ஒன்றும் அறியாத பெண்ணோ -1

"என்னைக் கொண்டுபோய் எங்கப்பா வீட்டில விட்டுடுங்க…"

அழுது வீங்கிய முகத்தோடு அவனிடம் விண்ணப்பித்தாள் ரம்யா.

"என்னால் முடியாது…… நீயே போ… “

ரம்யாவை ஏறெடுத்தும் பார்க்காமல் கணினியை முறைத்தபடியே பதில் சொன்னான்.

"குழந்தையை வச்சிகிட்டு என்னால எப்படி தனியாப் போக முடியும்?"

"மனு ஒண்ணும் குழந்தையில்ல, மூணு வயசு ஆவுது. இஷ்டம்னா அழைச்சிட்டுப் போ…இல்லைனா…இங்கயே இருக்கட்டும், நான் பாத்துக்கறேன்…"

"நான் போகமாட்டேன்னு நினைச்சிங்களா…? போய்க் காட்டுறேன் பாருங்க…. ஆனா… ஒண்ணு… போனா திரும்பி வரவே மாட்டேன்."

அடக்கி வைத்திருந்த அழுகை மறுபடியும் அணையுடைத்தது. சுந்தர் சிரித்தான்.

"முதல்லே நீ போ… அப்புறமா திரும்பி வரதைப் பத்திப் பேசலாம்"

"என்னை ஒண்ணுந்தெரியாதவள்னு நினைச்சிதானே இப்படி கேவலமா நடத்துறீங்க…? என் அருமை உங்களுக்கு இப்ப தெரியாது… நான் போனதுக்கப்புறம்தான் தெரியும்"

"சும்மா வாய்சவடால் விட்டுகிட்டு இருக்காத… ஒழுங்கா… வீடடங்கி இரு"

"முடியாது… எனக்கு இப்பவே எங்க வீட்டுக்குப் போவணும், டிக்கெட் புக் பண்ணுங்க…"

"உனக்கு வேணும்னா நீயே புக் பண்ணிக்கோ… இது நல்லா இருக்கே… நான் புக் பண்ணித் தருவேனாம்… இந்தம்மா சொகுசா ஊருக்குப்போய் எறங்கிட்டு என்னைப் பத்தி அப்பாருகிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவாங்களாம்…. அவரு உடனே நியாயம் கேக்க கெளம்பி வருவாரு… எம்பொண்ணை அப்படி வளத்தேன், இப்படி வளத்தேன், தங்கத் தாம்பாளத்தில ஏந்தி வளர்த்தேன்னு புராணம் பாடிட்டு புத்திமதி சொல்லி விட்டுட்டுப் போவாரு… அதானே நடக்கும்….அதுக்கு வேற ஆளைப் பாரு…"

கொஞ்சமும் தாட்சண்யமில்லாமல் வெளிப்பட்டன வார்த்தைகள். ரம்யா அதிர்ந்துபோனாள். இவனுடைய சுயரூபத்தை இத்தனைநாள் மறைத்து எப்படியெல்லாம் நாடகமாடியிருக்கிறான். நான் கசந்துவிட்டேனா? இல்லையென்றால் இத்தனை நாள் இல்லாத அலட்சியமும், உதாசீனமும் திடீரென்று எப்படி வரும்?

போனவாரத்தில் ஒருநாள்….

"ஏங்க, நம்ம மனோஜுக்கு ஸ்கூலில் அப்ளிகேஷன் வாங்கிட்டுவரச் சொன்னேனே… என்னாச்சு?"

"மறந்திட்டேன்மா…"

"எவ்வளவு முக்கியமான விஷயம், எப்படி மறக்கும்? ஒரு நாளா, ரெண்டுநாளா? ரெண்டுமாசமா சொல்லிட்டிருக்கேன், நாளைக்குதான் கடசிநாள். நாளைக்காவது மறக்காம வாங்கிட்டுவாங்க.."

