உறவுகள் தொடர்கதை – 18

"உங்களுக்குள் இருந்த பழக்கம் எனக்குத் தெரியும்" என்று சாந்தி சொல்ல, சூர்யாவும் மலரும் தர்மசங்கடமாய் உணர்ந்தனர்.

சூர்யா உதவிக்கு வருவானா என்ற ஆவலில் அரவிந்தனைப் பார்க்க, அவன் பேசத் தொடங்கினான்.

"சாந்தி சொல்றது உண்மைதான், சூர்யா! நமக்குள்ளே நடந்த விஷயத்தையெல்லாம் நான்தான் அவகிட்டே சொன்னேன். அப்புறம், சாந்தியோட நோய் எப்ப குணமாகும்னு உன்கிட்டே கேட்கலாம்னு தான் வந்திருக்கோம்."

"அது…வந்து…" சூர்யா திணறினாள்.

"தெரியாதுன்னு மட்டும் சொல்லாதே சூர்யா! ஏன்னா அந்த வியாதியைப் படைச்சதே நீ தானே! என்ன சூர்யா, எப்படி இதெல்லாம் தெரிஞ்சதுன்னு பார்க்கறியா?"

"சாந்திக்கு நோய் இருக்கிறதா நீ சொன்னதால, நான் அவளை முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிட்டுப் போனேன். சாந்திக்கு எந்த நோயும் இல்லைங்கிற உண்மை தெரிஞ்சுது. அப்பாடா..அந்த நிம்மதியும் சந்தோஷமும் ரொம்ப மனசுக்கு நிறைவா இருந்தது. அதுக்குப் பிறகு நமக்கு இடையில நடந்த எல்லா விஷயங்களையும் சாந்திகிட்ட சொல்லிட்டேன்."

அரவிந்தன் நிறுத்த, சாந்தி தொடர்ந்தாள்.

"அவர் இன்னொரு கல்யாணம் செய்துக்க இருந்தது எனக்கு வருத்தம்தான். இருந்தாலும் உண்மையை ஒத்துக்கிட்ட நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது. சூர்யா! எங்களைச் சேர்த்து வைச்ச உங்களுக்கு நன்றி சொல்லிட்டு, அப்படியே ஒரு கேள்விக்கு பதிலும் தெரிஞ்சுட்டுப் போகத்தான் நாங்க வந்திருக்கோம். நீங்க சொன்ன பொய்களுக்கு காரணம் என்ன?"

"எப்ப உங்களுக்கு இந்த அளவு உண்மை தெரிஞ்சாச்சோ, இனி மீதி இருக்கிறதையும் நானே சொல்லிடறேன். நான் சொன்ன பொய்களுக்கு எல்லாம் ஒரே காரணம், நீங்க இரண்டு பேரும் மறுபடி சேரணும்கிறதுதான். அரவிந்தன்! உங்க கூட நான் பழகினதும் வெறும் நடிப்புதான். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க.

சாந்தி! நான் நிறைய பொய் சொல்லியிருக்கேன். எல்லாத்தையும் விட, உங்களுக்குத் தீர்க்க முடியாத நோய் இருக்குன்னு அரவிந்தன் கிட்டே பொய் சொன்னேன். அதனால ஏற்படக் கூடிய அனுதாபம் உங்க மேல இருந்த பாசத்தை அதிகமாக்கும்னு எதிர்பார்த்தேன். நான் நினைச்ச பலன் கிடைச்சது."

"நாங்க ரெண்டு பேர் சேர்ந்து வாழறதுல உனக்கு என்ன சூர்யா இவ்வுளவு அக்கறை?"

"நான் பட்ட கஷ்டம் உங்க மகள் ரஞ்சனி பட வேண்டாம்னுதான்."

"கொஞ்சம் விளக்கமா சொல்லு சூர்யா"

"மலர், அப்பாவைக் கூட்டிட்டு வாயேன்."

சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்து அமர்ந்தார்.

"வணக்கம் தம்பி! வணக்கம்மா! நான் சூர்யாவோட அப்பா கதிர்வேல்."

"சூர்யாவோட அப்பாவா?" அரவிந்தனுக்கு ஆச்சரியம்!!

"என்னப்பா, அநாதைன்னு சொல்லிக்கிட்டாளே? அவளுக்கேது அப்பான்னு பார்க்க்றியா? அது உனக்கு அவமேலே இரக்கம் வரணும்கிறதுக்காக நான் சொல்லச் சொன்ன பொய்! சூர்யாவுக்கு ஒரு தம்பியும் தங்கையும் கூட உண்டு."

சூர்யா தொடர்ந்தாள்.

"எனக்குப் பத்து வயசிருக்கும்போது, ஏதோ ஒரு சண்டை காரணமா எங்கப்பாவும், அம்மாவும் டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. அப்பா இருந்தும் இல்லாமப் போற அந்த வேதனையை, நான் அனுபவிச்சிருக்கேன். மலரும் அவ குடும்பமும்தான் எனக்கு எப்பவும் ஆறுதல் சொல்வாங்க. நானாவது பரவாயில்லை, என் தம்பி, தங்கைக்கு அப்பா முகம் கூட ஞாபகமில்லை.

