ஐ லவ் யூ

நினைக்க நினைக்க மனத்தின் அரற்றல் அதிகமாகிக் கொண்டே போனது ஜானாவிற்கு.

"ச்சே….என்ன வார்த்தை பேசி விட்டான்"

இத்தனைக்கும் அருணும் அவளும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள். இவளுடைய சரளமான பேச்சும், கலகலப்பான சுபாவமும், வெடுக்கென்று வரும் பதில்களும் அவனை மிகவும் கவர்ந்து விட்டன.

"உன் கிட்டே எனக்குப் பிடிச்சதே இந்த சுபாவம் தான் ஜானா" என்று திருமணத்திற்கு முன் பல தடவைகள் சொல்லியிருக்கிறான்.

சில நண்பர்களின் ஆதரவும் சேர, தடைகள் எல்லாம் விலகி இவர்கள் கல்யாணம் நடந்தது.

குறிப்பாக…..ராஜனுடைய உதவி.

இவள் தளர்ந்து போன போதெல்லாம் ஆறுதல் சொல்லி தைரியமூட்டியவன்.

"என்னோட உதவி உனக்கு நிச்சயம் உண்டு ஜானா. உங்க வீட்டுல சொல்லி சம்மதிக்க வைக்கிறது என்னோட பொறுப்பு" என்பான்.

அருணின் வீட்டிலும் பேசி அவர்களை இணங்க வைத்ததும் ராஜந்தான். அப்படிப் பட்டவனைப் பற்றியா….ஜானாவுக்குக் கசந்தது மனசுக்குள்.

காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பியவனை வழிமறித்தாள்.

"ஏன் இப்ப ராஜனைப் பார்க்க முடியலை…இங்க வரவே இல்லையே"

"ப்ச்"

"ஏதாவது உடம்பா.." என்றாள் மறுபடியும்.

நாத்தனார் சந்திராவின் கேலிச்சிரிப்பை அவள் கவனிக்கவில்லை. அருணுக்கு அவள் ஏதோ சைகை செய்ததையும் அவள் பார்க்கவில்லை.

"இன்னைக்கு போன் பண்றீங்களா…"

பட்டென்று வெடித்தான்.

"ஸ்டாப் இட் ஐ ஸே. இனிமே அவன் இங்கே வரமாட்டான். நீயும் அவனைப் பற்றி பேசக் கூடாது."

"ஏன்…என்ன தப்பு அதிலே.. "

" ச்சீ…என்ன தப்புன்னா கேட்கறே…கல்யாணத்துக்கு முன்னால நீ எப்படி வேணா இருந்திருக்கலாம். ஆனா இப்ப என் கண்ட்ரோல்லதான் நீ இருக்கணும். புரிஞ்சுதா…"

முகம் சிவந்து கண்கள் கலங்கி விட்டன அவளுக்கு. அவன் இரைச்சல் மனசுக்குள் அவமானம் தர, வழக்கமான சுபாவத்துடன் வாயாடினாள்.

"ஏன்….இப்படி என்னவோ போல பேசறீங்க. உங்களுக்கு என்ன பைத்தியமா?"

"பளார்."

வாங்கிய அறையில் திடுக்கிட்டுப் போனாள் ஜானா.

"நானும் கவனிச்சுக்கிட்டு தான் வரேன். அவனுக்குத் தான் அறிவில்லேன்னா உனக்கு எங்கே போச்சு.கையைத் தொட்டு….தூக்கி விளையாடற வயசா….இது. ஏய்….உனக்கு இதுதான் கடைசி வார்னிங். இனிமே அவன் இங்கே வர மாட்டான். நீயும் ஒழுங்கா இருக்க முயற்சி பண்ணு".

விருட்டென்று வெளியே போய்விட்டான். ஜானா கண்ணீரை அடக்க முடியாமல் பெட்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டு விட்டாள்.

துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. என்ன நடந்தது…ஏன் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறான்.