"முடியாது, ரம்யா…. எனக்கு நாளைக்கு ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு… நீ போய் வாங்கிட்டு வந்திடு"

"என்ன, விளையாடறீங்களா? எனக்கு அங்கெல்லாம் போய் பழக்கமில்ல, நாலுபேரை சேந்தாப்போல பாத்தாலே வெடவெடங்குது… அதுவுமில்லாம எல்லாரும் இங்கிலிஷ்ல பேசுவாங்க."

"ரம்யா… ஓவரா அழிச்சாட்டியம் பண்ணாத…. நீயும் படிச்சவதானே… அப்புறம் எதுக்கு பயப்படுறே? போ… போய் வாங்கிட்டு வா…"

"என்னால் முடியாது… இங்கயிருந்து எந்த பஸ்ல போகணும்னு கூட தெரியாது…"

"பழகிக்கோ…. நான் சொல்றேன்"

"உஹும், அதெல்லாம் சரியா வராது, நீங்க ஒரு பத்துப்பதினஞ்சு நிமிஷம் பர்மிஷன் போட்டுப் போகக்கூடாதா?"

"ச்சே! உன்னோட பெரிய போராட்டமா போச்சு, நீதான் அந்த ஸ்கூலப் பத்தி ஆகா ஓகோன்னு புகழ்ந்து குழந்தையைச் சேக்கணும்னு பிடிவாதம் பிடிச்சே… இஷ்டம்னா போய் அப்ளிகேஷன் வாங்கிட்டு வா… இல்லைனா… பக்கத்தில் இருக்கிற ஸ்கூல சேத்துக்கலாம். சின்ன கிளாஸ் தானே? எங்க படிச்சா என்ன?"

கண்கள் கலங்க வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அடுக்களை புகுந்துவிட்டாள். மெளனயுத்தம் அடுத்தநாள் காலையும் தொடர்ந்தது. சுந்தர் மசிவதாய் தெரியவில்லை. ஒரு பேப்பரில் பேருந்து எண், வழித்தடம், மற்ற விவரங்கள் எல்லாவற்றையும் எழுதி, பணத்தையும் வைத்துவிட்டு அலுவலகம் கிளம்பிச்சென்றுவிட்டான்.

எல்லாவற்றுக்கும் இவனைக் கெஞ்சிக்கொண்டிருப்பதால்தானே இத்தனை பிகு செய்துகொண்டிருக்கிறான்? துணிவை வரவழைத்தவளாக, அடுத்தவீட்டு ரஞ்சிதம் மாமியை அழைத்துக்கொண்டு பஸ் ஏறிவிட்டாள்.

எப்படியோ விண்ணப்பப் படிவம் வாங்கி வீடு வந்து சேருவதற்குள் ஒரு மலையைப் பெயர்த்தமாதிரி இருந்தது. பெருமூச்சு வாங்க ஓய்ந்துபோனாள். பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதுபோலவும் பூரிப்பில் மிதந்தாள்.

மாமி இவளைப் பார்த்துச் சிரித்தாள். மாமிக்கு தினமும் வெளியில் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். மாமா அலுவலகம் போனதும் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாள். நாலு சுவருக்குள்ளே இருந்தா மூச்சு முட்டுதுடி என்பாள். இவளோ நேர் எதிர். எவருடனும் சகஜமாய்ப் பழகியதும் கிடையாது. கேள்வி கேட்டால் பதில் சொல்லுவாள். அதுவும் பெரும்பாலும் ஆமாம், இல்லை வகையறாதான். இவள் கஷ்டத்தை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

"என்ன, அப்ளிகேஷன் வாங்கியாச்சா?"

"ம்"

"அதையேன் உம்முனு சொல்றே? சந்தோஷமாதான் சொல்லேன்"

"எத்தனைக் கஷ்டப்பட்டு போனோம் தெரியுமா?"

"யார்கூட போனே..?"

"ரஞ்சிதம் மாமியோடதான்"

"அதானே பார்த்தேன், என்னடா இது சரியான பயந்தாங்கொள்ளியாச்சே… எப்படிப் போனதுன்னு?"

