உறவுப்பாலம் (3)

”ரொம்ப உசரத்தில் இருக்கு. பறிச்சித் தருவியா கிரி?”

உடம்பெல்லாம் பரவசப்பட்டுப் போனான். சராசரியை விட அவன் கொஞ்சம் உயரம். அதற்குப் பெருமைப்பட்ட கணம் அது. இடுப்பில் குடம் இல்லையென்றால், அவளே ஒரே துள்ளலில் கிளையை எட்டி இழுத்துப் பறித்திருப்பாள்.

முன் குனிந்து கவனமாய்த் தன்னுலகில் இருந்தான் அந்த ரமணி. இப்போது பிளஸ் டூ. அந்த கிருஷணனின் தங்கை, அவள் பேரே மறந்து விட்டது. அவளை இந்நேரம் மறந்திருப்பானா? கேட்டால், அவள் எனக்கு இன்னொரு பரிசு தந்தாள், என்று சொல்லக் கூடும். சிலாட்களுக்கு அப்படி அதிர்ஷ்டம் வாய்க்கத்தான் செய்கிறது.

எத்தனையோ தரம் அம்சவேணி வீட்டைத் தாண்டி சைக்கிளில் போயிருந்தாலும் ஒருமுறை கூட கிணிங் கிணிங் என்று அடித்தது இல்லை. மற்ற பசங்கள் மணியடித்தால் ஆத்திரமாய் வரும் அவனுக்கு.

”தேங்ஸ், சாமிக்குப் போடுவேன்” என்று அந்தச் செம்பருத்திப் பூவை அவள் வாங்கிக் கொண்டபோது சின்னதாய் ஒரு குண்டூசி
அளவு அவன்கைமேல் அவள் கை பட்டபோது, சடசடவென்று கோபுரத்துப் புறாக்கள் எழும்பிப் பறந்தன.

நீயே ஊர் தேவதை, உனக்கு அளித்தேன் பூவை… என மனசில் நெகிழ்ந்த கணம் அது.

எப்படியோ எனக்கு இந்த ஊரே லபித்துவிட்டது. ஆற்றங்கரை சுப்பிரமணியர் கோயிலில் அப்பா குருக்கள். பிரசாதம் வரும். சம்பளம் என்று பேருக்கு. கற்பூரத் தட்டை நம்பிய ஜீவனம். ஒரு தங்கைவேறு குடுகுடுவென்று எட்டாங்கிளாஸ் படிக்கும் போதே குதிர்ந்து நின்றாள். இவன் கல்லூரி வாசித்து, பி.எட். படிக்க என்று குமரன்நகர் போய்வந்தான். எல்லா இடமுமே ஊருக்குப் பக்கத்திலேயே தினசரி போய்வருகிற அளவிலேயே அப்பா பார்க்க வேண்டி வந்தது. சைக்கிள் தான் எல்லா இடத்துக்கும். இந்த பழைய காலத்து சைக்கிளைப் பார்த்தாலே எந்தப் பெண் கிட்ட வரும், என்றிருக்கும்.

சைக்கிளிலேயே அவனவன் எடையற்ற வண்ண வண்ண மாடல் எல்லாம் பார்த்தாகி விட்டது. கைப்பிடியிலேயே ஆயிரம் அலங்காரங்கள் வந்துவிட்டன. ஆனாலும் சைக்கிள் எப்பவும் கூடவே இருந்தது. அதைப் பழிப்பது தகாது. தினசரி காலை அதைத் துடைத்து எண்ணெய் போட்டு பளபளவென்று வெயிலில் நிறுத்தி வைப்பான். ஆற்றங்கரையில் குளியல் போட எடுத்துப் போவான். பாலம் தாண்டி பள்ளிக்கூடம் போக அதில்தான் சவாரி. அம்சவேணி ஒருநாள் அவன் காதுபட கேலி செய்தது ஞாபகம் வந்தது.

”பெரியவனானா நம்ம கிரி என்னவா ஆகப்போறானோ?”