சமீப காலமாகவே அவன் செயல்கள் ஒவ்வொன்றும் விசித்திரமாகவே இருந்தன. காதலிக்கும்போது பரஸ்பரம் இருந்த நல்ல குணங்கள் மட்டும்தான் புலனாகின. இப்போதோ எதற்கு எடுத்தாலும் பொறுமையிழப்பதும் ஆங்காரத்துடன்
வெடிப்பதுமான அவனது இன்னொரு பரிமாணம் அவளைப் பயமுறுத்தியது.

என்ன பேசிவிட்டான்….

இரண்டு மாதங்களுக்கு முன் மூவருமாக ஒரு சினிமாவிற்குப் போனார்கள்.

ராஜன் வெகு நாட்களுக்குப் பின் அன்று தான் வந்திருந்தான். இவர்களின் திருமணத்திற்குப் பின் அடிக்கடி வருவதில்லை.

அந்த சந்தோஷத்தில் ஹோட்டலில் டிபன், சினிமா என்று ஏற்பாடானது.

டிபன் சாப்பிட்டதும் ராஜன் வேடிக்கையாக சேரில் சாய்ந்து கொண்டான்.

"ஹப்பா…..டிபன் ஃபுல். என்னால எழுந்திருக்க முடியலே."

ஜானா வேடிக்கையாக சட்டென்று கைநீட்டினாள்.

"தாத்தா….இதைப் பிடிச்சுகிட்டு எழுந்திருங்க…"

ராஜனும் விகல்பமின்றி அவள் கையைப் பற்றி எழுந்து கொண்டான்.

"சரி., சரி…ஒரு பாட்டியைத் தேட வேண்டியது தான். அப்ப தான் ஜோடிப் பொருத்தம் இருக்கும்" என்றாள் மேலும் கிண்டலாக.

அருண் அப்போது எதுவும் பேசவில்லை. மனம் சங்கடப்பட்டதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.

"இத்தனை நாட்கள் அதை மனத்தில் வைத்திருந்து …..ச்சே…..அன்றே கண்டித்திருந்தால் கூட வருத்தம் வந்திருக்காது ஜானாவிற்கு. இவ்வுளவு நாட்கள் கழித்து இப்போது சொல்லிக்காட்டுகிறானே…

மாலையில் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அவளைப் பற்றி விசாரிப்பது கேட்டது.

"அவ எங்கே…? "

"ரூமில தான் இருக்கா…"

"சாப்பிட்டாளா?"

"ஊஹூம். கூப்பிட்டா பதிலே இல்லே. அவ வீட்டுலேர்ந்து லெட்டர் வந்தது. பதில் எழுதிக்கிட்டிருந்தா…"

அருண் பெட்ரூமிற்குள் வந்தான். அவளைக் கவனிக்காதவன் போல ஷர்ட்டை ஹேங்கரில் மாட்டினான். கைலிக்கு மாறிக் கொண்டான்.

ஜானா எழுந்து பாத்ரூமிற்குப் போனாள். குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் கொஞ்சம் தெம்பாக இருந்தது. சோப்போட்டு அலம்பிக் கொண்டு, டவலைத் தேடி துடைத்துக் கொண்டு, பெட்ரூமிற்குத் திரும்பியவள் அதிர்ந்தாள்.

இவள் வருவதற்குள் படிக்க வேண்டும் என்ற பரபரப்புடன் ஒட்டப்பட்டிருந்த அந்த இன்லண்டின் இரு பக்க இடைவெளிகள் வழியாக உள்ளே எழுதியிருப்பதைப் படிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

பிறந்த வீட்டிற்கு அவள் எழுதிய கடிதம் அது.

‘என்ன இங்கிதமற்ற செயல்’. மனசுக்குள் அருவருப்பானது அவளுக்கு.

