எந்திரன் – இசை விமர்சனம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் இதோ தயாராகிக்கொண்டிருக்கிறது! கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்பார்க்கபபடும் ஐஸ்-ரஜினி ஜோடியும் இதோ வந்தாகிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில், இன்னும் ஒரு முறையாக "இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்" என்ற முத்திரையோடு வரப்போகிறான் எந்திரன். இப்படத்திற்கென்று ஒரு சிறு வரலாறு இருக்கிறது. ஷங்கர் "இந்தியன்" இயக்கிய சமயத்தில், கமலும் ஷங்கரும் "மீண்டும் இணைவோம்" என்று முடிவு செய்தபோது வந்த கதைதான் எந்திரனின் கதை. அப்பொழுது படத்திற்கு வைத்திருந்த பெயர் வேறு – ரோபோ! எழுத்தாளர் சுஜாதா கூட ஒரு பேட்டியில், "இந்த படத்தை கரெக்ட்டா எடுத்தா, ஸ்பீல்பர்க்கோட "ஏ.ஐ" படத்தை விட நல்லா வரும்" என்று சொல்லியிருந்தார்! அடேங்கப்பா!

அதன் பிறகு, கமலும் ஷங்கரும் அவரவர் பாதைகளில் சென்றுவிட, ரோபோவைத் தூக் கி பரண் மேல் வைத்துவிட்டார்கள். விக்ரமுடன் ஷங்கர் இணைந்தபொழுது, ரோபோவிற்குத்தான் "அந்நியன்" எனும் பெயரை வைத்துவிட்டார்கள் என்று கோடம்பாக்கம் நினைத்தது. ஆனால், அந்நியனுக்கும் சைன்ஸ்-பிஃக்ஷனுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. ஓரிரு வருடங்களில் ரோபோ வேலையில் மும்முரமாக இறங்கினார் ஷங்கர். ‘படத்தை ஹிந்தியில் எடுக்கப்போகிறார்கள், ஷாருக்கான் நடிக்கப்போகிறார்’ என்று கூட செய்திகள் வந்தன. கடைசியில் ஒரு வழியாக சிவாஜியின் வெற்றிக்குப் பிறகு, நம் சூப்பர்ஸ்டாரிடமே வந்து சேர்ந்தார் ஷங்கர்!

"ரோபோ" என்று ஆங்கிலத்தில் பெயரிட முடியாதே – நம் அரசாங்கம் வரியைத் தீட்டிவிடுமே! அதனால், ஒரு நல்ல தமிழ் ப்பெயரைத்தேட ஆரம்பித்தார்கள். ஷங்கரின் செண்டிமெண்டுக்கு இணங்க, ஐந்து எழுத்துக்கள் தேவை, "ன்" என்ற எழுத்தில் முடிந்தால் அமோகம் – இப்படி வந்ததுதான் எந்திரன்! இதற்கிடையில் எழுத்தாளர் சுஜாதாவைப் பிரிய நேர்ந்ததால், ஷங்கர் தன் முதல் படத்தில் பணிபுரிந்த பாலகுமாரனையும் எந்திரன் குழுவில் சேர்த்துக்கொண்டார்.

படம் கிட்டத்தட்ட ரெடியாம் – செப்டம்பரில் வெளிவர வாய்ப்பிருக்கிறதாம். அப்படி இப்படி என்று தள்ளிப்போட்டால் கூட, இந்த வருடத்திற்குள், அல்லது பொங்கலுக்காவது எந்திரனை திரையரங்குகளில் காணலாம்! படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. இசை யார் என்று கேட்கின்றீர்களா! வேறு யார்?இசைப்புயல் ரஹ்மான்தான். மலேஷியாவில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் பாடல்களை வெளியிட்டார்கள். கேட்போமா!