”அவனா? அவன் பத்துநாள் பதினைந்து நாள் இறங்காமல் சைக்கிள் ஓட்டி பரிசு வாங்குவான். திருவிழால, ராத்திரி பதினோரு மணியானால் தலைல டியூப் லைட்’டெல்லாம் உடைச்சி வித்தை காட்டிட்டே ஓட்டறாங்களே, அந்த மாதிரி…”

பளிச்சென்று அவளுக்கு எதும் பதில்சொல்லத் தெரியாமல் வந்தாயிற்று. அப்புறம் எத்தனையோ பதில்கள் ஞாபகம் வந்தன. அவள்முன் ஆண்கள் பேச்சற்றுப் போனார்கள். துணிச்சலாய் அவள் மாத்திரம் வார்த்தைகளை வீசியெறிந்தாள்.

பழகிய சைக்கிள் என்பதில் நல்ல பாலன்ஸ் வந்திருந்தது. வாஸ்தவத்தில் கைப்பிடியைப் பிடிக்காமலேயே கால்களாலேயே பாலன்ஸ் பண்ணி அவன் தெருவில் போக முடியும். முன்னால் அப்படி. கையை விட்டுவிட்டு ஓட்டி வந்தான். ஆனால் வாத்தியார் ஆனதும் அந்தப் பழக்கத்தை விடவேண்டியதாகி விட்டது.

சாதாரணமாகவே பேச்சு என்று வெளிப்படையாய்ப் பேசாதவன் அவன். வாத்தியார் உத்தியோகத்தில் வந்திருந்த அடக்கம். ஒரு புயலைப்போல அவள் அவனைக் கடந்துபோகையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மாத்திரமே முடிந்தது அவனால். ஒரு பாட்டிலின் தொடமுடியாத உட்பக்கமாய் அவள் இருந்தாள்.

ஆசை விருட்சமாய் உள்ளே வளர்ந்துவந்த நிலையில் அதன் இலைகள் கிளைகள் வாய்க்கு வெளியே வந்துவிடுமாய் அவனுக்குத் திணறலாய் இருந்தது. என்னால் அவளைக் கைப்பிடிக்க முடியுமா? முதலில் நான் போய் அவளிடம் பேச வேண்டும்… எனக்கு ஒரு தங்கை. அவளுக்கே நான்தான் வேலைக்குப் போய் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும். அதுவரை காத்திரு, என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? எப்படி எதிர்பார்க்க முடியும்?

முளையிலேயே கருகிப்போன நினைவுகள், ஆளை இருட்டியது.

ஆனால் அப்பாவின் மரியாதைக்கு அவன் பி.எட். முடிக்க உள்ளூர்ப் பள்ளியிலேயே வேலை கிடைத்ததைச் சொல்ல வேண்டும்.
”பரவால்லடா, உனக்கு இங்கியே வேலையாச்சு. சைக்கிள்லயே போய் வரலாமில்லே?” என்றார் அப்பா.

அவன் அப்பாவைத் திரும்பிப் பார்த்தான். பின் சுதாரித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

”வேற ஊரானாக் கூட என்ன, சைக்கிளையும் எடுத்திண்டு போனா ஆச்சு, இல்லையா இவனே?” என்றாள் தங்கை. விஜயலெட்சுமி.
திரும்பி சைக்கிளைப் பார்த்தான். அதை இனி அவனால் பிரிய முடியுமோ? இவர்களை விடு, அது வருத்தப்படும் போலிருந்தது.

பாண்டியராஜபுரத்தில் கோவாப்ரேடிவ் சொசைட்டியில் ராமச்சந்திரன் வேலை பார்க்கிறான். அவனுக்குப் பேசி பத்து பவுன் போட்டு கோவில் கல்யாணம். விஜயலெட்சுமி கிளம்பிப் போனபோது நன்றியில், அண்ணா, அண்ணா என்று அழுதாள். அடுத்து சீமந்தம், ஆடி என்று செலவுகளுக்கு அவன் தயாராக வேண்டும், என்று நினைத்துக்கொண்டபடியே அவனும் அழுதான். விஜயலெட்சுமிக்காக அழுகிறானா, தனக்காக அழுகிறானா என்றே தெரியவில்லை.

