என்றென்றும் புன்னகை-இசை விமர்சனம்

2013-இல் ஹாரிஸின் இரண்டாவது படம். அஹமத் இயக்க ஜீவா, வினய், சந்தானம் முதலானோர் நடித்திருக்கிறார்கள். ஜாலியான படம் என்று முன்னோட்டக் காட்சிகள் சொல்கின்றன.

என்னைச் சாய்த்தாளே!

காதலில் விழுந்தவனின் வியப்பைப் பாடியிருக்கிறார்கள் ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல் இணைந்து. முழுக்க முழுக்கப் பாடலைக் காதலால் நிரப்பியிருக்கின்றன தாமரையின் வரிகள். மெலிதான பீட்டுகளுடன் நம்மையும் காதல் பாட வைக்கிறது. இடையில் வரும் சின்னச் சின்ன இசைக்கோவைகள் நல்ல ரசனை!

நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்!
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்!

கடல் நான்

ஆல்பத்தின் மிகப் பிரமாதமான பாடல்! சுதா ரகுநாதனின் குரல் மேற்கத்திய இசையில் நம்மைக் கட்டிப்போடுகிறது. காதல் கொண்ட பெண்ணின் மிக மென்மையான எண்ணங்கள் அழகாகக் கவிதையாக்கப்பட்டிருக்கின்றன. இனி எப்போதும், எங்கேயும் கேட்கலாம் விவேகாவின் இந்த வரிகளை.

தலைவா உன் தலைக்கினிமேல் – ஒரு
தலையணையாய் என் தொடையிருக்கும்!
மெதுவாய் உன் விழி துயில – என்
வளை குலுங்கி மெல்லிசை படிக்கும்!

என்னத்தச் சொல்ல!

கார்த்திக், வேல்முருகன், ஹரிசரண், ரமேஷ் விநாயகம் எனப் பெரும் பட்டாளமே சேர்ந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்! கல்யாணம் வேண்டாம், பிரம்மச்சாரி வாழ்க்கைதான் சிறந்தது என்பது பாட்டு. பாடல் அமைப்பில் சில சோதனை முயற்சிகள் செய்திருக்கிறார் ஹாரிஸ்.

அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன?
கொஞ்சம் எண்ணிப் பாருடா மாமா!
அவ உன்ன மிதிக்க செய்யும் ஒத்திகைதானே
நல்லாப் புரிஞ்சுக்கடா ஆமா!

ஒத்தையில

ஹிந்துஸ்தானி இசையின் சாயலில் நட்பு போற்றும் ஒரு பாடல் கபிலனின் பேனாவில் இருந்து. வரிகளில் நட்பின் பிரிவை அழகாக மனதில் விதைக்கிறார்.

வானெங்கும் நீ மின்ன

இதோ, வழக்கம்போல் கார்க்கியின் வரிகளுக்கு ஆலாப் ராஜுவின் குரல். பெண் வாசம் தெரியாதவன் மையல் கொள்கிறான், ஆண் வாசம் அறியாதவளும் ஆமோதிக்கிறாள். பிறகென்ன, ஹாரிஸின் மனதை மயக்கும் மற்றுமொரு மென் பாடல்!

அவன்:

பெண்வாசம் என் வாழ்வில் இல்லை என்பேனே!
உன் வாசம் நுரையீரல் தீண்டக் கண்டேனே!
மூச்சு முட்டத்தான் காதல் கொண்டேனே!

அவள்:

என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ!
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ!
எந்தன் வெட்கத் தீயில் குளிர் காயும் ஆணா நீ!

இது போக ‘ஏலே… ஏலே!’ என ஒரு பாடல் இருக்கிறது. அதைக் கேட்கும்போது ஏனோ ‘இரண்டாம் உலக’த்தின் பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதை விட்டாலும், சேர்த்தாலும் இது மற்றுமொரு வெற்றிப் படைப்பே!

என்றென்றும் புன்னகை – நிறுத்தாமல் புன்னகைக்கலாம்!

About The Author