என் கடைசி கடிதம்…

டியர் எட்வர்ட்..

என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ஏன் இப்படிî செய்தாய்? நாம் வாழ்ந்த வாழ்க்கை கொஞ்சம்கூட ஞாபகம் இல்லையா, உனக்கு? என் மீதான உன் காதல் உயிரிழந்து விட்டதா? நீதானே என் உலகம்! எப்படி உனக்கு என்னைப் பிடிக்காமல் போனது? இன்னும் நீ புதிராகவே இருக்கிறாய் எனக்குள்!

நான் பார்த்ததில் சிறந்த மனிதன் நீ என்று சொல்லமாட்டேன்; வித்தியாசமானவன் நீ! எது என்னை உன்னிடம் ஈர்த்தது? இசையின் அரிச்சுவடிகூடத் தெரியாதவள் நான்; நீயோ ஏகலைவனையும் மிஞ்சி தானாகக் கற்றுக்கொண்டு புல்லாங்குழல் வாசிக்குமளவு இசையின் மீது நாட்டம் கொண்டவன்! கவிதைகளில் வாழ்பவள் நான்; வார்த்தைகளை ஒதுக்கி மெளனத்தில் வாழ்பவன் நீ! சின்னச் சின்ன சந்தோஷங்களையும் சத்தமிட்டு பகிர்ந்து கொள்பவள் நான்; நீயோ சாதனைகளையும் சிரிப்புக்குள் ஒளித்து வைப்பவன்! ரசனைகளில் மட்டுமா, உருவத்திலும் ஒத்துப்போகாதவர்கள் நாம்! நெடிய, கரிய என் உருவத்திற்கு மாறாக உன் ரசனையைப் போலவே மென்மையான உருவம் படைத்தவன் நீ; இத்தனை வேற்றுமைக்குள்ளும் நமக்குள் உருவான காதல் அதிசயமானது. அந்த அதிசய நிகழ்விலிருந்து நான் இன்னமும் வெளிவரவில்லை.

உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப்படுத்தினேன், சிறு தயக்கத்துடன். என் காதலை நீ ஏற்றுக்கொண்ட விதமே ஒரு கவிதை-உன் புன்னகையும் சிறு தலையசைப்பும்; யார் சொன்னது, பெண்களுக்கு மட்டுமே வெட்கம் சொந்தமானது என்று?

ஆறு வருடங்களுக்கு முன் சிறு வெட்கத்துடன் நீ என் காதலை ஏற்றுக் கொண்டது, இன்னமும் என் மனதில் உள்ளது. வாழ்க்கை வாழ்வதற்குதானே! உறவும், நட்பும் சூழ நாம் வாழ்க்கையைத் துவக்கிய அந்த நாள், என்ன சொல்ல!?

நினைவிருக்கிறதா, கல்யாணத்தின் முன் நாள் இரவு..? அன்று நீ பேசியதுதான் இதுவரை நீ என்னிடம் பேசியவற்றிலேயே அதிகமாக, கோர்வையாகப் பேசியது. நீ வெளிப்படுத்திய `உன் விருப்பங்களும், வாழ்க்கை முறையும் உன்னிடம் காணாத ஒரு சராசரி மனிதனைக் காட்டியது. எப்படி உன்னுள் இருந்த சராசரி மனிதனைக் கவனிக்கத் தவறினேன்? நாணத்தில் தலை குனிந்து காதலுடன் விடிய வேண்டிய அந்த திருமண நாள் எனக்கு குழப்பத்துடனே விடிந்தது.

”நிஜமாக நீ என்னை நேசிக்கிறாயா? என்னை உனக்குப் பிடிக்குமா? அல்லது உன் தேவைகளை என் வருமானமும் நானும் பூர்த்தி செய்வோம் என்ற எண்ணத்தில் என்னை ஏற்றுக் கொண்டாயா?” – இத்தனை குழப்பங்களுடன் நான் கர்த்தர் முன்னிலையில் நிற்க, ஃபாதரிடம் கல்யாண உடன்படிக்கைக்கு, நீ ”ஆம்” என்று ஒருவிதப் பெருமிதத்துடன் என்னைப் பார்த்தபடியே கூறியது என் குழப்பங்களை நீக்கியது.

என் உருவம் குறித்து எனக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை வெளிப்படாமல் உன்னுடன் வாழவேண்டும் என்ற உறுதியுடன் நானும் உடன்படிக்கையில் ஒப்பமிட்டேன்.

அடுத்த ஒன்றரை வருடம் நாம் வாழ்ந்த வாழ்க்கை, உன்னைப் போய் தவறாக எண்ணி கல்யாணத்தின்போது குழம்பித் தவித்தேனே என்று என்னை கேலியல்லவா செய்தது? உன் முத்தத்தில் விடியும் என் பொழுது, அயர்ந்து தூங்கும் உன் நெற்றியில் என் உதடுகள் ஒற்றியெடுக்க முடிந்து போகும்.

காதலுடன் ஆரம்பித்து சின்னச் சின்ன ஊடல்களுடன் தொடர்ந்து, மோகத்துடன் முடிந்து போன அந்த நாட்கள்! ஊடலின்போது நமக்குள் உடன்படிக்கை ஏற்படுத்தும் அந்த மெயில்கள் இன்னும் என் இன்பாக்ஸில் நினைவுப் பொக்கிஷங்களாய் உள்ளன.