ஆ அம்சவேணிக்காக அழுதான்.

அவளை யாரோ வேறொரு கல்யாணத்தில் பார்த்துவிட்டுப் பிடித்துப்போய் அங்கேயே நிச்சயதார்த்தமும் பண்ணிவிட்டதாக கேள்விப்பட்டிருந்தான். விஜி கல்யாணம் சீக்கிரமே முடிந்ததில் சின்னதாய் ஆசுவாசப்படக் கூட முடியாமல் சேதி. சகாக்கள் எல்லாரும் அவனிடம் விசாரிக்கிறார்கள், என்னடா அப்பிடியா, என்று. அதையே ஒவ்வொருத்தரிடமும் சொல்லவே சுணக்கமாய் இருந்தது.

… கல்யாணம் முடிந்து அம்சவேணி ரெண்டுதரம் ஊர் வந்திருந்தாள். அவள் தம்பி கல்யாணம் என்று ஒருமுறை வந்தாள். அடுத்து அவள் பிள்ளையாண்டிருந்தாள். சேதி கேள்விப்பட்டு அப்பா போய் அவளை அழைத்து வந்தார். வந்த கொஞ்சநாள் அவர் புனே புராணம் தான். அவரிடம் போய் ”புனே முன்சிபாலிட்டி குப்பை வண்டில்லாம் எப்பிடி, போய்ப் பார்த்தேளா?” என்று கேட்க நினைத்தான் கிரிதரன்.

இப்போது அவள் எதிரே வர அந்தக் கூச்சம் குறைந்திருந்தது அவனுக்கு. ஓரிரு முறை காற்றாட அவள் வாசலில் வந்து நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தபோது அவனைப் பார்த்து புன்னகைக்கக் கூட செய்தாள். அடியே உனக்காக நான் அழுதிருக்கிறேன் தெரியுமோ… என்று லேசாய் உள்ளே துடித்தது அவனுக்.கு.

இப்போது ஆண் குழந்தை பிறந்து அதற்கே ஏழெட்டு வயசாகி யிருந்தது. பையனுக்கு கோடை என்று பள்ளி விடுமுறை. பத்திருபது நாள் இருப்பாள் போலிருந்தது.

கிரிதரனுக்கு வயது 28 ஆகிறது. என்னடா, உனக்கு ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கலாமா… என்று அப்பா கேட்கவில்லை என்பதில் அவனுக்கு வருத்தம் உண்டு. அம்மா போனபின்னால் வீட்டில் எதுவுமே ஒழுங்கு இல்லாமல் போனது. அத்தை ஒருத்தி பக்கத்துத் தெருவில் இருந்தாள். அவள்வந்து சமையல் என்று எதையோ பண்ணிவிட்டுப் போகிறாள்.

காலையில் குளிக்கப் போனபோது ஆற்றங்கரைக்கு அந்தப் பையனும் வந்திருந்தான். அம்சவேணியின் பிள்ளை. செவேலென்று இருந்தான். உடமபில் எலும்புகள் தெரிந்தன. ஆற்றங்கரை அவனுக்குப் பரவசமாய் இருந்தது. பிள்ளைகள் நீரில் அடித்துத் துளைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு நீச்சல் தெரியாது. கரையோரமாய் மேட்டில் நின்றபடி சொம்பு சொம்பாய் மேலே ஊற்றிக் குளித்துக் கொண்டிருந்தான்.

கிரிதரன் அவனிடம் அம்சவேணியின் சாயல் தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தான். அவளேபோலப் பெரிய கண்கள்.

