இராசிபலன்கள் (29-4-2013 முதல் 5-5-2013 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பிறருக்காக உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். எழுதுபொருள் வியாபாரிகள், வங்கிப் பணிபுரியும் எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து ஓரளவு மகிழ்ச்சி அடையலாம். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாடுகளுக்குச் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வழக்குகளில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் ஏமாற்றம் அடைய வேண்டாம்! தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க முயற்சிப்பீர்கள். எடுத்துக் கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் பேரில் செய்து முடிப்பீர்கள். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நிம்மதி இன்மை காரணமாகத் தூக்கமின்மையும், உணவருந்துதலில் தாமதமும் ஏற்படும். ஆனால், குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து நிம்மதி ஏற்படும். அதே நேரம், நண்பர்கள், உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் பொருட்செலவுகளும் நிம்மதிக் குறைவும் உண்டாகலாம். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. பலசரக்கு, நெருப்பு, மின்சாரம் தொடர்பான துறைகளைச் சார்ந்தவர்கள், கணினிப்பொருள் வியாபாரிகள், இணையத்தளம் நடத்துபவர்கள், எரிவாயு நிறுவனம், வெல்டிங் தொழிற்சாலை போன்றவற்றில் பணிபுரிபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைய வாய்ப்பு உள்ளது. உயரமான இடங்களில் மிகுந்த கவனத்துடன் வேலை செய்வது நல்லது! வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கொடுத்து ஏமாற வேண்டாம்! தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும். அண்டை, அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது! புதிய வீடு, தொழிற்சாலைகள் ஆகியவற்றை இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பூர்விகமான இடங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைத்தாலும் சில பிரச்சினைகள் வரும். ஆனால், மிகவும் முயன்று சரி செய்து விடுவீர்கள்.

இராசியான எண் :- 1.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- கிழக்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் பண உதவியும் நிம்மதியும் உண்டாகும். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றுக்காக எதிர்பார்த்திருந்த வங்கிப் பண உதவிகள் கிடைக்கும். நீண்ட பயணங்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதைத் தவிருங்கள்! புதிய கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லதாகும். அரசியல்வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள்! விபரீதமான எண்ணங்களை நினைத்து வீண் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்! குலதெய்வ வழிபாடு செய்து வர எடுத்த முயற்சிகள் நிறைவேறும். பிரிந்து போன கணவன் – மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக் கூடிய காலமாகும். காவல் துறை, ராணுவம், மின்சாரத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், உணவகத்தில் பணியாற்றுபவர்கள், மின்சாதனப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அரசுத் துறை சார்ந்த மின் அலுவலகங்களில் பணி செய்பவர்கள், கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழிற்கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள்! வெளிநாடு சம்பந்தமான விசா பிரச்சினைகள் தீருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர் எடுப்பீர்கள். தேவையற்ற புதிய நண்பர்களின் தொடர்புகளால் நிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள். மனைவியின் உடல்நலக் குறைவு காரணமாகப் பொருட்செலவு உண்டாகும். கலைத்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்வோர், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், திரவப் பொருள் வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். நீண்ட பயணங்களைத் தவிர்த்தல் நல்லதாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்! நீண்ட நாட்களாகத் திரும்ப வராத கடன், கொடுத்திருந்த பணம் ஆகியவை பிரச்சினைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பாராத நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 2.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- மேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். எடுத்த காரியங்களைத் தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். தரகு, ஏஜன்சி, கமிஷன் போன்ற தொழில் செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள், பழைய பொருள் வியாபாரிகள், அறிவியல்துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் லாபம் அடைவீர்கள்! கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்! அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லதாகும். நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும். நீண்ட பயணங்கள் மூலமாக எதிர்பார்த்திருந்த காரியங்களில் சில பின்னடைவுகள் ஏற்படும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். வெகு காலமாகத் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் தடை நீங்கி நடைபெறக்கூடிய காலமாகும்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடு.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். மருந்துப் பொருட்கள் விற்பவர்கள், மருத்துவத்துறைப் பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், காய்கறி வியாபாரிகள், மர வியாபாரம் செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள்! புதிய வீடு மாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலமாகும். தென் திசையில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் நிறைவேறும். குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும். பயணத்தில் சம்பந்தம் இல்லாத நபர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிருங்கள்! வங்கிகள், கொடுக்கல் – வாங்கல் சம்பந்தமான அலுவலகங்கள் போன்றவற்றில் பணிபுரிவோருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் பிரச்சினைகளில் வீணாகத் தலையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்! தந்தை – மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும்.

