இறங்குமிடம்

அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன், ‘இவள் ஊருக்குப் புதுசு,’ என்று ஒரு உள்ளுணர்வு மானசிக்கு ஏற்பட்டது. தனது உள்ளுணர்வு குறித்துப் பெரிதாகப் பெருமைப்பட எதுவுமில்லை என்று அனுபவரீதியாக அறிந்திருந்தாலும், இம்முறை தனது கணிப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது. காரணம், அந்தப் பெண்ணின் கண்களில் ஆச்சரியம், அச்சம், பரபரப்பு என்று கணந்தோறும் மாறிமாறித் தென்பட்ட உணர்வுகள், அவள் நகரத்துக்குப் புதியவள் என்று அடையாளம் காட்டியது.

அடிக்கொரு தடவை புடவைத் தலைப்பைச் சரிசெய்தபடி, அவ்வப்போது பின்னுக்குத் திரும்பி, உரசி நிற்கும் எவன் எவனையோ முறைத்தபடி, சில சமயங்களில் குனிந்து ஜன்னல் வழியே கண்களை அகற்றி வேடிக்கை பார்த்தபடி, கண்டக்டர் ‘உள்ளே போங்க…போங்க,’ என்று யாரைச் சொன்னாலும், தன்னையே சொன்னதுபோல இன்னும் சில அங்குலங்கள் நெரிசலில் பிதுங்கி முன்னேறியபடி, புதிதாகச் சென்னைக்கு வருகிற ஒரு பெண்ணின் குணாதிசயங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தினாள். இதேபோல எதற்கு பயப்படுவது, யாருக்குப் பயப்படுவது என்ற குழப்பத்தை, தானும் இங்கு வந்த புதிதில் அனுபவித்ததை மானசியால் சட்டென்று யோசித்துப் பார்க்க முடிந்தது.

இதோ, இப்போது அந்தப் பெண் நகர்ந்து நகர்ந்து மானசியருகிலேயே வந்து நின்று விட்டாள். மிதமான ஒப்பனை, அழகு நிலையத்தின் கத்திரிகளுக்கு அகப்படாத அடர்ந்த புருவங்கள், நீண்ட கூந்தல், கையில் தலா ஒவ்வொரு வளையல், காதுகளில் ஒற்றை முத்துப் பதித்த தோடு, கழுத்தில் சன்னமாய் ஒரு சங்கிலி.. அதுவும் கவரிங் போலிருந்தது. அபரிமிதமாய் வியர்வை – பயந்திருக்கிறாளோ?

இந்தப் பயமும் மானசிக்கு அன்னியமானது அல்ல. இந்த நகரத்துக்குள் நுழைந்தவுடன் உப்புக்காற்றின் பிசுபிசுப்புபோல இந்த பயமும் உடம்பில் ஒட்டிக்கொண்டு இம்சிக்கத் தொடங்கும். ஒவ்வொரு முறை பேருந்தை விட்டு இறங்கியதும், ‘உடனே குளிக்க வேண்டும்,’ என்று யோசிக்கிற அளவுக்கு உடம்பு பரிதவிக்கும். ஆனால், நெரிசலில் தீண்டுகிற கைகளைக் காட்டிலும் வக்கிரம் மிகுந்த கண்களுடன் தினசரிப் புழங்கிப் புழங்கி, ‘இவனுக்கு அவன் மேல்,’ என்று சலிப்பு ஏற்படும். கண்ணைப் பார்த்துப் பேசுகிற ஆண் பெரும்பாலும் குருடனாகவோ, பைத்தியக்காரனாகவோதான் இருப்பான். அபூர்வமாக எப்போதாவது ஒரு சராசரி ஆணின் பார்வை சற்றே வித்தியாசமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், அனுபவம் தந்த கசப்பு காரணமாக, ‘பூனையில் சைவம் ஏது?’ என்று மனது எகத்தாளமாய்க் கேட்கும். எங்கு எந்த ஆடவனுடன் பேச நேர்ந்தாலும், அவனது பார்வையின் இலக்கைப் பார்த்து சட்டென்று அவனது குணச்சித்திரத்தைப் படம்பிடித்துக் கொள்ளத்தோன்றும். நாளடைவில் ‘போடா, பார்த்திட்டுப் போ,’ என்று அலுப்பு ஏற்படும். எத்தனை பேரை முறைப்பது? எத்தனை பேரை மனதுக்குள் திட்டித் தீர்ப்பது?

