உறவுகள் தொடர்கதை – 10

அரவிந்தன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

மனத்தில் நிம்மதி இருந்தால், தரையில் படுத்தாலும் தூக்கம் வரும்; மனம் குழம்பித் தவித்துக்கொண்டிருக்கும்போது, மெத்தை இருந்தும், கட்டில் இருந்தும் தூக்கம் மட்டும் வராது. இப்போது அரவிந்தனும் அந்த நிலையில்தான் இருக்கிறான்.

சூர்யாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காலையில் உற்சாகமாய்க் கண்விழித்தான். இப்போதோ கண்மூடி உறங்க இயலாமல்,"ஏன்தான் இன்று சூர்யா வர நேர்ந்ததோ?" என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

சூர்யா ப்ரியாவைப் பற்றிச் சொல்லத் தொடங்கியபோது "யாரைப் பற்றியோ சொல்லப் போகிறாள்" என்றுதான் கேட்கத் தொடங்கினான் அரவிந்தன். ஆனால் அவள் மகளின் பெயர் ரஞ்சனி என்றதும் ஒரு நொடி திடுக்கிட்டுப் போனான். நெஞ்சுக்குள் அவன் மகளின் நினைவலை ஓடியது.

இருந்தபோதிலும் அந்தக் குழந்தையின் வயதைக் கேட்டான். சூர்யா,"ரஞ்சனி ஜவஹர் வித்யாலயாவில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்" என்று சொன்ன பிறகு, அரவிந்தனின் மனம் இருண்டது. அதன் பிறகு சூர்யா, மலர் பேசிய விவரம் ஏதும் உணர்வுக்கு எட்டவில்லை. சிறிது நேரத்துக்குள் அவர்கள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

ஒருவேளை, சூர்யா சொன்ன ப்ரியா – அந்த சாந்திப்ரியா அவன் மனைவி சாந்தியாக இருந்தால்? அரவிந்தனின் மனம் அலை பாய்ந்தது. சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது. சாந்தி நெல்லையை விட்டுக் கிளம்ப மறுத்ததில்தானே விவாகரத்து எண்ணமே வளர்ந்தது? அப்படியிருக்க, அவள் எப்படி சென்னையில் இருக்கப் போகிறாள்?

வேறு ஏதோ சாந்திப்ரியா, அதேபோல் அவள் மகளுடைய பெயரும் ரஞ்சனி. ஒவ்வொரு காலகட்டத்தில் சில பெயர்களே பெரிதும் வைக்கப்படும். சுஷ்மிதா உலக அழகியான பிறகு எத்தனையோ பேர் தங்கள் குழந்தைகளுக்கு சுஷ்மிதா என்று பெயர் வைத்தார்கள். அதுபோலவே அந்த ரஞ்சனியும் இருக்கலாமே!

எத்தனையோ சமாதானங்கள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், மனத்துக்கு அமைதி கிடைக்கவில்லை. "ஆனால்" என்கிற ஒரு வார்த்தை அவனை விடாமல் குடைந்து கொண்டிருந்தது.

ஆனால், ஒருவேளை, அது அவன் மனைவி சாந்திப்ரியாவாகவே இருந்தால்? மகள் ரஞ்சனியாகவே இருந்துவிட்டால்?

அரவிந்தன் – சாந்திக்கிடையே கருத்து வேறுபாடுகள் மிக அதிகம். அதனால் இருவரும் சேர்ந்து வாழ இயலாமல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்றுவிட்ட காரணத்தால் மட்டுமே சாந்தியை விரோதியாக எண்ண அரவிந்தனின் மனம் இடம் தரவில்லை. ‘தன்னுடைய வாழ்க்கை இப்படியாகி விட்டதே’ என்ற சுய இரக்கமும், ‘என் மகளை என்னிடமிருந்து பிரித்து விட்டாளே’ என்ற கோபமும்தான் அதிகமாக இருந்தது.

சாந்தி ஒரு வருடத்துக்குமேல் உயிரோடு இருக்கப்போவதில்லை என்று சூர்யா சொன்னதை நினைத்தபோது இதயம் கனத்துப்போனது. வேண்டாம்! இது அவனுடைய சாந்தியாக இருக்கவேண்டாம்! அவள் வேறு எங்காவது அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கட்டும் என்று விரும்பினான்.

ஆனால், சாந்தி அவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில், அவன் மகள் ரஞ்சனியின் நிலை? ‘அப்பாவான நான் உயிருடன் இருந்தும் என் மகள் யாருமற்ற அநாதையாக அலைய வேண்டுமா?’

அரவிந்தனுக்குள் இருந்த ரஞ்சனியின் தந்தை கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

குளத்தில் கல்லெறிந்ததைப் போன்று, சாந்தியின் நினைவு அவன் மனத்தில் அவர்கள் பழைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை மீண்டும் மேலே கொண்டு வந்தது.