மைதீட்டமலேயே பளிச்சென அடர்த்தியாய் இமைகள். நல்ல உயரம் இருந்தான். அதில் அப்பாவைக் கொண்டிருக்கலாம்.
சைக்கிளை நிறுத்தி மேற்சட்டையைக் கழற்றிவிட்டு கிரிதரன் ஆற்றில் இறங்கினான். மேம்பாலத்தில் வாகனங்கள் சத்தமிட்டபடி நகர்ந்து கொண்டிருந்தன. சட்டென அவன் பக்கம் திரும்பிக் கேட்டான். ”உன் பேரென்னப்பா?”

”கணேஷ்” என்றான் அவன்.

”நீச்சல் தெரியாதா?”

ம்ஹும், என அவன் தலையாட்டினான்.

”வா, அதொண்ணும் பெரிய பிரமாதம் இல்ல… வா”. என்று அவனைக் கூப்பிட்டான்.

கணேஷ் தயக்கத்துடன் கிட்ட வந்தான். நீட்டிய அவன் கையில் குப்புறப் படுத்தான் கணேஷ். ”சும்மா கையையும் காலையும் அடி. மெல்ல மெல்ல நீச்சல் பிடிபடும். விடாமல் அடிடா” என்றான் கிரிதரன்.

கணேஷ் உற்சாகமாய் அடிக்க ஆரம்பித்தான்.

அன்றைக்கு வகுப்பில் பாடம் நடத்தவே உற்சாகமாய் இருந்தது. நல்ல சுருட்டை முடி கணேஷுக்கு. சிரிக்கையில் கன்னத்தில் குழி விழுந்தது. அம்மா போல. அவளிடம் அம்சவேணியைப் பார்க்கிற சாயலை அவனால் தவிர்க்கவே முடியவில்லை. அவனைப் பார்க்கவே மனம் பொங்கியது.

”சார் இந்தப்பாடம் நேத்திதான் நடத்தினீங்க…”

கணேஷ் உற்சாகமாய்ப் பேசிக்கொண்டே வந்தான் தினசரி. அவனுடன் ஆற்றில் குளிக்க அனுப்பி வைக்க அம்சவேணி தடை சொல்லவில்லை, என்பதே ஆசுவாசமாய் இருந்தது அவனுக்கு.

”அன்க்கிள், இது…” என்று விரலைக் காட்டினான். ”இது பாபா.” இப்போது விரலை சரித்துக் காட்டினான். ”அப்ப இது என்ன?” என்று கேட்டான்.

”தெர்லயே.”

”ஹா ஹா” என்று சிரித்தான் கணேஷ். ”பாருங்க அன்க்கிள். இந்த விரல் நேரா இருக்கா. இது பாபா. இப்ப சாய்ஞ்சி இருக்கா, இது சாய் பாபா!”

கிரிதரனும் கூடச் சேர்ந்து சிரித்தான்.

”இப்ப சொல்லுங்க அன்க்கிள்.” விரலைக் காட்டினான். ”இது சேலை.” விரலை எடுத்து உதடுக்குள் மூடிக்கொண்டான். ”இது என்ன?”

”தெரிலயே.”

”வாயில் சேலை!”

”ஐயோ இப்பிடி அறுவை ஜோக்கா அடிக்கிறியேடா…” என்று சிரித்தான் கிரிதரன்.

”இப்ப நான் சொல்றேன். மாடிப்படி இறங்கிட்டே வந்தது குழந்தை. ஏ பி சி டி ஈ எஃப்-னு சொல்லிட்டே வந்த குழந்தை தவறி விழுந்துட்டது.”

”ஐயோ அப்றம் என்னாச்சி?”

”ஜி ஹெச்சுக்குக் கூட்டிட்டுப் போனாங்க!”

”இது நல்லாருக்கு, நான் போயி எங்கம்மாகிட்டச் சொல்றேன்…” கணேஷுக்கு உடம்பெல்லாம் சிரிப்பு பொங்கி வழிந்தது.

