இரத்தினச் செவ்வி – ஷங்கரநாராயணன்

தற்கால தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள திரு எஸ். ஷங்கரநாராயணன் அவர்கள் நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை, மொழிபெயர்ப்பு என்று படைப்பிலக்கியங்கள் பலவற்றிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார். சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்கின்றார். இவர் தமிழக அரசு விருது, அக்னி அட்சர விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது, இலக்கிய வீதி பரிசு என்று பல விருதுகள் பெற்றுள்ளார். இவருடைய படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நூல்கள் தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பாட நூல்களாக இடம் பெற்றுள்ளன. இவருடைய படைப்புகள் சில சின்னத்திரை கண்டிருக்கின்றன.

நியூயார்க் அருங்காட்சியகத்தில் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் மெழுகு உருவத்தின் அருகில் எஸ்.ஷங்கரநாராயணன்.

கருத்துச் செறிவோடு நகைச்சுவையுணர்வு இழையோடும் மொழிநடையினால் நிலாச்சாரல் வாசகர்களைக் கட்டிப் போட்டிருக்கும் திரு.எஸ்.ஷங்கரநாராயணனின் படைப்புகளைக் காண இங்கே சொடுக்கவும்.
https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Shankara_Narayanan

பல்வேறு அலுவல்களுக்கிடையே இரத்தினச் செவ்விக்காக நேரம் ஒதுக்கி விளக்கமாக விடை கூறிய திரு.எஸ்.ஷங்கரநாராயணன் அவர்களுக்கு எங்கள் உள்ளம் நிறைந்த நன்றி.

1. எழுத்து என்பது தவம் என்கிறார்களே உண்மையா?
   எல்லாத்துக்கும் பெரிய வார்த்தைகள் பயன்படுத்துகிறதில் நமக்கு ஒரு சந்தோஷம். தவம், தியானம் இப்படி. எழுத்தின் அடிப்படைப் புள்ளி ஒரு பளீர் அல்லது பரவசம். தவத்தால் தியானத்தால் அது கிடைக்கலாம். அதைவிட ஆழமான இடங்களுக்கும் அது அழைத்துப் போகலாம். எழுத்தின் ஆரம்ப மழைத்துளி ஒரு சிலீர் அனுபவம். அதைவேண்டி காத்திருந்தும் பெறலாம். மரங்கள் மழைக்குக் காத்திருக்கிறதைப் போல. அப்படிக் காத்திருந்தால் அது தவம். சில சமயம் பொழுதின் ஒத்துழைப்பில் தானே அந்தக்கணம் நம்முள் நிகழ்வதும் நடக்கிறது. தவம் செய்து கிடைக்கிற எழுத்து, ஒருவேளை ஆன்மீக எழுத்தாக இருக்கலாம். மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ், என்று கெஞ்சுகிறார்கள். கதை எழுத தவம் செய்ய முடியுமா?

2. பொதுவாக உங்கள் கதைகளில் சமுதாய மரபுகள் ஏளனம் செய்வது போல் காணப்படுகின்றதே..?
    மரபுகள் ஏளனத்துக்குரியவை அல்ல. அது ஒரு சென்டிமெண்ட். தன்னுணர்வு. காலம் காலமாக நாம் அறிந்தும் நம்மில் ஊறியும் வந்த உணர்வுச்சலனம். அவற்றை எள்ளி நகையாட வேண்டியதில்லை. நான் ஏளனம் செய்வதாய் இருந்தால் சடங்குகளை, அவை அதன் தாத்பர்யம் இழந்தும் இன்னும் பேணப் படுகிறபோது வேடிக்கையான சமாச்சாரமாகி விடுகின்றன அவை. சில சடங்குகள் இந்தக் காலத்துக்கு ஒவ்வாமல் உறுத்தும்போதும் அதை களையத் திராணியில்லாமல் கைக்கொள்ளும் அப்பாவி சனங்களை மீட்க வேண்டும். சாதிப் பற்று ஒரு உதாரணம். சாதிகள் இங்கே ஒரு வேலையின் அடையாளமாய் இருந்தது. இப்போதுஅந்தந்த சாதிக்கான வேலை என்று யாரும் முடங்குவதில்லை. ஆகவே சாதிக் கட்டுமானம் கலகலத்து விட்டது. விதவை வெள்ளைச் சேலை கட்டும் சடங்கும் இன்று ஓய்ந்து விட்டது. தானே ஓயாத, காலத்துக்கு ஒவ்வாத சடங்குகளை, புலியை முறமெடுத்து விரட்டிய சங்ககாலப் பெண்ணைப் போல நான் விரட்டுகிறதை நீங்கள் வரவேற்க வேண்டாமா?

