என்றும் இளமையோடு இருக்கலாமே!

சந்ததமும் இளமையோடு இருக்கலாம் (கந்து மதக் கரி பாடலில்) என்று தாயுமானவரும் ஏராளமான சித்தர்களும் கூறி உள்ளதை நவீன விஞ்ஞான உலகம் அங்கீகரிக்கிறது! அமெரிக்காவின் ஆன்டி-ஏஜிங் சொஸைடியில் (Anti-ageing society) ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகச் சேர்ந்து உள்ளனர். மேலும் சேர்ந்து வருகின்றனர்.

முதுமை அடைவது இயல்புதான் என்றாலும் அதற்கான அறிகுறிகளை வெகுவாகத் தள்ளிப் போடலாம் என்பதே அழகு மற்றும் நீடித்த ஆயுள் பற்றி ஆராய்ச்சி நடத்தும் விஞ்ஞானிகளின் கணிப்பு.

தங்களது ஆராய்ச்சிகளின் முடிவாக அவர்கள் சில டிப்ஸ்களை வழங்குகின்றனர். அவற்றில் முக்கியமானவை இதோ:-

1) சூரிய ஒளி தேவைக்கு அதிகமாக உடல் மீது படுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக காலையில் சற்று முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பலாம். UV தடுப்பு கண்ணாடிகளை அணியலாம். கடுமையான கோடை கால உஷ்ண நிலையில் வெளி விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.

2) UVA பாதுகாப்பிற்காக சன் கிளாஸ் அணிவது கண்களைப் பாதுகாக்கும். கண்களைச் சுற்றி சுருக்கங்களும் ஏற்படாது. இன்னொரு முக்கிய லாபம் – காடராக்ட் வருவதையும் இது தடுக்கும்!

3) நன்றாக ஊட்டச்சத்து மிக்க உணவைச் சாப்பிட வேண்டும். புத்தம் புதிய பழங்கள், கறிகாய்கள், பருப்பு வகைகள், கீரை வகைகள் அனைத்துமே நல்லவையே! இவை உங்கள் மேனியை மினுமினுப்பாக எடுத்துக்காட்ட உதவுபவை! பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

4) எடை கூடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிக முக்கியமான விஷயம். ஏனெனில் எடை கூடினாலும் சரி குறைந்தாலும் சரி, தோலை நீட்டிக்கிறது! மேலும் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

5) தோல் பராமரிப்புக்காக அன்றாடம் மாய்ச்சரைசர், க்ரீம் ஆகியவற்றைத் தோலின் வகைக்குத் தக்கபடி பயன்படுத்தலாம்.

6) தேவையான தூக்கத்தைத் தவற விடக் கூடாது. உங்கள் தோலின் பளபளப்பும், உடலின் மொத்த ஆரோக்கியமும் ஆழ்ந்த உறக்கத்தினால் மெருகேறும்; கூடும்! தோலின் சுய சரிப்படுத்துதல் வேலை அதிகமாக நடக்கும் திறன் தூக்கத்தில்தான் உள்ளது.

7) மன அழுத்தம் வேண்டவே வேண்டாம். இது உடலின் பல அமைப்புகளைப் தாக்குகிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் பெண்கள் ஏராளமானோர் வேலை பார்ப்பதால், வீட்டு வேலை, அலுவல் நெருக்கடி ஆகியவையும் சேர்கின்றன. சமூகத்தில் ஏற்படும் ப்ரஷர், சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசுகள் எல்லாம் சேர்ந்து ஆரோக்கியத்தையும் அழகையும் ‘ஒரு வழி பண்ணி’ விடுகின்றன. ஆகவே அளவான உடல் பயிற்சி, தியானம், பிரார்த்தனை ஆகியவற்றின் மூலம் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம்; தவிர்க்கலாம்! குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக்ஸ் ஆகலாம்.

8) ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களை டயட்டில் சேர்க்க வேண்டும். இதைப் பற்றி முதலில் நன்கு அறிதல் வேண்டும். லெமன் ஜுஸ், ஆப்பிள் துண்டங்கள் எனப் பெரிய பட்டியல் உள்ளது.

9) குப்புறப் படுத்து தூங்காமல் முதுகு கீழே இருக்கும் படியாகத் தூங்கினால் ஸ்லீப் க்ரீஸஸை (sleep creases) தவிர்க்கலாம்.

10) தோலின் மீது அதிக கவனம் தேவை. அதை மிகவும் அழுத்தமாகத் தேய்க்கக் கூடாது. கண்களைக் கசக்கக் கூடாது. மேக்கப் சாதனங்களைக் களையும் போது கவனமாக இருத்தல் வேண்டும்.

ஏராளமான பேர்களுக்கு மேலே கூறியவை ‘சரிப்பட்டு’ வராது! டென்ஷன், டென்ஷன், டென்ஷன்தான்!

குழந்தைகள். கணவர், அலுவலகம், போக்குவரத்து நெரிசல் என எல்லாமாகச் சேர்ந்து டென்ஷன் அன்றாட வாடிக்கை ஆகி விட்டது எனப் பெண்கள் கூறுவார்கள்.

அவர்களுக்காக ஒரு ஸ்பீட் சார்ட் இதோ! :

1) சூரிய ஒளியிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
2) ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்
3) எடையைக் கூட விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகென்ன, சந்ததமும் இளமையோடு இருக்கலாம்!

(நன்றி: ‘சினேகிதி – அக்டோபர் 09 இதழ்’)

About The Author

3 Comments

  1. prabha

    எனக்கு முடி ரொம்ப கொஇட்டுது அதர்கு என்ன செஇய வென்டும் அதர்க்கு யெதவது குரிப்பு சொல்லுன்கல் எனக்கு முடி நன்ட்ரக வலரனும்

  2. Amutha

    முகதில் பரு அடிக்கடி வருகிரது யதவது குரிப்பு சொஇல்லுஙல்+முடி கொஇட்டுகிரது

Comments are closed.