கிண்டலடித்தான். இவள் விசும்பத்தொடங்கினாள்.

"ரம்யா… என்ன இது? சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுதுகிட்டு? சரி, நீ பயந்தாங்கொள்ளி இல்ல, தைரியசாலிதான், உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கித்தரேன், கத்துக்கறியா? பஸ்ல இடிபடாம போய்வரலாம்."

"ஐயையோ… என்னால முடியாதுப்பா…"

"எதுதான் முடியும் உன்னால, என்கிட்ட நல்லா வாயாடு… ஏதாவது சொன்னா அழு… ரெண்டையும் விட்டா வேற எதுவும் தெரியாது"

சிடுசிடுத்தான். ரம்யாவுக்கு பிறந்தவீட்டு நினைவு வந்தது.

எல்லோரும் இவளை என்னமாய்த் தாங்கினார்கள். ஒரு சுடுசொல் கேட்டதில்லை. இளவரசியைப் போன்ற வாழ்க்கை அது. இன்னது வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும், அடுத்த நிமிடமே அது அவள் காலடியில் கிடக்கும்.

எங்கு வெளியில் செல்வதானாலும் காரில்தான் பயணம். அப்பா, சித்தப்பா, மாமா என்று எப்போதும் இவளைச்சுற்றி ஒரு பெரும்படையே இருக்கும். எவரும் அவளைக் கண்ணோட்டமிட முடியாது. நடு சித்தப்பா பாய்ந்து சட்டையைப் பற்றிவிடுவார்.

கல்லூரியோ பெண்கள் கல்லூரி. காலையிலும் மாலையிலும் அவளைக் கொண்டுவந்து விடுவதும் அழைப்பதும் குட்டிமாமாவின் வேலை. தரையில் இறங்கி நடக்கவிடாமல் உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய குடும்பத்தைப் பிரிந்து இப்படி பஸ்ஸில் நெறிபட்டும், இடிபட்டும் தான் செல்ல நேரிட்டதை எண்ணி மனம் புழுங்கியது.

திருமணத்தின்போது ரம்யாவின் அப்பா கார் வாங்கித்தர முன்வந்தபோது சுந்தர் தீவிரமாய் மறுத்துவிட்டான். மாமனார் காசில் வாங்கினால் கெளரவம் கெட்டுவிடுமாம். என்ன பெரிய கெளரவம், இப்படி பதுமை போல் வளர்ந்த பெண்டாட்டியை தனியாக பஸ்ஸில் அனுப்புவது மட்டும் கெளரவமான செயலா?

ஆற்றாமையால் மனம் புழுங்கியது. ஆரம்பத்தில் இவனும் அத்தனை இதமாகத்தான் நடந்துகொண்டான். எதைக் கேட்டாலும் வாங்கித்தந்தான். என்ன சொன்னாலும் செய்தான். கொஞ்சநாளாக ஏதோ கிறுக்குப் பிடித்தவன்போல் நடந்துகொண்டு இவளைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறான். கேட்டால்… நான் இல்லையானால் என்ன பண்ணுவ? என்றொரு கேள்வி. அப்படியென்ன வந்துவிடும்? நோய்நொடி எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.

குழம்பியிருந்தவளைக் குமுறவைத்தது நேற்றைய நிகழ்வு.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. கலையரசி

    கணவன் மனைவி இருவருக்குமிடையே நடக்கும் சண்டை சச்சரவு யதார்த்தமாக உள்ளது.
    குழம்பியிருந்தவளைக் குமுறவைத்த நேற்றைய நிகழ்வு என்ன? என்பதை அறிய ஆவல். தொடருங்கள் கீதா!

  2. Gayathri

    Endha Kathai Supper Supper OOOOOOOO Supper Eppadi Oru Ponnu Endha Kalathil Eppadi Oru Ponnu Nijama erukka Maattaaaaaaaaaaa
    Eppadi Yarenum Erundhal thayavu seithu Mathikoonga
    This is my request

Comments are closed.