து பழகிய அனுபவமும், ஆர்வமும் கைமணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

2. நீங்கள் குறிப்பு கூறிய உணவு வகைகளை நீங்கள் முயன்றதுண்டா?எ-டு கோதுமை காஃபி?

பெரும்பாலான குறிப்புக்களை நம் தினசரி வாழ்க்கையில் செய்து சுவைத்து மனதிற்கு பொருந்திய பிறகே நான் அனுப்பியுள்ளேன். நான் தொகுத்த E-Book லும் முழுக்க முழுக்க அன்றாட நடை முறை உணவு வகைகளே இடம் பெற்றன.கோதுமை காபி போன்றவை ஆரோக்கியத்தை நினைவில் வைத்துக் கொண்டு தேவையான பொழுது பருகியதுண்டு. இங்கு ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன் இந்த எழுபத்து இரண்டிலும் காபியை ஒரு நாளும் நான் சுவைத்ததில்லை . தினம் ஒரு முறை தேநீர் அருந்தும் பழக்கம் மாத்திரம் உண்டு.

3. உங்களுக்கு பிடித்த சமையல் எது ? ஏன்?

தமிழ் நாட்டில் பிறந்த எனக்கு இட்லியும் , தோசையும் , எண்ணெய் குறைவாகவும் , காய்கறிகள் நிறைவாகவும் சேர்க்கும் பொறியல், துவையல், குழம்பு வகைகள் அனைத்தும் விருப்பமே. கனி வகைகளும் பிடிக்கும். மிதமான ஆகாரமும், வயதிற்கேற்ற உடல் பயிற்சியும் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக வைத்திருப்பதும் உடல் நலம் காக்கும். மக்கள் அனைவரும் அறுசுவைகளையும் சிறு வயது முதல் உண்ணப் பழக வேண்டும். கொத்துமல்லி ,புதினா, கறிவேப்பிலை கீரை வகைகள் நாம் அனைவரும் வாரம் இருமுறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். துவையல் செய்யும் பொழுது பச்சையாக அரைக்கும் புதினா,கொத்துமல்லி சட்னி சுவைக்கு சுவை. வைட்டமின்களும் அழியாது.

4. உலக அளவில் பரவியுள்ள உணவு விழிப்புணர்வு நம் சமுதாயத்தினருக்கு பொருந்துமா?

மக்கள் எல்லோரும் உலகில் எப்பகுதியில் வாழ்பவரென்றாலும் உணர்வுபூர்வமாக அனைவரும் ஒன்றே.இன்று இளைய சமுதாயத்தினரிடையே மிகவும் அதிகமாக இந்த விழிப்புணர்வு காணப் படுகிறது. மாமிச உணவை தவிர்த்து சாத்விக உணவிற்கு மாறி வருவது வரவேற்கத் தக்க மாற்றமே.

5. மரபு சார்ந்த உணவு முறையில் தான் எல்லா ஊட்டச்சத்துக்களும் சமச்சீரான அளவில் உள்ளன என்று ஆய்வுகள் கூறுவது பற்றி?

இந்தக்கூற்று உண்மைதான்.ஆனால் மரபு சார்ந்த உணவு என்பது உலகின் பல வேறு பகுதிகளில் வசிக்கும் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறும், பழக்க வழக்கங்களுக்கேற்பவும் மாறுபடுவது எல்லோரும் அறிந்த ஒன்று. ஜப்பானில் கறிகாய்களை அரை வேக்காட்டில் உண்பார்கள். சூப்பில் பயன்படுத்தப்படும் ‘அஜினமோட்டொ’ என்னும் உப்பு பற்றி வேறு பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒவ்வொருவர் உணவுப்பழக்கங்களுக்கேற்ற சரிவிகித உணவு அவரவர்களுக்கு ஏற்றது.

6. வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலை பெற்ற "காலத்தை வென்ற பழமொழிகளை" மீண்டும் தொடர்வீர்களா?

‘காலத்தை வென்ற பொன் மொழிகள்’ உலக சரித்திரத்தில் தம் சுவடுகளை பதித்த பிரபலங்களின் வாழ்க்கைக் கடலில் முழ்கி எடுத்த நன்முத்துக்கள் ஆகும். வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் முயலலாம்.