இராசியான எண் :- 5.
இராசியான நிறம் :- பச்சை.
இராசியான திசை :- வடக்கு.
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

துலாம் :-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் வியாபாரிகள்,
பொறியியல்துறை சார்ந்தவர்கள், கமிஷன் தொழில் செய்பவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். நெருப்பு, மின்சாரம் போன்றவற்றில் கவனத்துடன் இருப்பது நல்லது! விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை தீராத நோய்களுக்கு, வெளியூர்ப் பயணங்கள் மூலம் விடை காணுவீர்கள். அரசு வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். புனிதப் பயணம் சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள். விவசாயம் செய்பவர்கள் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவர். வழக்குகளில் முடிவுகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகும். கணவன் – மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காதல் விஷயங்களில் சற்றுக் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். பொதுத் தொண்டுகளில் எச்சரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது. வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண் :- 8.
இராசியான நிறம் :- நீலம்.
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும்.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நிலம், நகைகள் ஆகியவற்றை அடகு வைப்பதால் பணம் வந்து சேரும். கலைத்துறை சார்ந்த பொருட்களை விற்பவர்கள், ஆடம்பர, அலங்காரப் பொருள் வியாபாரிகள், தங்க, வெள்ளி நகை வியாபாரிகள், கமிஷன் தொழில் செய்பவர்கள், வீடு, நில விற்பனையாளர்கள், உணவு விடுதி நடத்துதல், தீயணைப்புத் துறை போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் ஆகியோர் ஆதாயங்களை அடைவர். பிள்ளைகளுக்கு வெகு காலமாகத் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலமாகும். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்கள் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். பயணத்தில் அரசியல்வாதிகள் சிலரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்! ஒரு சிலருக்கு நினைத்த இடத்தில் பணியிட மாற்றங்கள் கிடைக்கும். காதல் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிற்சாலைகளைத் திருத்தி அமைக்கப் போட்ட திட்டங்களில் வெற்றி அடையலாம். மேலதிகாரிகளிடம் கவனத்துடன் நடந்து கொள்வதால் வீண் பிரச்சினைகள் குறையும்.

இராசியான எண் :- 9.
இராசியான நிறம் :- சிகப்பு.
இராசியான திசை :- தெற்கு.
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு.

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கும் கேது நன்மை தரும் கிரகமாகும். பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. அசைவ உணவு வியாபாரிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள், தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த பணியாளர்கள், சாயப் பொடி வியாபாரிகள், துப்புரவுத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்! மனைவியின் உடல்நிலைப் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் போன்றோரின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வாயு, வாதம் போன்ற தொல்லைகள் வந்து போகலாம். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். வெகு காலமாகத் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்குத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள். பங்குத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள்.

இராசியான எண் :- 7.
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தலை தூக்கும். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து நண்பர்களால் பொருளுதவி கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். இரும்பு, மின்சாரம், வேதியியல், அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், எண்ணெய் வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த அலுவலக உதவிப் பணி செய்பவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள்! கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் திருப்தி அடைவீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள்! வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும், பாராட்டுகளும், பண உதவிகளும் கிடைக்கும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருங்கள். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.

இராசியான எண் :- 4.
இராசியான நிறம் :- கருப்பு.
இராசியான திசை :- வடமேற்கு.
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும் அம்மன் ஆலய வழிபாடும்.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உடற்சூடு, மேகம் போன்ற தொல்லைகள் வந்து போகலாம். பூர்விகமான இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக்கூடிய காலமாகும். தந்தையின் உடல்நிலைப் பாதிப்புகளால் பொருட்செலவு ஏற்படலாம். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும். பூஜைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், கணினிப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், பேராசிரியர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், தங்க, வெள்ளி நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். பொதுப் பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில், காரணம் இல்லாத விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் வந்து போகும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். கணவன் – மனைவி உறவுகளில் சற்றுக் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும்.

இராசியான எண் :- 3.
இராசியான நிறம் :- மஞ்சள்.
இராசியான திசை :- வடகிழக்கு.
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். சகோதரர்களால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளும், குழப்பங்களும் வந்து சேரும். புதிய கடன்கள் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகக்கூடும் என்பதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! வீடு, வாகனங்களைப் பழுது பார்க்கும் செலவுகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பணியாட்களால் ஆதாயம் இல்லை. பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். நண்பர்கள், உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் சற்றுக் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பயணத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்! புனிதப் பயணம் சென்று வரப் போட்டிருந்த திட்டங்களில் சில தடைகள் வந்து விலகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும். உடற்சூடு, மேகம் ஆகிய தொல்லைகளும், ஒவ்வாமை போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். பொழுதுபோக்கு விஷயங்களுக்காக வீண் பணச் செலவுகள் ஏற்படலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் பணம் கிடைக்கலாம்.

இராசியான எண் :- 6.
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு.
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

மீண்டும் அடுத்த வாரம்…

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, Tamil Nadu, India.
Phone: 04633-243029.
Mobile: 98425-10578, 98425-29691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author