உறவுகள் தொடர்கதை – 6

ஞாயிறு. சன் டி.வியின் நிகழ்ச்சியில் லயித்திருந்த மலரை அழைப்புமணி இசை எழுப்பிக் கலைத்தது.

கதவைத் திறந்த மலர் முகம் மலர்ந்தாள்.

"அட! சூர்யாவா, வா, வா! என்ன, யாரைத் தேடறே?"

"ஆனந்தி இல்லையா?"

"இருக்கா. என்னவோ அதிசயம் இன்னிக்கு அவ வீட்டுல தான் இருக்கா. என்ன விஷயம்?"

"மலர்! முன்னே ஒருநாள் நான் உங்கிட்ட சொன்னேன், நினைவிருக்கா? ஆனந்தியைப் பார்த்து பேசணும்னு. அதுக்குத்தான் வந்திருக்கேன்."

"ம்.. தாராளமா பேசு. நல்ல புத்தி சொல்லு."

சூர்யா சென்று ஆனந்தியின் அறைக்கதவைத் தட்டி அனுமதி கேட்டுப் பிறகு அறையினுள் நுழைந்தாள்.

"வாங்கக்கா, உட்காருங்க"

கட்டில் மேல் அமர்ந்தபடி, ஆனந்தி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

சூர்யா ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி ஆனந்தியைக் கவனித்தாள். மெல்லிய சரிகை இழையோடிய காஞ்சி காட்டன் புடவை, மிதமான ஒப்பனை என்று எந்த நேரமும் பெண்பார்க்கும் வைபவத்திற்குத தயாராக ஆனந்தி அலங்காரம் செய்திருந்தாள்.

"என்ன அதிசயமா புடைவை கட்டியிருக்கேன்னு மலர் கேட்கலையா ஆனந்தி?"

"கேட்டா…ஒரு தோழி வர்றதாச் சொன்னேன். ஆமாம், நீங்க அக்கா கிட்டே பேசறேன்னு சொன்னீங்க, இன்னும் பேசலையா?"

"நான் எதுவும் சொல்லலை. நீ ஏதாவது சொன்னியா?"

"நீங்க வீட்டுல பேசறேன்னு சொன்னதால, நான் வாயே திறக்கலை. இப்ப அவங்க திடீர்னு வந்து நின்னா, வீட்டுல என்ன சொல்லுவாங்களோ, பயமா இருக்குக்கா."

"மலருக்கு காதல்லே நம்பிக்கேயே இல்லை. உங்க அப்பா, அம்மா, மலர் கிட்ட இப்ப உன் காதலைச் சொன்னா, வீணா நீ திட்டுதான் வாங்கணும். அதைவிட, சரணோட அப்பா, அம்மா வந்து நேரா கல்யாணம் பேசட்டும். அப்ப நைஸா நான் இந்த விஷயத்தைக் சொல்லிடறேன். கல்யாணம் நிச்சயமாயிட்டா, காதல் பெரிய தவறா தெரியாது."

"சரிக்கா, அப்படியே செய்துடுங்க. உங்களைத்தான் நாங்க நம்பியிருக்கோம். எனக்குப் பொண்ணு பிறந்தா, உங்க பேரையே வைக்கிறேன். நீங்கதான் எப்படியாவது எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும்."

"கல்யாணம் நடத்தி வைக்கிறவரை எல்லாம் சரிதான் ஆனந்தி! ஆனா குழந்தைக்குப் பேர் வைக்கிறேன்னு சொன்னே பாரு, அதுமட்டும் வேண்டாம், அப்புறம் கோபம் வரும்போதெல்லாம் என் பெயரை வைச்சு திட்டித் தீர்த்திடுவீங்க."

ஆனந்தியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஆமாம் ஆனந்தி! கேட்கவே மறந்திட்டேன்.நேத்து சரவணன் போன் பண்ணினானா? எத்தனை மணிக்கு வர்றதாச் சொன்னான்?"

"நேத்து போன் வரலைக்கா. ஆனா இன்னிக்கு நிச்சயம் வருவார்."

"நான்பாட்டுக்கு கல்யாணம் பேச வரச் சொல்லிட்டேன். சரவணன் குணம் எப்படி, அவங்க குடும்ப விவரம், அவங்க வீட்டு அட்ரஸ், மத்த டீடெய்ல்ஸ் எல்லாம் உனக்குத் தெரியுமா ஆனந்தி?"