புதிய மனிதா

இது ஒரு சைன்ஸ்-பிஃக்ஷன் திரைப்படம் என்று முத்திரை குத்துவது போல, அக்மார்க் டெக்னோவில் முதல் பாடல்! யாரது கதீஜா ரஹ்மான்! இசைப்புயலின் மூத்த பெண் – சினிமாவில் பாடும் முதல் அனுபவம்! அதுவும் ரஜினிகாந்தின் படத்திற்கு! என்ன ஒரு வாய்ப்பு! ஒரு சில வரிகளே பாடியிருந்தாலும், அம்சமாக பாடியிருக்கின்றார். ரஹ்மானின் குரலும் ஆங்காங்கே கேட்கிறது! பாட்டுஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை நிமிடங்கள் கழித்துதான் கேட்கிறது எஸ்.ப.பாலசுப்ரமணியத்தின் குரல். எந்திரனை வரவேற்பது போல் அமைந்திருக்கின்றன வைரமுத்துவின் வரிகள். சக்கை போடு போடுகிறார் எஸ்.பி.பி – எத்தனை மாற்றங்கள் குரலில்! ஆங்காங்கே பேசுவது போல மெட்டு அமைந்திருந்தாலும், பாடலுக்கு எஸ்.பி.பி. தரும் உயிர் இருக்கிறதே! அப்பப்பா! தாளம் போட வைக்கும் பீட்ஸையும், கொஞ்சம் கார்ட்ஸையும் கொண்டே மொத்த பாட்டையும் முடித்துவிட்டார் ரஹ்மான்.

காதல் அணுக்கள்

மென்மையான கிடார் ரிங்குடன் துவங்கும் மென்மையான காதல் பாடல் – விஜய பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷலின் குரல்கள். சைன்ஸ்-பிஃஷன் படம் என்றால், காதல் பாடலில் கூட அறிவியல் பேச வேண்டுமா? ந்யூடன், எலெக்ட்ரான் என்று என்னெல்லாமோ சொல்கின்றன வைரமுத்துவின் வரிகள். இசையின் ஆதிக்கம் இல்லாமல், கிடார், கார்ட்ஸ், லேஸான பீட்ஸ் என்று அழகிய மெலடியைத் தந்திருக்கிறார் ரஹ்மான். ரஜினி-ஐஸ்வர்யா டூயட்டைக் காணத்துடிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆசையைத் தீர்க்கப்போகும் பாடல் இதோ!

இரும்பிலே ஒரு இருதயம்

என்ன பாடுகின்றார்கள் என்று புரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்! கார்க்கியும் "காஷ் ண் க்ருஸி"யும் எழுதியிருக்கும் வரிகள்! ஒரு நிமிடத்திற்குப் பிறகு_ ரஹ்மான் பாட ஆரம்பிக்கும் பொழுதுதான் காதில் புரியும்படி விழுகின்றன. ரோபோ ஒன்று காதல் பாடல் பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க முடிகின்றதா? இந்தப் பாடலைக் கேளுங்கள் – புரியும்!

சிட்டி

படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வசீகரன் என்று பட்சி செய்தி சொல்லியது. அவர் ஒரு ரோபோ செய்கிறாராம் – அதன் பெயர் சிட்டியாம்! அந்த ரோபோ டான்ஸ் ஆடுவதற்கேற்றாற் போல இந்தப் பாடலில் . மீண்டும் டெக்னோவை அள்ளித் தந்திருக்கின்றார் ரஹ்மான். ஆங்காங்கே சில வரிகள்!மற்றபடி வெறும் இசை மட்டும்தான்! பிரவீன் மணி பாடல் எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து ப்ரதீப் விஜய்யும், யோகியும் பாடியிருக்கின்றார்கள். நடுவே மேற்கத்திய ஹார்மனி இசையும், ஏன் சொல்கட்டு ஸ்வரங்களும் கூட கேட்கின்றன.