கேட்டால் நிச்சயம் பிரித்துக் காட்ட அவள் தயங்கப் போவதில்லை. படிப்பதையும் தவறாக நினைக்கவில்லை. ஆனால் இதைச் செய்யத் தூண்டிய அவனின் அவநம்பிக்கையும், பயமுமே அவளை வெறுப்படைய வைத்தன.

அவளைப் பார்த்ததும் முகம் வெளிறியது அருணுக்கு.

அருகில் நெருங்கி இன்லண்டைப் பிரித்து அவனிடம் கொடுத்தாள்.

"ம்….இப்ப படிங்க.."

அவன் அதை வாங்கவில்லை.அவள் பார்வையை எதிர்கொள்ள கூச்சப்பட்டான்.

"உங்களுக்கு நினைவிருக்கும்னு நம்பறேன். நாம லவ் பண்ணும் போதே பேசினதுதான். எப்பவும் நாம மனசு விட்டுப் பேசி, நமக்குள்ளே எந்த விதமான வருத்தமோ, சண்டையோ, இல்லாம கடைசி வரை, ஹாப்பியா இருக்கணும்னு முடிவு பண்ணோம்.
ஞாபகம் இருக்கா…?"

தளர்ந்து கட்டிலில் அமர்ந்தான்.

"என் மேல சந்தேகமா இருந்தா,வெளிப்படையா கேட்டுடலாமே, அதை விட்டுட்டு…ஆனா ஒண்ணு….என்னைப் பொறுத்த வரை இது நம்ம பிரச்னை….இதைப் பத்தி நிச்சயமா எங்க வீட்டுக்கு எழுத மாட்டேன்."

இன்லண்டை மேஜையின் மேல் வைத்தாள்.

"உங்களுக்கு எதனால இப்படியொரு தவறான நினைப்பு வந்ததோ….எனக்குப் புரியலே……" என்று நிறுத்தினாள்.

பிறகு நிதானமாக ஆனால் அழுத்தமாகச் சொன்னாள்.

"ஐ லவ் யூ…..ஐ லவ் யூ ஸோ மச்…..நீங்க நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி….."

மெல்ல உடைந்து அழ ஆரம்பித்தாள்.

கூச்சலிடாமல், வாதம் செய்யாமல், பூரணமாக வெகு இயல்பாக அவள் அன்பின் வெளிப்பாடு நிகழ்ந்ததில் அவன் மனசாட்சி தொடப்பட்டு விட்டது. காலை முதல் தனது செயலின் முட்டாள்தனம் குறித்து உறுத்திக் கொண்டிருந்த மனத்தின் கனமும்
சேர்ந்து கொண்டது.

அவளை நெருங்கி கைகளைப் பற்றிக் கொண்டான்.

"தன் மேல் எவ்வுளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்…இவ்வளவுக்குப் பிறகும்…."

நிமிர்ந்து பார்த்தவளிடம் உண்மையான தவிப்புடன் சொன்னான்.

"ஐயாம் ஸாரி…..ரியலி ஸாரி ஜானா"

நிர்மலமான மனசுடன் மீண்டும் சொன்னான்.

"நாளைக்கு ராஜனுக்கு ஃபோன் பண்றேன்….வரச் சொல்லி.."

About The Author

3 Comments

  1. Mannai Pasanthy

    ஐ லவ் யூ கதை படித்தேன் மிகவும் அருமை
    ஐ லவ் யூ ரிஷபன்
    மன்னை பாசந்தி

  2. sathish kannan

    மண வாழ்க்கையில்
    மனம் திறந்த பேச்சு என்பது
    மடை திறந்த சந்தோசம், அடைபடும் சந்தேகம்.

    கதை மிக அருமை……

  3. sarathy

    This is controlled human behaviour!
    We cannot escape it!
    Different countries/ethnics have different behavioural practices in male/female relationships!
    Story writers exploit such situations and get mass sympathy!
    Who are we to control human behaviour?!
    Its all natural according to clanship practices.

Comments are closed.