3. உங்கள் எழுத்துலக வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கீகாரமாக எதைக் கருதுகிறீர்கள்?
   இதோ இந்தப் பேட்டியைக் கூடச் சொல்லலாம். அங்கீகாரம் எல்லாம் காலப்போக்கில் அமைகிற விஷயம். கிடைக்காமல் போகவும் கூடும்.இதில் அலட்டிக்கொள்ள ஏதும் இல்லை. மற்றபடி ‘மிகப்பெரிய‘ என்றெல்லாம் இல்லை. எல்லாத்தையும் ஒரேமாதிரி அணுகுவது நல்லது.

4. உங்கள் எழுத்துகளின் வெற்றிக்குக் காரணம் கருத்துச்செறிவு / மொழிநடைச்செறிவு.?
   கருத்துச் செறிவு மிக்க மொழிநடை.

5. பதிப்பாசிரியராக உங்கள் அனுபவம்..?
  முன்பு ஆர்வக்கோளாறா என்று தெரியாது. ‘நிஜம்‘ என ஒரு சிற்றிதழ் நடத்தினேன். இரண்டு இதழ்களில் ஒரு பத்திரிகையாசிரியராக எழுத்தாளர்களிடம் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் கேட்டு வாங்கி வெளியிட்டேன். இன்னாரின் மொழிப்புலமை, சிந்தனைப்போக்கு எல்லாம் பார்த்து அதை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துகிறதாக அவர்களுக்கு செயலூக்கம் தந்தேன். படைப்புகளை வாசித்தபின் வெளியிடும் முன் அவர்களோடு விவாதித்தேன். பின்னாளில் அந்த நட்பு வட்டத்தில் திரட்டு நூல்கள் கொண்டுவந்தேன். ஆகாயப்பந்தல், பரிவாரம், யானைச்சாவரி இப்படி. பிறகு ஒருபொருள் பலகதை என்கிற பாணியில் ‘ஜுகல்பந்தி’ சங்கீதக் கதைகளின் திரட்டு. தற்போது உணவு சார்ந்த கதைகள் ‘அமிர்தம்‘ வெளியாகி யுள்ளது. மற்றபடி நான் நெறியாளர். பதிப்பாளர்களுக்கு படைப்புகளை நெறியாள்கை செய்துதருவதை விரும்பிச் செய்கிறேன்.

6. உங்களைப் போன்றோரின் படைப்புகளை இப்போதெல்லாம் சின்னத்திரையில் பார்க்க முடியவில்லையே..?
   முன்பு பார்த்திருக்கிறதா தொனி தெரியும் கேள்வி. ‘இப்போதெல்லாம்‘ என்கிறீர்கள் அல்லவா?… கவாஸ்கர், என நான் இந்தியா டுடேயில் எழுதிய கதை தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அன்றிரவு, என்ற கதை ஒருமணி நேரக் குறும்படமாக தூர்தர்ஷனில் வந்தது. பாலு மகேந்திரா சன் டி.வி.யில் கதைநேரம் செய்தபோது, நான்கு கதைகளைப் பெற்றுக்கொண்டார். அவற்றில் இரண்டு அப்பா, குழந்தை என்ற பெயர்களில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்றன. கவாஸ்கர், மணி ஸ்ரீதர் இயக்கம். அன்றிரவு, ஜேடி-ஜெர்ரி இயக்கம். மற்ற இரு குறும்படங்கள் பாலு மகேந்திரா. நல்ல வாய்ப்புகள், நல்ல இயக்குநர்கள் வந்தால் பயன்படுத்திக் கொள்ளவே செய்கிறேன். நாலைந்து கதைகள் முழுப் பணமும் பெற்றும் இன்னும் குறும்படமாக முழுமைபெறாமல் இருக்கின்றன.

