உறவுகள் தொடர்கதை – 15

மறுநாள் அலுவலகத்தில் சாந்தி கல்பனாவிடம் விஷயத்தைக் கூறினாள்.

"இப்பப் போய் வேலையை விடப்போறியா சாந்தி? பிரமோஷன் வரப் போற நேரத்துல யாராவது வேலையை விடறேன்னு சொல்லுவாங்களா? டிரான்ஸ்ஃபர் வேண்டாம்னு அவரைச் சொல்லச் சொல்லிடேன்."

"சொல்லிப் பார்த்தேன், கல்பனா! முடியாதுன்னு ஏதோ காரணம் சொல்ல வந்திட்டு, சொல்லாமலேயே நிறுத்திட்டார். எனக்கு ஒரு வாரம் ‘டைம்’ கொடுத்திருக்கார்."

"உன் கிட்ட கூட சொல்ல முடியாதபடி அப்படி என்ன காரணம் இருக்க முடியும் சாந்தி?"

"அதான் எனக்கும் புரியலை கல்பனா"

"எனக்கென்னவோ அவர் மறுபடி உன்னை எப்படியும் வேலையை விட வைக்கிற முயற்சியில இறங்கியிருக்காரோன்னு தோணுது"

"எனக்கும் அதுதான் சந்தேகமாயிருக்கு"

"நம்ம சமுதாய அமைப்பே முட்டாள்தனமா இருக்கு சாந்தி! வேலை, கேரியர்னாலே அது ஆணுக்கு மட்டும்தான் இருக்கணும்னு முடிவு செய்துடறாங்க. அவங்களோட பதவி உயர்வு, அவங்களுக்கு வர்ற இடமாற்றல் மட்டும்தான் பெரிசு. மனைவி ஏதோ நானும் வேலைக்குப் போனேன்னு போயிட்டு வரணும். மனைவிக்குப் பதவி உயர்வு வந்தா கணவனுக்கு பிளட்பிரஷர் ஏறுது. அவளுக்கு இடமாற்றம் வந்தா, குடும்பம், புருஷன், குழந்தை எல்லாரையும் விட்டுட்டு எங்கேயும் போகமுடியாதுன்னு எழுதிக் கொடுத்துடுன்னு சுலபமா சொல்லிடுவாங்க. பதவி உயர்வு வந்தாக் கூட அதுக்குக் காரணமா இருந்த அவளுடைய உழைப்பும், நேர்மையும் யார் கண்ணுக்கும் தெரியறதில்லை. அவளோட புடைவை மட்டும்தான் தெரியுது. மோசமான ஆளுங்க!"

கல்பனா பொரிந்துகொண்டே போனாள்.

"என்ன கல்பனா, நான் என்னோட பிரச்னைக்குத் தீர்வு கேட்டேன். நீ என்னடான்னா உன் பாட்டுக்கு எல்லாரையும் திட்டிக்கிட்டிருக்கே?"

"ஆமா சாந்தி! நீ மட்டும் விதிவிலக்காகவா இருக்கப்போறே? இவ்வுளவு வருஷமா நீ உழைச்சதுக்கு அங்கீகாரமா, ஒரு கௌரவமா உனக்குப் பதவி உயர்வு வரப்போகுது. ஆனா நீயும் மத்தவங்களை மாதிரி "வேலையை விடக் குடும்பம்தான் முக்கியம்" அப்படின்னு டயலாக் பேசிட்டு, வேலையை விட்டுட்டு போகப்போறே. ஏன் எப்பப் பார்த்தாலும் பெண்களுக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கணுமா? இத்தனை வருஷம் பாடுபட்டு வேலைக்கு வந்ததெல்லாம் ஒண்ணுமே இல்லாம வீணாகப் போகும்னு நினைச்சா என்னாலேயே தாங்க முடியலை…ஹ்ம்.. நீ எப்படி தாங்கிக்கப் போறியோ, எனக்குத் தெரியலை சாந்தி!"

வேலையை விட்டுவிடலாம் என்று எண்ணியிருந்த சாந்தி, வேறுவிதமாய் யோசிக்கத் தொடங்கினாள்.

மறுநாள் கல்பனாவிடம் தன் முடிவைச் சொன்னாள்.

"எனக்கு என்னுடைய வேலையும், பதவி உயர்வும் முக்கியம். இது என் கௌரவப் பிரச்னை. இதுல நான் விட்டுக் கொடுக்கறதா இல்லை. அவருக்கு நான் முக்கியம்னா, அவர் மாற்றல் வேண்டாம்னு சொல்லிக்கட்டும்."

