இராசிபலன்கள் (24-11-2008 முதல் 30-11-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதார நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள். விருந்தினர்களின் வரவால் சிறிய மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். வீடு, நிலம் போன்றவற்றினை புதுப்பித்துக் கட்டுவதற்காகப் போட்ட திட்ங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. விபரீதமான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது. சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும். உடம்பில் வாயு, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் வந்து போகும். தாயின் உடல் நிலையில் இருந்து நோய்கள் குறையக் கூடிய காலமாகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சியும், பொருள் வரத்தும் உண்டாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்திருந்த ஆதரவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக் கூடிய காலமாகும். தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவார்கள். உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் மாறிப் பொருட்செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். சகோதரர்களால் மன நிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மனநிம்மதி ஏற்படும். அரசு வழக்கு விஷயத்தில் சாதகமான தீர்ப்புகள் வந்து சேரும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து காவி வஸ்திரம் தானம் செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். எழுத்துத் துறை, அச்சுத் தொழில்கள், புத்தகம், நோட்டு வியாபாரிகள், வக்கீல்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து உறவுகள் வலுப்பெறும். கூட்டுத் தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயத்தில் சற்று கவனமான நடந்து கொள்ளவும். வீடு, நிலம் போன்றவற்றின் மூலமான புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடையலாம். விவசாயம் சுமாராகக் காணப்படும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பச்சை வஸ்திரம் தானம் செய்யவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளை சற்று தள்ளிப் போடுதல் நல்லதாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிசும், பாராட்டுதல்களையும் பெறுவார்கள். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரக் கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும். குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக் கூடும். நெருப்பு, மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள் மற்றும் காவல் துறையில் பணி ஆற்றுவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். அண்டை அயல் வீட்டுக் காரர்களுடன் கவனமாகப் பழகி வருதல் நல்லது. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர், அம்மன் வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விருந்தினர்களின் வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அரசியல்வாதிகளிடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். அரசு வழக்கு போன்ற வியங்களில் எதிர் பார்த்திருந்த சாதகமான முடிவுகள் வந்து சேரும். தீர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தள்ளிப் போடவும். குழந்தைகளின் உல்லாசப் பயணங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகும். புதிய வீடு நிலம் வாங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறவேற வாய்ப்பு உள்ளது. தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். காதல் விஷயத்தில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும். கண்களில் கவனமுடன் இருக்கவும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து சிகப்பு ஆடை தானம் செய்து வரவும்.

கன்னி:-

கன்னிராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம். பூர்வீகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்று காலதாமதம் ஆகலாம். வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். சகோதர, சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். உடல் நிலையில் மூலம் மற்றும் நீர் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் உதவியால் திருமணம் நடக்கும். நவரத்தினங்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், திருமணத் தகவல் மையங்களை நடத்துவோர்கள் மற்றும் திருமண மண்டபங்கள் வைத்திருப்போர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடிய காலமாகும். உடம்பில் மூளை, நரம்பு ஆகிய உபாதைகள் வந்து போகும். மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம். செய் தொழிலில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது. உற்றார் உறவினர் வருகையால் பணச் செலவுகள் உண்டாகும். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமாகிய விஷயத்தில் சச்சரவுகள் வந்து போகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். மனைவி மற்றும் மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய வீடு, தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளால் கண்டிப்பும், இட மாற்றமும் ஏற்படலாம். திருட்டுப் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும். விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்றாகப் பலிதமாகும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம், பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். தந்தையின் உடல் நலை பாதிப்பால் வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். உடம்பில் கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.

தநுசு:-

தநுசு ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் சில பிரச்சனைகள் வந்து போகும். கமிஷன், தரகு, ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள் மற்றும் மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். கூட்டுத் தொழிலில் பங்காளிகளுடன் காரணமற்ற சிற்சில பிரச்சனைகள் வந்து போகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும், பாராட்டுதல்களையும் பெறுவார்கள். பெண்களால் தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகளும்
பொருள் வரத்தும் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். மஹான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். கண், காதுகளில் கவனம் தேவை.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் மற்றும் காளி வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணமும் வீண் பொருட் செலவுகளும் உண்டாகும். வங்கிகள் மூலம் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து சேரச் சற்று கால தாமதம் ஆகலாம். நெருப்பு, மின்சாரங்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். காய்கரிகள், பழங்கள், இலை, கீரை போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள், மூலிகை மற்றும் மருந்துப்பொருள் வியாபாரிகள் லாபம் அடையலாம். பிள்ளைகளால் பொருட் செலவுகளும், வீண் பிரச்சனைகளும் வந்து போகும். குல தெய்வ வழிபாடு செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சகோதரர்களால் திடீர் தனவரவு உண்டாகும். சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும். அரசு வழக்கு விஷயத்தில் கவனம் தேவை.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். ரேஸ், லாட்டரி மூலமாகப் பணம், பொருள் கிடைக்கலாம். உடம்பில் சீதளம் மற்றும் அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகுவதோடு மன நிம்மதி குறையும். புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கலைத் துறையினர்கள் பரிசும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தந்தை மகன் உறவுகளில் சிறிய பிரச்சனைகள் வந்து போகும். ஹோட்டல், நெருப்பு, கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். அரசு வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். குழந்தைகளால் பொருட் செலவுகள் வந்த போதிலும் அவர்களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உடம்பில் வயிறு, முதுகு போன்ற உபாதைகள் வந்து போகும். பொதுப் பணித்துறை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமம் நடத்துவோர்கள், ஆலயப் பணி புரிபவர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன் தரும் வாரமாகும். விபரீத எண்ணங்களை நினைத்து மன நிம்மதி இழக்காதிருங்கள். காதல் விஷயங்களில் அநுகூலமான செய்திகள் வநது சேரும். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ் சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.

About The Author

1 Comment

  1. balchandhar

    ஊஙல் கனிப்பு மிகவும் சரியாக எனக்கு உல்லது

Comments are closed.