நம் முதல் கல்யாண நாள்! நம் காதல் நாட்களில் நான் எழுதிய கவிதைக்கு மெட்டமைத்துப் பாடினாயே, அந்தப் பாடல்தான் நாம் பிரிந்திருந்த நாட்களில் எனக்கு ஆறுதல்! ஆம், நீ புனேயில் இருந்த நாட்களைத்தான் சொல்கிறேன்.

எத்தனை தவிப்புடன் சென்ற நாட்கள் அவை! நீ திரும்பி வரும் நாளுக்காகத் தவமிருந்தேன். ஒவ்வொரு நாளும் நாம் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு கவிதையாய் வடித்து உனக்காகக் காத்திருந்தேன். திரும்பி வந்த உன்னிடமதான் எத்தனை மாறுதல்கள்!

என்னை எழுப்பும் உந்தன் முத்தமில்லை; நாம் பகிர்ந்து கொள்ளும் காஃபி எனக்காகக் காத்திருக்கவில்லை; உந்தன் சில்மிஷங்கள் இல்லை; உன்னை நீயாக அடையாளம் காட்டும் அந்த சிறு முறுவல் இல்லை. ஆனால் உந்தன் அன்பு இருந்தது; எனக்காக சாப்பிடக் காத்திருக்கும் கனிவு இருந்தது; உந்தன் கவனிப்பில் என் மீதான அக்கறை தெரிந்தது. ஏன் இந்த மாற்றம்? என்ன ஆயிற்று உனக்கு? எப்படிக் கேட்பது உன்னிடம்? யோசிக்கும்போது புரிந்தது, புனே பிரயாணம் உனது சராசரி மனிதனை வெளிக் கொணர்ந்துள்ளது என்று.

நம் சூழலைப் பற்றிய பிரக்ஞையில்லாமல் ஒரு தனி உலகத்தில் அல்லவா சஞ்சரித்துக் கொண்டிருந்தோம்! உனது பயணம் உனக்கு அந்த உண்மையை உணர்த்த, உன் வழி நானும் உணர்ந்தேன். ஆனால் உணர்த்தியவிதம், சற்றே வலித்தது. வார்த்தைகளைச் சிறையிடாமல் வலிக்காமல் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. இப்போது உணர்கிறேன், இப்படி நானாக முடிவெடுத்தது தவறென்று. நானாவது உன்னிடம் என்னவென்று கேட்டிருக்கலாம், அப்படிக் கேட்டிருந்தால், நம் நிரந்தர பிரிவு அப்போதே தகர்க்கப்பட்டிருக்கலாமோ?

அடுத்து வந்த ஒரு வருடமும் நமது அன்னியோன்யம் மெல்ல மெல்ல உடைய ஆரம்பித்தது. அதில் உந்தன் கனிவும், கண்ணியமும் காணாமல் போயின. என் அன்போ, அனுசரணையோ பயன்படாமல் போனது. ஏதோ ஒன்று உன் மனதை அரிப்பதை உணர்ந்தேன். ஆனால் என்னவென்று புலப்படவில்லை.

எப்படிப் பெற்றாய் ஆல்கஹாலின் சினேகத்தை? வார்த்தைகளை முடக்கிப் போட்ட உன் மீது கோபம் வந்தது. கொட்டிவிட்டேன் – என் கோபம், என் குழப்பம், என் சந்தேகம், என் கண்ணீர் எல்லாவற்றையும். எல்லாவற்றுக்குமான உன்னுடைய பதில் …. ”முடியல சாரா. உன்னோட வாழப் பிடிக்கல. ஆனா நீ என்னை அதிகமா நேசிக்கிற. என்னைத்தான் உலகமா நினைக்கிற. அதனால உன்ன நேருக்கு நேரா பார்க்க முடியல. உன்கூட சேர்ந்து வாழவும் முடியல. தப்பு பண்ணிட்டனோன்னு தோணுது. இந்தக் கல்யாணம் தப்பு. நம் காதல் தப்பு…..” பேசிக் கொண்டே போனாய், நான் விலகி வந்தது கூடத் தெரியாமல்.

இதற்கு எப்போதும் போல் நீ மவுனமாகவே இருந்திருக்கலாம், எட்வர்ட். எப்படி உனக்கு என்னைப் பிடிக்காமல் போனது? அது போலவா நான் உன்னுடன் வாழ்ந்தேன்? எதை நினைத்து கல்யாணத்தின்போது குழம்பினேனோ அது ஐந்து வருடங்களுக்குப் பின் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

என் காதல் நிஜம்; நாம் வாழ்ந்ததும் நிஜம். அது உனக்கு அலுத்துப் போய்விட்டது என்ற நிஜத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீ சராசரி மனிதனோ இல்லையோ, நான் சராசரிப் பெண்ணாக, பிடிக்காத உன்னுடன் விதியை நினைத்து வாழ விரும்பவில்லை. விலகி விடுகிறேன், உன்னிடமிருந்து மட்டும்தான்; வாழ்க்கையின் மீதான என் காதல் பொய்க்காமல் இருக்கும்வரை உயிரோடிருப்பேன். இத்துடன் என் கையெழுத்திட்ட விடுதலைப் பத்திரம் இணைத்துள்ளேன். விடைபெறுகிறேன். இனியாவது சரியான துணையைத் தேர்ந்தெடு. வாழ்த்துக்கள்!

காதலுடன்,
சாரா.

About The Author