7. எழுத்து நாகரிகம் பற்றி..?
  கேள்வி புரியவில்லை. மனித நாகரிகத்தின் அடையாளமே எழுத்து. எழுத்தில் நாகரிகம் என்பது வாசிப்பவரிடமும் எதிர்பார்க்கலாமா என்று ஒன்று. இனிய உளவாக இன்னாத கூறல், என்றெல்லாம் அடுத்தாளுக்கு அறிவுரை ஏமாற்று வேலை. தன்னெஞ்சறிவது பொய்யற்க, என்றவன் அதே வள்ளுவன்தான். எனக்கு இனியவை சொல், அடுத்தாள்னா மனசாட்சிப்படி பேசு என்று வள்ளுவன் உஷாராய் எழுதுகிறானோ தெரியவில்லை.

8. உயிரோட்டமான மொழிபெயர்ப்பிற்கு சில குறிப்புகள் தாருங்கள்.
   வேற்றூர் வானம் என்கிற எனது சமீபத்திய உலகச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு குறித்து வெ.சா. ஒரு விமரிசனக்கட்டுரை எழுதினார், யுகமாயினி இதழுக்காக. பிற்பாடு அது இணைய இதழ் ‘திண்ணை’யிலும் இடம் பெற்றது. யுகமாயினி அடுத்த இதழில் நான் அதற்கு ஒரு ‘தன்னிலை விளக்கம்‘ சனவரியில் எழுதி அதுவும் ‘திண்ணை‘யில் காணக் கிடைக்கிறது.
மொழிபெயர்க்க எனக் கையில் எடுக்கிற படைப்பை அந்த மொழிபெயர்ப்பாளனே தேர்வு செய்கிறான். அதை மொழிபெயர்க்க அவன் தீர்மானிக்க அவனளவில் நியாயங்கள் அமைகின்றன. எனக்கு மனிதனை உலகளாவிய ஆத்மாவாக வேற்றுமொழிப் படைப்பில் இருந்தும் கூட காட்ட ஆசை. என்ன கேட்டீர்கள்? உயிரோட்டமான மொழிபெயர்ப்பு, என்றீர்கள் உணர்வுக் கேந்திரங்களை அதற்கு சமைதையான நம் வட்டார இயல்புப்படி கைமாற்றலாம் என்றுதான் நான் செய்கிறேன் cathedral சிறுகதையில் ரேமண்ட் கார்வர், Bub. I myself is a scotch folk என்று சொல்கிறபோது, நான் தமிழில் ‘பப்‘ என்ற நட்பு விளிப்பை, “சகல, நானே ஸ்காட்ச் ஆசாமிதான்“ என எழுதுகிறேன். (பெரியவர் வெ.சா. அதைத்தான் “வேணாம், தப்பு” என்கிறார்.)

9. எழுத்துகள் மூலம் எழுத்தாளனுக்குச் சாயம் பூசுவது சரியா?
    கூடாது. காரணம் உங்களால் முடியாது. தன்னெஞ்சைப் பேசும் எழுத்தாளனுக்கு இந்த வலை சிறியது. கபடி கபடி, என்று உங்களை உதறிவிட்டு உப்புக்கோட்டைத் தொட்டுவிடுவான் அவன்.

10. தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து…
     அப்படிக் கேள்வி கேட்கிற நிலையில் இருக்கிறதாவா நினைக்கிறீர்கள். ஒருவேளை நான் எழுத வந்ததால் இந்தக் கேள்வியா தெரியவில்ல. பாரதி மெல்ல தமிழினி சாகும், என்று சொன்னது ஒரு தூக்கக் கலக்கத்தில். அதை கண்டுக்க வேணாம். இல்லாத பேயை நினைத்து பயப்படவும் வேணாம்.