"அக்கா, சரண் குணத்தைப் பத்தி கவலையே வேண்டாம். அவர் மாதிரி ஒரு நல்லவரைப் பார்க்கவே முடியாது. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் கவர்மென்ட் வேலையில இருக்காங்க. ஒரு தம்பி படிக்கிறான். அவங்க வீடு அரும்பாக்கத்துல இருக்கு, சரியா அட்ரஸ் தெரியாது."

"ரெண்டு மாசமா காதலிக்கிறீங்க, வீட்டு அட்ரஸ் வாங்கக் கூடத் தோணலியா ஆனந்தி?"

"இல்லைக்கா. தினம் காலேஜ்லதான் பார்த்துக்கறோம். அதான்…" ஆனந்தி இழுத்தாள்.

"சரி, சரி, விடு. அதான் நேர்ல வரப் போறாங்களே, நானே கேட்டுக்கறேன். ரொம்பநேரம் உன்கூடவே நான் பேசிட்டிருந்தா, மலருக்குச் சந்தேகம் வரும்.வா, டி.வி பார்க்கப் போகலாம்."

இருவரும் வந்து ஹாலில் மலருடன் அமர்ந்து கொண்டார்கள். ஆனந்தியும் அன்று வீட்டில் இருந்தது மலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மூவரும் சேர்ந்து அரட்டை, பகல் உணவு, விளையாட்டு என்று பொழுது போக்கினார்கள்.

மாலை மணி ஐந்தைத் தொட்டது. மலர் ஏதோ வேலையாக கடைக்குப் போனாள்.

"என்ன ஆனந்தி! இனிமே அவங்க வருவாங்கன்னு நான் நினைக்கலை. ஆனாலும் சரண் இப்படிச் செய்யக் கூடாது."

"ஒருவேளை அவங்க வீட்டுல சம்மதிக்கலையோ என்னவோ?"

"சரி, அதையாவது போன் செய்து சொல்லலாமே, உன் நம்பர் தெரியுமில்லையா?"

இதே கேள்விக்குண்டான பதிலைத்தான் ஆனந்தியும் தேடிக்கொண்டிருந்தாள். இப்போது சூர்யா அதே கேள்வியைக் கேட்கவும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஆனந்தி தவித்தாள்.

"உங்களுக்குள்ளே தவறா எதுவும் நடக்கலையே ஆனந்தி?"

ஆனந்தி பதறினாள். "ஐயோ! என்னக்கா இப்படியெல்லாம் கேட்கறீங்க?"

"நல்லவேளையா எதுவும் நடக்கலை. அப்படி ஒருக்கால் ஏதாவது ஆகி, பிறகு சரண் உன்னைக் கைவிட்டுட்டா என்ன செய்வே ஆனந்தி?"

ஆனந்தியால் பதில் சொல்ல முடியவில்லை.

"சரண் நம்பர் உங்கிட்ட இருக்கில்ல? நீயாவது போன் செய்து கேளு."

"செய்யாம இருப்பேனாக்கா? ரொம்ப நேரமா cell switched off அப்படின்னு ஒரே மெசேஜ் தான் வருது, செல்லை ஆஃப் பண்ணி வைச்சிருக்கான் போல "

"சரி விடு, நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு யாருக்கெல்லாம் தெரியும்?"

"நாங்க எப்பவும் காலேஜ்க்கு வெளியிலேதான் மீட் பண்ணுவோம். என் கிளாஸ்லே லேசா இப்பதான் சந்தேகம் வந்திருக்கு. மத்தபடி பீச், பார்க், ஹோட்டல்னு வெளியிலே போயிடுவோம். எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க?"

"உங்க காதலுக்கு சாட்சி என்னன்னு யாராவது, ஒருவேளை சரணே நாளைக்கு கேட்டுட்டா, உன்பக்கம் யாரவது இருக்காங்களான்னு பார்த்தேன். ..ம்ஹூம், ஒருத்தர் கூட இல்லை. பீச் மணலையும், ஹோட்டல் டேபிளையும் தவிர வேறு யாராவது இருக்காங்களான்னு நீயே யோசிச்சுப் பாரு, ஆனந்தி!"

ஆனந்தி யோசிக்கத் தொடங்கினாள்.

"நாளைக்கு நானும் உங்கூட வந்து சரணோட விளக்கத்தைக் கேட்கணும். இங்கே உங்க பஸ் ஸ்டாண்டுலே வெயிட் பண்ணு, ஆனந்தி! நாளைக்கு நானும் உன்கூட வர்றேன்."

அதற்குள் மலர் வந்துவிட, சூர்யா இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள்.

(உறவுகள் தொடரும்…..)

About The Author