இப்போது ஓரளவு நீச்சல் கற்றுக் கொண்டிருந்தான். கிரிதரன் பார்க்கையிலேயே சிறு வட்டமாய் உள் ஆழம் வரை போய்த் திரும்பினான். ”இனிமே நானே நீச்சல் அடிப்பேன் அன்க்கிள்…”

கிரிதரன் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பள்ளிக்கூடம் விட்டு பாலம் வழியாக சைக்கிளில் திரும்பி வந்துகொண்டிருந்தான் கிரிதரன். தற்செயலாகக் கீழே பார்த்தால், யாரோ ஆழப்பகுதிக்கு தவறிப் போயிருக்க வேண்டும். ரெண்டு கையும் மேலே வந்தது. அப்படியே திரும்ப மூழ்கிவிட்டார்கள் சைக்கிளை வாயுவேகம் மனோவேகமாக மிதித்து ஆற்றங்கரையில் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு தண்ணீரில் குதித்து ஆழம்வரை முங்குநீச்சலில் போய்த் துழாவினான். ரெண்டுமுறை எதுவும் தட்டுப்படவில்லை. மூணாம் முறை தம்பிடித்து உள்ளேயே கைகளால் அளைந்து தேடித் துழாவினால்… இதோ ஒரு உடம்பு. தலைமுடியைப் பிடித்து மேலே இழுத்து தரதரவென்று கரையேற்றிப் போட்டான்.

அவன் எதிர்பார்த்தது சரி. அது கணேஷ். அசட்டு தைரியத்துடன் தனியாகவே குளிக்க வந்திருக்கிறான். வாயில் வைத்து ஊதி, வயிற்றை அமுக்கி குப்புறத் திருப்பிப் போட்டு அவன் குடித்த தண்ணீரை வெளியேற்றினான் கிரிதரன். ரெண்டு நிமிடத்தில் மெல்ல அவன் மூச்சு சீரானது.

கணேஷ் கண்ணைத் திறந்து பார்த்தான்.

”என்னடா இப்பிடிப் பண்ணிப்பிட்டே?” என்று அவனைக் கட்டிக்கொண்டான் கிரிதரன்.

”ஆகா, நான் செத்துப் போயிட்டேன்னே நினைச்சேன் சார்… நல்ல சமயத்ல வந்து என்னைக் காப்பாத்தினீங்க. மறு பிறவி தான் எனக்கு. இப்ப எனக்கு உயிர் குடுத்தவரே நீங்கதான்…” என்று படபடப்புடன் சொன்னான் கணேஷ்.

உயிர் கொடுத்தவன்…

ஆகாவென்றிருந்தது அந்தக் கணம்.

திருப்பதி வரிசையாய் ‘ஜரகண்டி ஜரகண்டி’ என, காலம் என்னதான் எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும், சில கணங்கள் அப்படியே மனதில் உறைந்து, ஆணியடித்து நின்று விடுகின்றன.

”பயப்படாதடா, இனி ஒண்ணும் கவலை இல்லை. தோட்டிக்கோ. வா வீட்டுக்குப் போலாம்” என்றான் கிரிதரன் நெகிழ்ச்சியுடன்.

சைக்கிளில் பின்-இருக்கையில் ஏறி உட்கார்ந்துகொண்டான் கணேஷ். ”அம்மாகிட்டச் சொல்ல வேணாம் அன்க்கிள்” என்றான்.

”நீ சொல்லலையின்னா நானும் சொல்லல. ஆனால் நீ இனிமே இப்பிடித் தனியா குளிக்க வர்ற வேலை வெச்சிக்காதே… சரியா?”
”ம்.”

சைக்கிள் அவர்கள் தெருப் பக்கம் திரும்பியது. ”ரொம்ப அழகா சைக்கிள் ஓட்டறீங்க அன்க்கிள் நீங்க. எனக்கு சைக்கிள் விட சொல்லித் தரீங்களா?” என்று கேட்டான் கணேஷ்.
(முற்றும்)

About The Author