11. வட்டார வழக்குச் சொற்களின் பயன்பாட்டினால் புரிதலில் தவறு நிகழுமா?
     நிச்சயம் நிகழாது. வேற்று மொழிப்படங்களில் கூட உணர்ச்சி கட்டங்கள் விளங்குகிறது அல்லவா? அதைப்போலத்தான் இது. வட்டார வழக்கு என்பது என்ன? நல்ல தமிழ்ச்சொல்லின் சிறு மரூஉ. அதை யூகிக்கலாம். ‘இயலாது’, என்பதை நாங்கள் ‘ஏலாது’ என எழுதுவோம். ‘சொல்ல இயலாது’, என்பதை ‘சொல்லேலாது’, என எழுதுவோம் காதில் உயிர்த்துடிப்பான குரல் கேட்கிறது அல்லவா? அது வேணாமா. ஓவியத்துக்கும் மனுசாளுக்குமான வித்தியாசம் கிடைக்கிறதா இல்லையா? வட்டார வழக்கில் பிரதேசம், அந்தப் பிரதேச மனிதனின் நடை உடை பாவனை வயசு எல்லாம் சொல்லிவிடலாம். ரா…சூ, என்று வரும் நீண்ட குரல் கிராமத்துக் கிழவியுடையது. வெயிலில் கருத்த சருக்கத் தோல். பிளவுஸ் போடாத தேகம். இதெல்லாம் நான் எழுத வேண்டியதில்லை.

12. நிலாச்சாரலும் நீங்களும் பற்றி..?
     நாங்கள் நல்ல நண்பர்கள். எனது ஒரு சிறுகதைத் தொகுதியை, அரசியல் கதைகளின் தொகுப்பாக, நரஸ்துதி காலம், என அவர்கள் ஈபுக் வெளியிட்டார்கள். நிலாஷாப்பில் கிடைக்கிறது அது. வருடத்துக்கொருமுறை சென்னையில் நிலாச்சாரல் நண்பர் வட்டம் என கூடுவார்கள். நானும் அதில் கலந்துகொள்ள எப்பவுமே எனக்கு பிரியம் உண்டு. முன்பெல்லாம் அந்தந்த மாத்ததின் சிறந்த படைப்பு என்று தெரிவு செய்து பரிசுகளும் தந்தார்கள். நான்கூட அதில் பரிசு பெற்றேன். தெரிவு செய்தும் தந்திருக்கிறேன். இன்னும் கருத்து அழுத்தமான படைப்புகள் அதில் வெளிவரலாம் என்பது என் அவா.

13. இலக்கியப்பத்திரிகை, வெகுஜனப்பத்திரிகைகளுக்கிடையே இடைவெளி- ஆரோக்கியமானதா?
    அது வேறெப்படி இருக்கும்? இடைவெளி இருந்தே தீரும். இல்லாவிட்டால் இரண்டுவிதமான பத்திரிகை என்று நீங்கள் கேள்வியே கேட்டிருக்க மாட்டீர்கள். ஆரோக்கிய சமாச்சாரம் அல்ல. நடைமுறை அப்படியே. இரண்டு விதமான பத்திரிகைகள் உலா வருகின்றன. அவ்வளவுதான்.

14. உங்கள் இலக்கியக் கொள்கை பற்றி..?
    எதையோ எதிர்பார்த்து சாயம் பூசுகிறீர்கள் போலிருக்கிறது. இந்த ‘ஹோலி‘ விளையாட்டுக்கு நான் வரவில்லை. எனது இலக்கியக் கொள்கை மனிதனின் உணர்வுக்கும், ஆத்மாவுக்குமான இடையறா விளையாட்டை நான் படைப்பாக்குகிறேன். இதில் இசங்கள் வரும், போகும். அவை செருப்புகள். மனித வாழ்க்கையை நடத்திச் செல்ல அவை உதவும். இசங்களை வைத்துக்கொண்டு மனுசாளை அளவெடுக்கக் கூடாது. செருப்புக்குத் தக்க காலை தேடுவது முடியாது.

15. தமிழ்மொழியில் மிக உன்னதமான படைப்புகள் வெளிவந்தும் அவை சர்வதேச அங்கீகாரத்தை அடையாததற்குக் காரணம் என்ன?
     தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு கொண்டுசெல்வோர், தேவையான அளவு இல்லை. இருந்தால் நானெல்லாம் சர்வதேசம் என்ன, அதைத் தாண்டி எகிறிக் குதித்திருப்பேன். பரவாயில்லை. இப்போது ஒலிம்பிக் கனவில் வீட்டுக்குள் குதித்துப் பழகிக்கொண்டிருக்கிறேன்.
 பேட்டிக்கு நன்றி. நிலாச்சாரல் வாழ்க.

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    >>பாரதி மெல்ல தமிழினி சாகும், என்று சொன்னது ஒரு தூக்கக் கலக்கத்தில்.

Comments are closed.