"சாந்தி! இப்போதான் எனக்கு உன்னைப் பார்த்தாப் பெருமையா இருக்கு. எல்லாப் பெண்களுக்கும் இப்படி ஒரு தைரியம் வந்துட்டா, பெண்ணடிமைத்தனங்கிறதே இருக்காது."

கல்பனா மகிழ்ந்து பாராட்டினாள்.

சாந்தி தீர்மானித்தது போலவே தான் சென்னைக்கு வரப்போவதில்லை என்று அரவிந்தனிடம் கூறினாள். சரி, நான் இங்கேயே இருக்கிறேன் என்று அரவிந்தன் கூறுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அரவிந்தன் அவன் முடிவிலிருந்து மாறவில்லை. அதனோடும் கூட நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம் என்று சொல்ல, சாந்திக்கு அந்த அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை. அப்படியே திகைத்துப் போய் அமர்ந்து விட்டாள்.

அரவிந்தனும் அவள் மௌனத்தையே விவாகரத்துக்கும் சம்மதமாய் அர்த்தம் செய்துகொண்டு, அவளிடம் சொல்லிக் கொள்ளாமலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றான்.

மறுநாள் பையில் ராஜினாமா கடிதத்தோடு அலுவலகம் சென்ற சாந்தி, கல்பனாவைப் பார்க்காமல் இருந்திருந்தால் இப்போது அரவிந்தனுடன் வாழ்ந்து கொண்டிருப்பாள். "ஏன் தான் அன்று கல்பனாவைப் பார்த்தேனோ?" என்று இப்போது கூட சாந்தி தன்னையே நொந்து கொள்வதுண்டு.

"அவர் விவாகரத்து செய்து கொள்ளலாமா என்று கேட்டுவிட்டார், கல்பனா! அதனால்தான் நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம் என்று தீர்மானித்து விட்டேன்."

சாந்தி அழாக்குறையாகச் சொல்ல, கல்பனாவின் முகம் கோபத்தால் சிவந்தது.

"ஏன் தான் இப்படி விவாகரத்து என்றால் பெண்கள் எல்லாம் பயப்படுகிறீர்களோ புரியவில்லை. இப்போது விவாகரத்து செய்துவிட்டால் தான் என்ன? சாந்தி, உனக்கு என்ன குறைச்சல்? படிப்பு இல்லையா, வேலை இல்லையா, கை நிறைய சம்பளம் இல்லையா? உன்னால் தனியாக வாழ முடியாதா? உன் குழந்தையை வளர்க்க முடியாதா? அவர் என்ன உன்னை ‘டைவர்ஸ்’ செய்வது? நான் உன்னை நல்ல வக்கீலிடம் கூட்டிக்கொண்டு போகிறேன்; நீ முதலில் அவருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவை. அப்போதுதான் இந்த ஆண்களின் திமிர் அடங்கும்." கல்பனா படபடத்தாள்.

"என்ன கல்பனா, டைவர்ஸ் பண்ணிடச் சொல்றே?" சாந்தி அதிர்ச்சியடைந்தாள்.

"இங்கே பார் சாந்தி! எப்ப டைவர்ஸ் பண்ணலாம்னு அவர் வாயிலேர்ந்து வந்துடுச்சோ, அப்பவே அவருக்கும் உனக்கும் உறவு விட்டுப் போச்சுன்னு புரியுது. உன் கூட வாழறதுல இஷ்டம் இல்லாம தானே இப்படிச் சொல்லியிருக்கார்? உன்னை விரும்பாத ஒருத்தர் கூட வற்புறுத்தி நீ சேர்ந்து வாழ்ந்துதான் என்ன பிரயோஜனம்? அவர் டைவர்ஸ் பண்றதுக்கு முன்னால நீயே நோட்டீஸ் அனுப்பிடு. அவருக்கு உன்னோட சேர்ந்து வாழ விருப்பமிருந்தா, நிச்சயம் இதுக்கு ஒத்துக்க மாட்டார். அப்படி இல்லைன்னா, உன் எண்ணங்களுக்கு மதிப்புத் தராத, உன்னை விரும்பாத ஒருத்தர் கூட வாழறதை விட டைவர்ஸ் வாங்கிட்டு தனியா வாழ்ந்துடறதே நல்லது."

கல்பனா ‘அடித்த வேப்பிலை’யில் மயங்கிப்போன சாந்தி விவாகரத்துக்கான பத்திரத்தை விடுமுறையில் வந்த அரவிந்தனிடம் தந்தாள். ஒரு வார்த்தை ‘ஏன்’ என்று கூடக் கேட்காமல், நீட்டிய இடத்தில் அவன் கையெழுத்துப் போட்டுவிட, சாந்தியின் விவாகரத்து நடந்தது.

