ஒரு அடிமையின் கதை-8

பருத்தித் தோட்டங்களில் அடிமையாக உழலும் கறுப்பினத்தவர் நிலையைவிட புகையிலைத் தோட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் எவ்வளவோ வசதியாக இருக்கிறார்கள். ஒரு புகையிலைத் தோட்டத்தில் அதிகபட்சம் 100 பேர்தான் வேலை செய்வார்கள். ஆனால் பருத்திப் பண்ணைகளிலோ ஒரே பண்ணையில் 400, 500 க்கும் அதிகமானவர்கள் வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். மாரிலான்டில் தோட்ட சொந்தக்காரர்கள் அனேகமாக வருஷம் முழுவதும் வீட்டிலேயேதான் இருப்பார்கள். அவர்களது மனைவிகளும் பனிக்காலங்களில் சில வாரங்களைத் தவிர மற்ற நேரங்களில் தங்களது வீடுகளில்தான் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால் அவர்களால் அடிமைகளின் கஷ்டங்களை அறிய முடிகிறது. அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களது கணவன்மார்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அடிமைகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுக்கிறார்கள்: அடிமைகளில் நலனிலும் அக்கறை காட்டுகிறார்கள்.

வீட்டில் இளம் பெண்கள் இருந்தால் அவர்கள்கூட தங்கள் பள்ளிப் படிப்பு முடிந்து திருமணம் ஆகும் வரை வீட்டில் இருப்பார்கள். அந்த நேரங்கள் அவர்கள் கருப்பு அடிமைப் பெண்களில் யாரிடமாவது பரிவு காட்டுவார்கள்: .தங்களுக்குச் சொந்தமானவர் என்று உரிமை கொண்டாடுவார்கள். அந்தப் பரிவும் அன்பும் அவர்களுடைய அப்பா அம்மா என்று குடும்பத்திற்கே தொடரும். இதே போலத்தான் வீட்டின் இளைஞர்களும். கருப்பு அடிமைகளில் சிலர் அவர்களுக்குப் பிடித்தமானவராக இருப்பார்கள்.அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களிடம் மேற்பார்வையாளர் கடுமையாக நடந்துகொண்டால் பரிந்து கொண்டு வருவார்கள்.. இவையெல்லாம் எஜமானரும் அவரது குடும்பமும் அங்கேயே வீட்டில் வசித்தால்தான் கிடைக்கும்.. மாரிலான்டில் நான் இருந்தபோது எங்களது குறைகளுக்கு செவிசாய்க்காத எஜமானியையோ அல்லது சின்ன எஜமானியையோ பார்த்ததில்லை. அவர்களிடம் மிகவும் பணிவாக சிரம் தாழ்த்திச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதான் இரைந்து பேசக்கூடாது – மிகவும் தாழ்ந்த குரலில் கைகட்டி வாய் புதைத்து நின்று பேச வேண்டும். ஆனால் அந்தத் தாழ்வுக்கும் பணிவிற்கும் பதிலாக எங்களுக்கு ஆதரவான வார்த்தைகளும் எங்கள் துன்பத்திற்குத் தீர்வும் கிடைக்கும். "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எஜமானரைத்தான் கேட்கவேண்டும்" என்று சொல்லும் எஜமானிகளும் உண்டு. பெரிய குடும்பத்து எஜமானிகள் அடிமைகளிடம் இரைந்துபேசமாட்டார்கள் -இதற்கும் விதிவிலக்கு உண்டு. குறைகளைச் சொல்லவரும் அடிமைகளுக்கு அவர்களது மேற்பார்வையாளரை வரவழைத்து சவுக்கடி கொடுக்கச் சொல்லும் சிலரும் உண்டு. நான் வர்ஜீனியாவிலோ அல்லது மாரிலான்டிலோ ஆபாசாமாக அடிமைகளைத் திட்டும் எஜமானிகளைக் கண்டதில்லை. ஆனால் ஜார்ஜியாவில் அப்படியில்லை. மாரிலாந்திலும் சவுக்கடிகள் உண்டு என்றாலும் ஜார்ஜியாவைப்போல தொடர்ந்து கொடுமைப்படுத்தும் வழக்கம் அங்கு கிடையாது. யாராவது அடிமை தவறு செய்தால் அவனைக் கடுமையாகத் திட்டுவதோடு சாட்டையாலும் சிலசமயம் குதிரைச் சவுக்காலும் பச்சை மாட்டுத் தோலினாலும் அடிப்பது வாடிக்கை. மாமிசத்தையோ உணவுப் பண்டங்களையோ திருடுபவர்களை ஆடையை அவிழ்க்கச் செய்து கைகளைக் கட்டி சிலசமயம் கட்டைவிரல்களை இணைத்துக் கட்டி சவுக்கால் அடிப்பார்கள். ஆனால் பெரிய புகையிலைத் தோட்டங்களில் வாரத்திற்கு ஒரு முறைக்குமேல் இந்த மாதிரியான தண்டனைகள் இருக்காது. எஜமானர் கடுமையானவராக இருக்கும் இடங்களில் மாரிலான்ட் அடிமைகளின் முதுகிலிருந்து இடுப்புவரை வரி வரியாக சவுக்கடியின் சுவடுகள் தெரியும். என்னுடைய அதிர்ஷ்டம் நான் மாரிலான்டில் அடிமையாக இருந்த காலங்களில் என் எஜமானர்கள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நானும் நான் வேலை செய்யும் இடத்திற்கேற்ப அவர்களுக்குப் பணிந்து நல்ல முறையில் வேலை செய்துவிடுவேன்.

(தொடரும்)

About The Author