அரவிந்தனுக்கு முதலில் சாந்தியை பெண்பார்க்கச் சென்றது நினைவில் வந்தது. இருவர் குடும்பத்துக்கும் அப்போதே பிடித்துப்போய் விட்டது. ஒப்புத்தாம்பூலம் மாற்றிக்கொண்டு, நேரடியாகத் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டனர். பெண்பார்க்கச் செல்லும் முன்பே, சாந்தி வீட்டிலிருந்து "திருமணத்திற்குப் பிறகும் பெண் வேலைக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும்" என்று
தகவல் வந்துவிட்டது. அப்போது அரவிந்தனுடைய வேலையிலும் பெரிய வருவாய் ஏதும் இருக்கவில்லை. அதனால் ஒரு குடும்பம் என்றான பிறகு, அதன் செலவுகளுக்கு ஈடு செய்ய இன்னொரு வருவாய் மிக அத்தியாவசியம் என்பதால் அரவிந்தன் மகிழ்ச்சியுடன் அதற்குச் சம்மதித்தான்.

அவர்கள் இல்லற வாழ்க்கையும் இன்பமாகவே நடந்தது. ரஞ்சனி பிறந்த பிறகு, அரவிந்தனுக்கு யோககாலம் தொடங்கியது. அவன் அடுத்த கட்ட பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெற்றான். எல்லாம் ரஞ்சனியின் ராசி என்று குழந்தையைக் கொண்டாடினான்.

ஒவ்வொரு கட்டமாக அரவிந்தன் பணி உயர உயர, அவனுடைய சம்பளமும் கூடத் தொடங்கியது. ரஞ்சனிக்கு மூன்று வயதானபோது, தன் குடும்பம் வசதியான வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் அரவிந்தனுக்கு வரத்தொடங்கியது.

அந்தச் சமயத்தில்தான், ஒருநாள் பேச்சுவாக்கில் சாந்தியிடம் சொன்னான்:

"இப்பல்லாம் நானே கைநிறையச் சம்பாதிக்கிறேனே சாந்தி! இனிமேலும் எதுக்கு நீ வேலைக்குப் போய் கஷ்டப்படணும்? பேசாம வேலையை விட்டுட்டு வீட்டோட இரேன்!"

அரவிந்தனைப் பொறுத்தவரையில், உதவி தேவைப்படும்போது மட்டும் பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணம் உடையவன். இத்தனை காலம் சாந்தியின் சம்பளம் தேவையாக இருந்தது. இனி அந்த நிலை இல்லையே என்று கருதியே அப்படிச் சொன்னான். அப்படிச் சொன்னதில் எந்தத் தவறும் இருப்பதாக அவனுக்குப் படவில்லை; ஆனால் சாந்திக்குப் பட்டது.

"வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்க என்னால முடியாது. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதைப் பேசி முடிச்சாச்சு. நான் வேலைக்குப் போக நீங்க சம்மதிச்சதால தான், நான் நம்ம கல்யாணத்துக்கே சம்மதிச்சேன், தெரியுமா?"

சாந்தி கோபத்தில் படபடக்க, அரவிந்தனுக்கும் கோபம் தொற்றியது.

"முட்டாள்தனமா பேசறே, சாந்தி! நம்ம கல்யாணத்தின்போது என் சம்பளம் என்ன, இப்ப நான் வாங்கற சம்பளம் என்னன்னு உனக்கே தெரியும். அப்ப உன் சம்பளம் நமக்குத் தேவையா இருந்தது. அதனால சம்மதிச்சேன். இப்பதான் அது தேவையில்லையே, இன்னும் எதுக்கு நீ வேலைக்குப் போகணும்?"

"வேலைக்குப் போறது சம்பளத்துக்காக மட்டும்னு நான் நினைக்கலை. வேலைக்குப் போகிறதால ‘நம்ம படிப்பு பயன்படுதே’ன்னு சந்தோஷமா இருக்கு; நம்மாலும் சம்பாதிக்க முடியும்னு தன்னம்பிக்கை இருக்கு; அதுக்கும்மேல ஒரு திருப்தி இருக்கு. சம்பளத்துக்காகவே வேலைக்குப் போகணும்னு நினைக்கிறவங்களுக்கு இதெல்லாம் புரியுமான்னு எனக்குச் சந்தேகமும் இருக்கு."

"வேலைக்குப் போகிற பெண்களுக்கு தன்னம்பிக்கை இருக்கோ இல்லையோ, எக்கச்சக்கமா திமிர் இருக்கு. அதுக்கு இந்த வீட்டிலேயே சாட்சியும் இருக்கு."

அரவிந்தன் கோபத்தோடு வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, விருட்டென்று வெளியே புறப்பட்டான்.

(உறவுகள் தொடரும்……)

About The Author

1 Comment

Comments are closed.