7. நளபாகத்தில் உங்கள் குரு யார்? நீங்கள் குருவை மிஞ்சியவரா?

உப்பும், உறைப்புமாக சுவையான சமையலைச் செய்த தாயாரை என் குரு என்று கூறலாம். இயல்பாக அமைந்த ஆர்வத்தினாலும் , கணிணி, புத்தகங்கள் வாயிலாகவும் பல் வேறு பட்ட செய்முறைகளை செய்து அபிவிருத்தி செய்து கொண்டிருப்பது உண்மை.

8. உணவு விழிப்புணர்வு பெருகி வரும் இந்நாளில் ஜங்க் ஃபுட் கலாசாரமும் பெருகியுள்ளதே ஏன்?

"ஒருநாள் உணவை ஏலென்றால் ஏலாய் இரு நாளைக்கு ஒழியென்றால் ஒழியாய்
இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது"

என்று ஔவை பிராட்டியின் கூற்றை இங்கு நினைவு கொள்ளவேண்டும். உயர் கல்வியின் நிமித்தம் கடல் கடந்தும் செல்ல வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். மாறி வரும் சூழலுக்கேற்ப வேலை நிமித்தம் செல்பவர்களும், வெளி நாடுகளில் வேலைப் பளு காரணமாக வேறு வழியின்றி பசியாற்றிக் கொள்ள ஜங்க் ஃபுட்டை சரணடைகிறார்கள் என்பதே உண்மை.

9. உங்கள் சமையல் அறையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பற்றி?

எங்கள் வீட்டில் ஒரு கிருகப்பிரவேசத்திற்காக விருந்திற்கு சமைத்து சமையற்காரர்கள் விட்டுச் சென்ற பொருட்களில் அரிசி நொய்இருந்தது. நான் அடிக்கடி தயிர் மிகுந்தால் காஞ்சீபுரம் இட்லி செய்வது வழக்கம். இரண்டிற்கு ஒன்று என்ற விகிதத்தில் அரிசி ரவையுடன் உளுத்த மாவை சேர்த்து இதர பொருட்களையும் உப்பையும் சேர்த்து முன் தினம் கலந்து வைத்து மறு நாள் செய்வது வழக்கம்.மறு நாள் காலை தட்டு வைத்துக் கொண்டு அனைவரும் காத்திருக்கையில் இட்லிகளை பரிமாறுகையில் தான் உப்பை அரிசி நொய் என்று தவறுதலாக கலந்து வைத்த வைபவம் தெரிந்தது. என்னதான் ஜகஜ்ஜால வித்தை செய்தும் பலனின்றி மாவை வெளியே கொட்டியதை நினைத்தால் இப்பொழுது சிரிப்பு வருகிறது. ஒவ்வொருவரின் சமையலறையிலும் இது போன்று ஏதாவதொரு நிகழ்வு நிகழாமல் இருக்காது.

10. புதிதாக சமையல் செய்பவர்களுக்கு நீங்கள் தர விரும்பும் அறிவுரை என்ன?

பொறுமையும், ஆர்வமும் இருந்தால் எதையும் எளிதாகக் கற்கலாம். சமைப்பது ஒரு கலை. தோசை வார்ப்பது ஒரு கலை. தோசையில் பச்சரிசி தோசை, க்ரிஸ்ப் தோசை, காஞ்சீபுரம் தோசை, செட் தோசை, கறுப்பு உளுந்து தோசை, ஊத்தப்பம் என்றும் இட்லியில் இட்லியைத் தவிர குஷ்பு இட்லி, காஞ்சீபுரம் இட்லி , ரவை இட்லி, ஜவ்வரிசி இட்லி, சேமியா இட்லி என்று வகை வகைகளாக செய்து அசத்தலாம். சமையலறையை சுத்தமாக வைப்பது இன்னும் சிறப்பாக ஒவ்வொருவரும் கற்க வேண்டிய கலை.பெருகி வரும் குக்கர் , மிக்சி, copper bottom vessels, non stick சமையலறை சாதனங்கள் சமைப்பதை எளிமையாக்கி இருந்தாலும் ஒவ்வொருவரும் சமைக்கும் பொருட்களையும் உபயோக்கும் சாமான்களையும் தினமும் கழுவி துடைத்து உரிய இடத்தில் வைத்து உபயோகிக்கும் ஒரு ஒழுங்கு முறையை கடை பிடிக்க வேண்டும். பொருளாதார ¡£தியாக ஆணுக்கு தோள் கொடுக்க பெண்ணும் முன் வரும் இந்நாளில், வீட்டில் சுகாதாரமாக பரிவுடனும், பாசத்துடனும் தயாரிக்கும் வீட்டு உணவு விரும்பும் பக்ஷத்தில் ஆண்களும் பெண்களுக்கு உதவும் விதத்தில் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் முறையில் அமைந்தால் இல்லறம் நல்லறமாக விளங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டிற்கு வாங்கும் பொருட்களை தேவைக்கேற்ப சிக்கனமாக வாங்கி வீணாக்காமல் பக்குவமாக பயன் படுத்த வேண்டும்.