அதன் பிறகு அரவிந்தன் வடக்கே எங்கோ ‘டூர்’ போய்விட்டான் என்பது மட்டும் அவளுக்கு எட்டியது. அவள் அலுவலகத்திலேயே பெண்கள் அவளைப் பற்றி பின்னால் பேசினார்கள். "அந்த அப்பாவியைப் போய் டைவர்ஸ் பண்ணிட்டாளே" என்று பேசினர். கல்பனா மட்டும் ‘பெண்ணுரிமை, சுயகௌரவத்துக்காகப் போராடி வென்ற வீராங்கனை நீ – இதற்கெல்லாம் வருந்தலாமா?’ என்று தேற்றினாள்.

சாந்தி எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மூன்று மாதங்களில் அவளுக்கும் சென்னைக்கு மாற்றல் வந்ததை என்னவென்று சொல்வது?

விதி என்றுதான் சாந்திக்குத் தோன்றியது. சாந்தி வேலை பார்த்து வந்த அலுவலகம் அதே துறையிலிருந்த சென்னை அலுவலகம் ஒன்றைத் தன்னோடு இணைத்துக் கொண்டது. அங்கே அலுவலக நிர்வாகத்தை கவனிக்க சாந்தியே செல்ல வேண்டும் என்றும் மேலிடம் கட்டளையிட்டு விட்டது.

விவாகரத்து செய்து சரியாய் ஆறு மாதங்களில், எங்கே செல்ல முடியாது என்று மறுத்து விவாகரத்து வரை வந்தாளோ, அதே சென்னைக்கு சாந்தியும் வந்து வேலையில் சேர்ந்தாள்.

"நிழலின் அருமை வெயிலில் தெரியும்; நீரின் அருமை பாலையில் தெரியும்" என்று சொல்வார்கள். அதுபோல் அரவிந்தனின் அருமை சாந்திக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. அவர்களுடைய இனிமையான இல்வாழ்க்கை, ரஞ்சனியிடம் அவனுக்கிருந்த பாசம் – இவற்றை நினைக்கும்போது மனத்தை நெகிழச் செய்தது. கல்பனாவின் போதனையால் தவறான பாதையில் சென்றுவிட்ட அவள் மனம் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஒரு நல்ல கணவனாய், நல்ல தகப்பனாய் இருந்த அவரைப்போய் நம் அவசரபுத்தியால் இழந்துவிட்டோமே என்ற வருத்தம் வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் ஒரு கேள்வி மட்டும் மீதமிருந்தது. எதற்காக அவர் அந்த மாற்றலை மறுக்கவில்லை? அந்தக் கேள்வி மட்டும் அவள் உள்ளத்தை குடைந்து கொண்டே இருந்தது.

அதற்கான பதிலும் சமீபத்தில் தெரிய வந்த பிறகு சாந்தி தன் வாழ்க்கையைத் தானே கெடுத்து விட்டதாய் உணர்ந்து அழத்தொடங்கினாள்.

அரவிந்தனின் அலுவலக நண்பர் சீனிவாசனை சாந்தி சமீபத்தில் கடைத்தெருவில் சந்தித்தாள். உறவினர் வீட்டுத் திருமணத்துக்காக வந்தவர், சாந்தியைச் சென்னையில் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

"உன்னையும் இங்கே மாத்திட்டாங்களாம்மா? பார்த்தியா, ஜி.எம் சம்சாரமா கார், வீடுன்னு குடித்தனம் செய்ய வேண்டியவ இப்படித் தனியா வாழ்ந்துகிட்டிருக்கே, எல்லாம் விதி, வேறென்ன சொல்றது? "

"அவரு ஜி.எம் ஆயிட்டாரா?"

"அது உனக்குத் தெரியாதாம்மா? இரண்டு முறை மாற்றல் வந்தும் அரவிந்தன் ஏனோ வேணாம்னிட்டான். அப்புறம் பெரிய பிரமோஷன் வந்து தானே சென்னைக்கு வந்தான். என்ன தான் வந்து என்ன பிரயோஜனம்? மனுஷனுக்கு நிம்மதிதானே முக்கியம்?" என்று சொல்லிவிட்டுப் போக, சாந்தியின் கேள்விக்கு விடை கிடைத்தது.

மாற்றல் வேண்டாம் என்று ஏன் அரவிந்தன் சொல்லவில்லை என்பது புரிந்தது. புதிதாய் வாங்கிய கண்ணடி ஜாடியை தூள்தூளாய் உடைத்ததுபோல், கையில் வந்த அற்புதமான வாழ்க்கையைக் கைநழுவவிட்ட தன் முட்டாள்தனம் சாந்திக்கு விளங்கியது. அரவிந்தன் மீதான பாசம் கூடியது.

(உறவுகள் தொடரும்…..)

About The Author