இரண்டு வருஷத்துக்கு முன்னால எங்க அம்மா உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா ஆனாங்க. அப்ப அப்பாவைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க.அப்பா வந்து பார்த்ததுல அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பிறகு மூணு மாசம்தான் சேர்ந்து இருந்தாங்க. அதுக்குள்ளே அம்மா இறந்துட்டாங்க.."

கதிர்வேல் தொடர்ந்தார்:

"ஏதோ ஒரு சண்டை காரணமா பிரிஞ்சு போய் இப்படி வாழ்க்கையை வீண் பண்ணிட்டேனேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. அவகூட சேர்ந்து வாழலையேங்கிற குறை இன்னும் என் நெஞ்சில் இருக்கு. என்னை மாதிரி கோபத்துல சண்டை போட்டுப் பிரியறவங்களை சேர்த்து வைம்மான்னு நான்தான் சூர்யாவைக் கேட்டுக்கிட்டேன்.

இந்த மாதிரி சண்டை போட்டுப் பிரிஞ்சு போறவங்களால தனியா வாழவும் முடியாது; அவங்களா வந்து சமாதானம் ஆக அவங்க "ஈகோ" விடாது;

இதில குழந்தைங்க பாடு தான் இன்னும் மோசம், அவங்க படற மன வேதனை….ரொம்ப அதிகம்..! இரண்டுங்கெட்டான் நிலையா அவங்க படற கஷ்டத்தைத் தீர்க்க எவ்வுளவு பொய்யையும் தாராளமா சொல்லலாம். இது என் கருத்து."

அரவிந்தனின் மனதில் ரஞ்சனியின் ஆசிரியை கூறிய இதே போன்ற கருத்துக்களும் அலைமோதின. ஆம், இவர் சொல்வது சரிதான்!!!

சூர்யா தொடர்ந்தாள்:

"அப்பா இப்படிக் கேட்ட பிறகு என்னைச் சுத்தி அந்த மாதிரி யார் இருக்காங்கன்னு பார்த்தேன். சாந்தி வந்தாங்க. பழைய ஆஃபிஸ்லேர்ந்து அவங்களைப் பத்தியும், அரவிந்தன் பத்தியும் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். அரவிந்தன் கூடப் பழகணும்னு முயற்சி செய்தபோது, அவங்க ஆஃபிஸ் நண்பர் மூலமா அவர் பத்திகையில விளம்பரம் கொடுத்திருந்தது தெரிஞ்சுது. அப்புறமா நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியுமே!"

அரவிந்தனும் சாந்தியும் வியப்பில் வாயடைத்துப் போனார்கள்.

"எங்க இரண்டு பேரைச் சேர்த்து வைக்க நீங்க எவ்வுளவு சிரமப்பட்டிருக்கீங்க சூர்யா! உங்க குடும்பத்துக்கு நாங்க ரொம்ப கடன்பட்டிருக்கோம்."

அரவிந்தன் நெகிழ்ந்து கூறினான்.

"தம்பி! நீ செய்யக் கூடியது, நீயும் உன் மனைவியும் ஒத்துமையா வாழுங்க. உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது பிரிஞ்சுபோனா, அவங்களையும் சேர்த்துவைக்க முயற்சி பண்ணுங்க."

கதிர்வேல் கூற, அரவிந்தன் மனப்பூர்வமாய்த் தலையாட்டினான்.

"கணவன் – மனைவி உறவுங்கிறது அழகான ஒரு தொடர்கதை. கோபத்திலோ, அவசரத்திலோ அந்தத் தொடர்கதையை படக்குன்னு பாதியிலே நிறுத்திட்டா, வாழ்க்கையோட திசையே மாறிப்போயிடும். இதை எல்லாரும் ஞாபகம் வைச்சுக்கிட்டா ரொம்ப நல்லது."

"ஆமாம் அங்கிள், நான் படிச்ச ஒரு பொன்மொழி இப்ப நினைவுக்கு வருது.

‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பொறுப்பான, அன்பான பெற்றோர் இருந்துவிட்டால், பெரும்பாலான சமூகக் குற்றங்கள் தாமே மறைந்துபோகும்.’

"சரியாச் சொன்னே, மலர்! இந்தக் கருத்து எல்லாருக்கும் பரவினா, நாடே நன்மை பெறும்."

"உங்களோட சேர்ந்து உழைக்க நாங்களும் தயாரா இருக்கோம்."

அரவிந்தனும் சாந்தியும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சூர்யா – வார்த்தைகளின் வெளிப்பூச்சில் மயங்கிவிடாமல் வாழ்க்கையின் உண்மையான வண்ணத்தை உணர்ந்துவிட்ட சுடர். சூர்யாவைப் போன்ற சுடர்கள் பெருகி நம் தேசம் ஒளிமயமாகும், பண்பாடு மிளிரும் பண்டைய பாரதமாய் மாறும் என்று நம்புவோம்!!! வந்தேமாதரம்!!!

About The Author

3 Comments

  1. மிக நல்ல கதை!!! அருமையான முடிவு. இதை படித்தாவது 4 பேர் மனம் திருந்தி சேர்ந்து வாழ்ந்தால் சரி தான்.

    2011-10-22 04:26:55.000000

  2. கதையைப் படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி, கல்கி!!

    2011-10-29 10:16:18.000000

  3. நல்ல கதை தான் ஆனல் இழுவை.சுருக்கமக சுவை நன்ட்ரு கதை ம்கும்

    2012-07-17 02:29:29.000000

Comments are closed.