11. உங்கள் எழுத்து ஆர்வம் பற்றி கூற முடியுமா?

"நல்லதோர் வீணை செய்து நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ" என்று மகாகவி பாரதியார் சொல்லி வைத்தார். நடை முறை வாழ்க்கையில் கணவன் மனைவி, குடும்பம் என்ற வாழ்க்கையில் பெண்ணின் பங்கே அதிகம். விட்டுக் கொடுத்து இல்லறத்தை நல்லறமாக்குபவள் நல்ல பெண்மணியே. நல்ல விஷயங்களை படித்து அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமுமிருந்த எனக்கு நான் படித்த கல்வியும், கற்ற கணிணியும், விஷியின் அழகியும், நிலா அவர்கள் கொடுத்த ஊக்க மருந்தும் என் எழுத்திற்கு உந்துகோலாக அமைந்தன எனலாம்.

12. கை மணம் என்பது வழி வழி வருவதா? அல்லது பயிற்சியில் பெறுவதா?

கை மணம் வழி வழி வருவது என்பது ஓரளவிற்கு உண்மை என்றாலும் ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் தாம் கையாளும் துறையில் தேர்ந்து விளங்கலாம். தமக்கு உரிய துறை என்று தேர்ந்தெடுக்கையில் தம் மனதிற்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து விடா முயற்சியுடனும், ஊக்கத்துடனும் தொடர வேண்டும்.

13. நிலாச்சாரலில் கை மணத்தில் புதுமையாக ஏதேனும் செய்யும் திட்டமுள்ளதா?

அடுத்த தலை முறைக்கு ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் சில குறிப்புக்களை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

14. உணவில் வெண்டைக்காய் சேர்ப்பதற்கும், கணிதத்தில் மேதை ஆவதிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

‘வல்லான் வகுத்த’ விதி வழியே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகிறது. கணித மேதை ராமானுஜமும் சகுந்தலா தேவியும் வெண்டைக்காய் சாப்பிட்டு மேதைகளாகத் திகழ்ந்ததற்கு ஆதார பூர்வமாக சான்றுகள் இல்லை. ஆராய்ந்து கண்டவரும் இல்லை.’காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை தான் . வெண்டைக்காய் மூளையின் திறனை ஊக்கும் என்பது ஒரு நம்பிக்கை. எவ்வாறாயினும் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் அனைத்து கறிகாய்களையும் சுவையாக சமைத்து பழக்கப்படுத்துவது நல்லதே அல்லவா

15. சமையல் கலையில் வல்லவர்கள் ஆண்களா ? பெண்களா?

இயற்கை ஆணுக்கென்று ¨தைரியம், சாகசம் , உடல் வலு என்று சில குணங்களை அளித்திருப்பதைப் போல் பெண்ணிற்கென்று மென்மை, நளினம், அழகு என்று அளித்திருக்கிறது. செய்தித்தாள் படிக்கும் அப்பாவையும், சமையல் செய்யும் அம்மாவையும் தானே பெரும்பாலும் காண்கிறோம். வீடுகளில் சமைப்பதில் பெண்கள் சிறந்தவர்கள். பெரும் ஸ்டார் ஹோட்டல்களிலும் தலைமை சமையல் வல்லுனர்களாகத் திகழ்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே. பத்து வயது பெண் குழந்தை சொப்பு வைத்து சமையல் செய்தால் ஆண் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது கண்கூடு. பெண்களுக்கு இயல்பாக அமைந்தது சமையல் திறன்.

About The Author

1 Comment

Comments are closed.