"இன்னாம்மே, ஒரசுனா ஒன் கற்பு பூடுமா?" என்று மானசியைக் கேட்டிருக்கிறான் ஒருவன்; உத்தமன்! மற்றவனைப் போல ‘ஸாரி, சடன் பிரேக்! ஐ குட் நாட் ஹெல்ப்,’ என்று வழியாமல், துணிச்சலாய் ஒப்புக்கொண்டானே?

ஒரு சீட் காலியானது. படக்கென்று உட்கார்ந்த மானசிக்கு, அடுத்த கணமே அந்தப் பெண்ணை உட்காரச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால், வலித்துக் கொண்டிருந்த கால்கள் ‘வேண்டாம்,’ என்று சொல்லவே, ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினாள். வழி நெடுக ஏதோ ஒரு பேருந்துக்காகக் காத்திருப்பவர்கள்; பெரும்பாலும் பெண்கள்; பெரும்பாலும் தினமும் இம்சைப்படுகிறவர்கள் அல்லது இறங்குகிற வரைக்கும் பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிக்கிறவர்கள். எவளேனும் ஓரிருவர் இறங்கிப்போகும்போது சிரித்துக்கொண்டு போனாலும் போகலாம். அசிங்கத்தோடு சமரசம் செய்து செய்து, அதுவும் சிலருக்கு ஆகாரமாகி விடுகிறது போலும்.

‘ப்ளூ ஸ்டார் இறங்கு,’ என்று கண்டக்டர் குரல் கொடுத்ததும், இன்னும் சில சீட்டுகள் காலியாகின. அந்தப் பெண் மானசிக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தாள். பேச்சுக் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு, வேண்டாம் என்று முடிவு செய்த மானசி மீண்டும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.

"எக்ஸ்கியூஸ் மீ!" அந்தப் பெண் மானசியை அழைத்தாள். "கோல்டன் ஃப்ளாட்ஸ் ஸ்டாப் வந்தா சொல்லுவீங்களா?"

"ஓ.. யெஸ்! ஊருக்குப் புதுசா?"

"ஆமாம்!"

"இன்னும் நிறைய ஸ்டாப் இருக்கு. நான் சொல்றேன்!"

கோல்டன் ஃப்ளாட்ஸ் ஸ்டாப்! முதலில் மானசி அந்தப் பகுதியில் இருந்த ஒரு நிறுவனத்தில்தான் பணிபுரிந்து வந்தாள். நல்ல கம்பெனிதான்; நல்ல சம்பளம்தான்! ஆனால்…

"ரொம்ப கன்ஸர்வேடிவா இருக்கீங்க மானசி! பீ ய ஸ்போர்ட்!"

"போடா பொறம்போக்கு!"

பார்வை, உரசல் எல்லாம் தாண்டி, துணிச்சல் அதிகரித்து, கைகள் வரம்பு மீறிய பிறகும் பொறுமை எதற்கு? அங்கிருந்து விலகி, இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு கம்பெனியில் இன்னொரு வேலை.

"ஸ்ஸ்ஸ்! சென்னை வெயில் ரொம்ப ஜாஸ்தி!" அந்தப் பெண் விசிறிக்கொண்டாள்.

"எல்லாரும் சொல்றதுதான்," சிரித்தாள் மானசி. "பஸ் டிராவல் எப்படியிருக்கு? ஒண்ணும் பிரச்சினை இல்லையே!"

"பரவாயில்லை; எங்க ஊருக்கு சென்னை எவ்வளவோ பெட்டர்!"

அது எந்த ஊர் என்று மானசி கேட்கவில்லை. ஆனால், தற்செயலாக அந்தப் பெண்ணின் கையிலிருந்த உறையைக் கவனித்தாள்; பரிச்சயமானதாய் இருந்தது. மூளைக்குள் பொறிதட்டியதும் திடுக்கிட்டாள்.

"இது… இந்தக் கம்பெனிக்கா போறீங்க?"

"ஆமாம்! இன்னிக்கு ஜாயின் பண்ணறேன்! பி.ஏ. டு எம்.டியா!"

அதே வேலை; அதே கம்பனி; அதே எம்.டி!

மானசி அந்தப் பெண்ணைச் சில கணங்கள் பார்த்துவிட்டு, ஜன்னல் வழியே மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

இன்னும் சில நிமிடங்களில் அந்தப் பெண் இறங்குமிடம் வந்துவிடும் என்பதை நினைக்காமலிருக்க, அவளது கண்கள் குறிக்கோளின்றி வெளியே வெறிக்கத் தொடங்கின.

About The Author

1 Comment

Comments are closed.