அரிமா அரிமா

அரிமா என்றால் சிங்கம்தானே? ரஜினிகாந்திற்கு ஏற்ற பாடல் – பாடலின் இசையே ஒரு பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திவிட்டது. ட்ரம்பெட் போன்ற ஏதோ ஒரு கருவியில் அற்புதமான தொடக்கம்! அதன் பின்னர், ஹரிஹரன் "அரிமா அரிமா, நானோ ஆயிரம் அரிமா" என்று ஆரம்பிக்கின்றார். சாதனா சர்கமும் இணைந்து பாடுகின்றார். ஆங்காங்கே விஜய பிரகாஷும், நரேஷ் ஐயரும்கூட பாடுகின்றார்கள். ஷங்கரைப் பற்றி நன்கு தெரிந்ததால், இப்பாடலை எப்படி திரையில் காட்டப்போகிறார் எனும் ஆவல் இப்பொழுதே வந்துவிட்டது. வைரமுத்துவின் வரிகள் வேறு சக்கை போடு போடுகின்றன! "இவன் பேர் சொன்னது, பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்! இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதும் நிலவும் நிலவும் தலை முட்டும்" – ஆகா ஆகா ஆகா!!

கிளிமஞ்சரொ

இப்பாடலைத்தான் பெரு நாட்டில் அமைந்திருக்கும் மாச்சு பிச்சுவில் (இது ஒரு உலக அதிசயமாக்கும்) எடுத்தார்களாக்கும்? அங்கு எடுத்தால், பாடல் ஏன் ஆதிவாசிகள் பாடும் பாடலைப் போல் அமைய வேண்டும்? "அழகான ராட்சசியே" பாடலில் வந்தது போல இதிலும் வித்தியாசமான ஆடைகளைக் காட்டப் போகிறாரா ஷங்கர்? சரி சரி, கேள்விகள் போதும். பா.விஜய்யின் வரிகளில் இன்னுமொரு டூயட் இது. ஜாவேத் அலியும் சின்மயியும் அம்சமாக பாடியிருக்கின்றார்கள். குரலில் செய்யும் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சபாஷ் போட்டுவிடலாம். ரொம்ப சுலபமான மெட்டைத் தந்துவிட்டு அதையும் நம்மை ரசிக்க வைக்கிறார் ரஹ்மான்!

பூம் பூம் ரோபோ டா

கார்க்கியின் வரிகளில் யோகி, கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோஹன், தன்வி ஷா எல்லோரும் இணைந்து இப்பாடலைப் பாடுகிறார்கள். தீம் பாடல் போல. ஐஸாக் அஸிமோவ், ஐஸாக் நியூடன் என்று கவி பாடுகிறார்கள். அஸிமோவ் சைன்ஸ்-பிஃக்ஷனில் கலக்கியவர்! நியூடனோ எல்லோருக்கும் தெரிந்த அறிவியல் மேதை. ரசிக்ககூடிய பாடல். ஆங்காங்கு நடுவே மெட்டின் ‘மூடை’ மாற்றி அழகாய்த் தன் திறமையைக் காட்டியிருக்கிறார் ரஹ்மான்.

ரஜினிகாந்தின் படத்தில் வரும் பாடல்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்!! ஷங்கர் வேறு, ரஹ்மான் வேறு! படத்தை எப்பொழுது திரையரங்கில் காணப்போகிறோம் என்ற ஆவலைத் தூண்டுகின்றன இப்பாடல்கள். ஒரு அக்மார்க் ஆக்ஷன் – மசாலா திரைப்படத்தைக் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.

About The Author

4 Comments

  1. ravi

    ஷன்கர் யேன் இலயராஜவை ஒரு படதிக்கு கோட இசை அமைக்க செஇய மாடென்கிரார்?

  2. மாதவராஜ்

    ஷங்கர் உலகின் தலைசிறந்த இயக்குனராக வலம் வருவார்.
    எந்திரன் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.
    ஏ.ஆர்.ரஹ்மான் இசை இந்த படத்தின் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
    ஷங்கர் அவரின் அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைக்கிறார்.

  3. karthik

    sankar siruku our vandukol inneum ar rahman sira esai
    amaikka solathika..
    plz sir
    harris sir betterrrrrrrrrrrrrrrrr……

Comments are closed.