இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்: இளங்கோ அடிகள்)

கேள்வி: நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் படைத்த கவிஞரே.. இவ்வளவு அழகான காவியம் படைக்கக் காரணம் என்னவோ?

பதில்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உயர்சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்

கேள்வி: நன்றாகச் சொன்னீர்கள்! எங்கள் நாட்டில் எத்தனையோ அரசியல்வாதிகள் பிழை செய்தும் சுகமாக வாழ்கிறார்கள். அது போகட்டும். அது என்ன கண்ணகியை எடுத்த எடுப்பிலேயே அருந்ததி என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்!

பதில்: போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ

கேள்வி: ஆமாம் அது என்ன? கண்ணகி கல்யாணம் ஐயர் நடத்திய கல்யாணமா?

பதில்: மாலை தாழ் சென்னி வயிரமணித் தூண் அகத்து
நீலவிதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை

கேள்வி: அற்புதம். எங்கள் ஊர் நிருபர்கள் தோற்றுப் போவார்கள். அப்படி அழகாக ரிப்போர்ட் கொடுத்து விட்டீர்கள். ரோகிணி (சகடு) நட்சத்திரத்தில் திருமணமாக்கும் தீயை வலம் வந்து கல்யாணமாக்கும். எங்கள் மக்களுக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லுங்களேன்

பதில்: தெய்வம் தெளிமின், தெளிந்தோர் பேணுமின்

கேள்வி: வயதான பின்னர்தான் சாமி கும்பிட நேரம் கிடைக்கும். கொஞ்சம் ஒத்திப் போடக் கூடாதா?

பதில்: நாளைச் செய்குவம் அறம் எனின் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்:
இது என வரைந்து வாழு நாள் உணர்ந்தோர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை

கேள்வி: உண்மைதான். எப்போது இறப்பு என்பதைத் தெரிந்தோர் இந்த உலகில் இல்லவே இல்லை. ஒரு பாட்டில் தேவாசுரப் போர் 18 ஆண்டும் ராம ராவண யுத்தம் 18 மாதமும், மஹா பாரதப் போர் 18 நாட்களும் செங்குட்டுவன் கனக விஜயன் போர் 18 நழிகை மட்டுமே நடந்ததாக நீங்கள் பாடினீர்களா?

பதில்: செறிகழல் வேந்தன் தென் தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள

கேள்வி: பிரமாதம், பிரமாதம். என்ன இருந்தாலும் இப்படிக் கோபத்தில் மதுரையை கன்ணகி எரித்தது நியாயமா? அனைவரும் இறந்து விட்டார்களா?

பதில்: பார்ப்பார், அறவோர், பசு, பத்தினி, பெண்டிர்,
மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க…..

கேள்வி: ஓகோ, அப்படிப் போகுதா, கதை? ஆமாம் எங்க ஊர் எம்.எஸ். அம்மா ஐ.நா. சபைக்குப் போய் உங்க பாட்டு பாடினாங்களே. அது என்ன பாட்டு?

பதில்: வட வரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே
…………………………………
நடந்தாத ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா! என்னா நாவென்ன நாவே?

கேள்வி: அருமையான பாட்டப்பா. கண்ணகி சிலை வைத்தபோது இலங்கையிலிருந்து கூட ஒரு மன்னர் வந்தாராமே!

பதில்:
அருஞ் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கொட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

கேள்வி: நல்ல வேளை! நீர் இந்த இலங்கை வேந்தன் பெயர் சொன்னதால்தான் எங்களுக்கு உங்கள் காலம் இரண்டாம் நூற்றாண்டு என்றே தெரிந்தது. தமிழ்நாட்டில் பழைய காலத்தில் ஒரு சுனாமி ஏற்பட்டு ஊரெல்லாம் அழிந்து போனது உண்மையா?

பதில்:
வடி வேல் எறிந்த வான் பகை பெறாது
பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கொடும் கொடுங் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி

நன்றி, இளங்கோ ஐயா, 60 நொடிக்குள் 1000 விஷயம் சொல்லிட்டீங்க.

About The Author