இழக்கக் கூடாதது

தன் பாட நோட்டில் தாத்தா வரையும் படத்தை இரசித்தபடி அமர்ந்திருந்தான் விவேக்.

"விவேக்" என்று சரவணன் அழைக்கும் குரல் கேட்டது.

"உங்கப்பா கூப்பிறார்டா.." என்றார் சந்தானம்.

"இருக்கட்டும் தாத்தா..இதைப் பார்த்துட்டுப் போறேன்".

"எங்கே போனான் இவன்?ஸ்கூலுக்கு நேரமாச்சு.ஏய்..விவேக்" சந்தானத்தின் அறைக்குள் வேகமாக வந்தான்.

"இங்கே என்னடா பண்ணறே? மணியாச்சு. எனக்கு ஆபீஸ் போகணும்.கிளம்புடா"

"இல்லேப்பா..அப்புறம் தாத்தாகூட ஸ்கூலுக்குப் போறேன்".

"சீச்சீ,எழுந்திரு.போற வழியில் நான் டிராப் பண்ணிட்டுப் போறேன்".

"போட விவேக்! அப்பா கூப்பிட்டா உடனே போகணும்" என்றார் சந்தானம்.

அரை மனதாக எழுந்து போனான் விவேக்

"ச்சே! இவர் வேறே அவனைக் கெடுத்துக்கிட்டு,ஏற்கெனவே பிடிவாதம்.இன்னும் செல்லம் கொடுத்துக் குட்டிச் சுவராக்கிடுவார்" என்று சரவணன் முனகியபடி போனான்.

சந்தானம் மனசுக்குள் வேதனையுடன் சிரித்துக் கொண்டார்.சரவணன் அவ்ருடைய மூன்றாவது வாரிசு.முதலிரண்டு பேரும் பெண்கள்.அவனைப் படிக்க வைக்கவே அவர் மிகவும் சிரமப்பட்டார்.எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் சொல்லிச் சொல்லிக் காட்டுவான்.

"எனக்கு என்ன செஞ்சீங்க? நல்லாப் படிச்சேன். ஸ்காலர்ஷிப் கிடைச்சது. நானாகவே வேலையும் தேடிக்கிட்டேன். இன்னைக்குச் சொந்தமா வீடுகட்டி நல்லா இருக்கேன். நீங்களா எனக்கு என்ன செஞ்சீங்க..?"என்பான்.

என்ன சொல்ல முடியும்? அவர் அப்போது இருந்த நிலைமையில் தினசரி சாப்பாட்டிற்கே கஷ்டமாக இருந்தது. இரண்டு பெண்களின் திருமணச் செலவைக் கூட அவர் தன்னுடைய சம்பளத்திலேயேதான் அடைக்க வேண்டியிருந்தது. ஓய்வு பெற்ற போது கிடைத்த பணமும் அதற்கே சரியாகப் போய்விட்டது.

தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற மனக்குறை அதிகம்தான் சரவணனுக்கு. இன்று அவனுடன் இருக்கும் போது அடிக்கடி சொல்லிக் காட்டுவான். மனசுக்குள் வருத்தம் வரும். ஒற்றை ஆளாகிப் போன அவருக்கும் மகனை விட்டால் வேறேது போக்கிடம்?

இரவில் தாத்தாவின் அருகிலேயே பேரனும் படுத்துக் கொண்டான்.

"ம்.ம்..அப்புறம் என்ன ..அந்த ஸ்டோரியை சொல்லுங்க தாத்தா"

"மணி பத்தாச்சு.படுக்க வா"

"போடா அப்பா கூப்பிடறார்"

"இந்த அப்பாவுக்கு வேற வேலையே இல்லை.எப்பவும் கத்தல்.எனக்கு அவரைப் பிடிக்கவே இல்லை".

"ஊஹூம், அந்த மாதிரி எல்லாம் சொல்லக்கூடாது .உனக்கு எது நல்லதுன்னு அப்பாவுக்குத்தான் தெரியும்"

விவேக் முகத்தைச் சுளித்தான்.

"அப்பா அம்மாவை எதிர்த்துப் பேசக்கூடாது. மரியாதை தரணும். அவங்க சொல்றதைக் கேட்கணும். அப்பதான் நீ குட்பாய்.

சரியா?" என்றார்.

அவரின் மென்மையான குரலும் கண்களில் தெரிந்த கனிவும் விவேக்கின் இறுக்கமான மனநிலையை மாற்றின. "சரி இப்ப என்ன செய்யணும்"

"கோ டு பெட். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குட்நைட் சொல்லு. நல்லாத் தூங்கு. காலைல என் கூடப் பேசலாம்"

"குட்நைட் தாத்தா"

எழுந்து போனான்.

சரவணன் அலறுவது கேட்டது.

"இங்கே பாரு இவனை பெயிண்ட் பண்றேன்னு சுவரெல்லாம் எதையோ அப்பியிருக்கான். எல்லாம் இவரால வர வம்பு. ஹி ஈஸ் ஸ்பாய்ப்லிங் ஹிம்.."

"ஸாரிப்பா..இப்பவே துடைச்சிடுறேன்.." என்றான் விவேக்.

"ராஸ்கல்,செய்யறதையும் செஞ்சிட்டு இப்ப என்ன ஸாரி?"

"விடேன். குழந்தைதான் தப்புன்னு ஒத்துக்கிறானே" என்றார் மெல்ல சந்தானம் குறுக்கிட்டு. "பேசாதீங்க உங்களாலதான் அவன் கெட்டுப் போறான். எனக்கும் எதுவும் செய்யலே.என் பையனையும் கெடுங்க.."

விவேக் பொறுமையாக ஈரத்துணியால் அழிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அழித்து முடித்ததும் எதிரில் வந்தான்.

"கிளீன் பண்ணிட்டேன்..இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்".

பிஞ்சு மனம், குமுறலை அடக்கிக் கொண்டு நகர்வதை மனசு கனக்க பார்த்தார், திரும்பினார்.

"நீ சொல்றது சரிதான். உனக்கு அப்ப எதுவும் செய்யலே, செய்ய முடியலே. அதை ஈடுகட்டத்தான் இப்ப.." என்று நிறுத்தினார்.

சரவணன் திகைப்புடன் அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

அப்பாமேல பிரியம் காட்டணும்னு உன் பிள்ளைக்குச் சொல்லித் தரேன். ஏன்னா என்னைப் போலவே நீயும் இதை இழந்திடக் கூடாது பாரு.."

சரவணன் சிலையாக நின்றான்.

About The Author

2 Comments

Comments are closed.