எது முக்கியம், தம்பி? (2)

(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் – ‘வெற்றிக்கு முதல் படி’ புத்தகத்திலிருந்து)

சினிமா கனவு!

நமது ஊரில் இளைஞர்கள் எல்லாரும் சினிமாவில் சேர்ந்து நடிகராகிவிடலாம், கை நிறைய சம்பாதித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். வீட்டுக்கு வீடு எல்லாரும் நடிகர்களும் நடிகைகளுமாக மாறி விடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உங்கள் அப்பா, நீங்கள், உங்கள் தம்பி, உங்கள் அம்மா, அத்தை, தங்கை எல்லாரும் நடிகர்கள் – நடிகைகள் என்று யோசித்துப் பாருங்கள்!

பக்கத்து வீட்டிலும் இப்படியே! ஊர் முழுவதும் எல்லாரும் இப்படி ஆசைப்பட்டு தமிழ்நாடு நடிகை, நடிகர்களால் நிறைந்திருக்கிறது என்றால் பிழைப்பு எப்படி நடக்கும்?

வீட்டிலுள்ள எல்லாரும் உழைத்து அதிகமான நெல்லையோ, வாழைக்காயையோ, மல்லிகைப் பூவையோ உற்பத்தி செய்தால், மிகுந்ததை வெளி நாடுகளுக்கு அனுப்பி நாம் பணம் பெற முடியும். அந்தப் பணத்தை வைத்து நாம் நமக்கு வேண்டிய வெளிநாட்டுப் பொருளை வாங்கிக்கொள்ள முடியும்.

மாறாக, நம் நாடு நடிகர்களாலேயும் வழக்கறிஞர்களாலும், டாக்டர்களாலும், ஆசிரியர்களாலும், காப்பிக் கடைகாரர்களாலும், பார்பர் கடையினாலும் நிறைந்திருக்கிறதென்றால் என்ன ஆகும்? இந்தத் தொழில் எல்லாம் முதலில் கூறிய உற்பத்தி செய்கிறவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு உதவுகிற தொழில்கள்தான். அதாவது பிறருக்குத் தொண்டு செய்கிற தொழில்கள். ஆகவேதான் பொருளாதாரத்தை "உற்பத்தி செய்கிற இனம்" என்றும் அவர்களுக்கு உதவியாக "தொண்டு செய்கிற இனம்" என்றும் இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் உற்பத்தி என்றைக்கு அதிகமாகிறதோ அன்றுதான் எல்லாரும் அதிகமான வளத்தைக் காண முடியும். எல்லாரும் அந்த அதிக விளைச்சலைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும். நம் வருமானம் அதிகமாகும்.

எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் – தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். உற்பத்திக்குப் போதிய ஆள் இல்லை. நாம் எல்லாரும் வசதியுடன் வாழ வேண்டுமானால் நம் நாடு நிறைய உற்பத்தியாளர்களால் நிறைய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு பணக்கார நாடாக, பஞ்சாப் போல, குஜராத் போல ஆக முடியும்.

நமது வருமானம் போல இரண்டரைப் பங்கு சம்பளம் அதிகமாக அங்கே பஞ்சாபில் இருப்பவர்கள் பெறுகிறார்கள். அதனால் தான் அந்த மாநிலத்து மக்கள் சொந்த வீடு வைத்துக் கொண்டும், மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொண்டும், நல்ல வேட்டி சட்டை போட்டுக் கொண்டும், வசதியுடன் வாழ்கிறார்கள். நாமோ, நமது ஊர்காரர்களோ அவர்களுக்கு வேலை செய்ய டெல்லிக்கும் பம்பாய்க்கும் போய்க் கொண்டிருக்கிறோம்!

சினிமா! சினிமா!

சமீபத்தில் நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். ஒரு புத்தக வெளியீட்டாளரான இளைஞர் சொன்னார் :

"ஐயா! எத்தனையோ நல்ல புத்தகங்கள் போட்டேன். விற்பனை இல்லை; வாங்குவோர் இல்லை. சில மாதம் முன் "சின்மாவில் சேருவது எப்படி?" என்று ஒரு புத்தகம் எழுதினேன். சின்னப் புத்தகம்தான். ஆனால், சில மாதங்களில் அது மூன்று பதிப்பு வெளி வந்துவிட்டது. விற்பனை ‘ஓகோ!’ என்று போகிறது!" என்றார்.

"சுயமாக உழைத்து முன்னேறுவது எப்படி?", "நீங்களும் எப்படி ஒரு தொழில் அதிபர் ஆகலாம்?" என்று நான் ஒரு இருபது ஆண்டுகளாக தன் முன்னேற்ற நூல்கள் எழுதி வருகிறேன். இப்போது நிறைய பேர் இப்படி எழுதி வருகிறார்கள். இந்தப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன என்று பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

இருந்தாலும் "சினிமாவில் சேருவது எப்படி?" ஓராண்டிற்குள் மூன்று பதிப்பு விற்பனை ஆகிறதென்றால், நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? நிரந்தரமாக வெற்றி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது திடீர்ப் பணக்காரராவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது நிரந்தரமில்லாத ஒரு தொழிலில் மோகம் கொண்டு திண்டாட முன் வருகிறார்களா, யோசித்துப் பாருங்கள்!

வாழ்வில் எது முக்கியம், எது சரியான வழி என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தொழில் நிர்வாகத்தில் மெத்தப் படித்தவர்கள் தொழில் வெற்றி பெறுவதன் இரகசியம் "எது முக்கியம்?" என்பதை உணர்வதுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிரையாரிட்டி’ (Priority) என்று அடிக்கடி சொல்வார்கள். நீங்களும் ‘எது முக்கியம்?’ என்று நாலுமுறை சொல்லிப் பாருங்கள் – ஒரு வேலை தொடங்குவதற்கு முன்னால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

About The Author

4 Comments

  1. S.Gokulakrisnan

    இ ந்த வாசகத்தை என்றும் நினைவில் வைத்து இருப்பேன்

    கோகுல்

  2. senthilkumar

    இன்ரய காலகட்டத்திற்கு தகுந்த செய்தி

Comments are closed.