ஒரு பூனை புலியாகிறது (2.2)

அத்தியாயத்தின் முன்பாதி: தேனீ கொட்டியது (1)

தேனீயின் பார்வை சிறுவர்கள் விளையாடிய பங்களாவைத் துழாவியது. அங்கே சிறுவர்கள் இல்லை… அவர்கள் எறிந்த தட்டுப் பட்டுதான் ஒருவர் ஐயோ என்று கூச்சலிடுகிறார் என்று நினைத்தார்கள். அதனால் கூச்சல் கிளம்பியதும் அவர்கள் வீட்டுக்குள் ஓடி மறைந்து விட்டார்கள்.
தேனீ மீண்டும் தேன் கூடு விழுந்த இடத்தைப் பார்த்தான். வந்தது ஒரு சிவப்புத் தட்டுத்தானே? இரண்டு எங்கிருந்து வந்தது?

தேனீயின் பார்வை கூர்மையானது.

தேன் கூட்டுக்கு அருகே இருப்பதுதான் சிவப்புத் தட்டு; சற்று தூரத்தில் இருப்பது வட்டமான தட்டல்ல!

அது என்ன?

தேனீ அவசர அவசரமாகக் கழுத்தில் தொங்கிய பைனாகுலரைக் கையில் பிடித்துக் கண்ணில் பொருத்திப் பார்த்தான்.

அது வட்டமானதல்ல!

நீண்ட சதுர வடிவம் பெற்றது!

இரண்டாக மடிந்த மடிப்பு சீராகாமல், ஒரு பகுதி நிமிர்ந்து நின்று காற்றில் அசைந்தது.
அது சிவப்பு அட்டை போட்ட நோட்டு! தலைவன் ரகசியக் கூட்டத்தில் பயன்படுத்திய நோட்டு!
அது எப்படி அங்கே வந்தது?

தலைவனின் கோட்டுப் பைக்குள் இருந்தது. தேனீக்கள் கொட்டிய போது அவன் ஆடிய ருத்ரதாண்டவத்தில் கீழே விழுந்து விட்டது. அதைக் கவனிக்காமல் அவன் ஓடிவிட்டான்.
இதை உணர்ந்த தேனீயின் முகம் மலர்ந்தது. "கடவுளே! உனக்கு ஆயிரம் நன்றி!" என்று கூறிக் கொண்டே மரத்திலிருந்து சரசரவென இறங்கினான். நோட்டு இருந்த இடத்தை நோக்கி ஓடினான்.
கோஹினூர் வைரத்தைக் கண்டெடுத்த குதூகலத்துடன் தேனீ சிவப்பு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். அவன் முகத்தில் ஒரே வியப்பு. அந்த நோட்டில் மாநிலந்தோறும் அந்தச் சதிக் குழுவில் ஈடுபட்டிருப்பவர்களின் பட்டியல் இருந்தது. அதை வியப்போடு புரட்டிய தேனீ கடைசிப் பக்கத்தில் இருந்த செய்தியைக் கண்டு வேதனை அடைந்தான்.

சிவப்பு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடலாமா?

கூடாது!

"நோட்டுப் புத்தகம் காணோம்’ என்பதை அறிந்து தலைவன் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்கே வந்து தேடுவான். நோட்டு இல்லை என்றால்; அது யாரிடம் சிக்கியது என்று ஆராய்வான். அதற்கெல்லாம் இடம் தராமல் நோட்டில் இருப்பதைப் படம் எடுத்துக்கொண்டு அதை அங்கேயே போட்டுவிட்டுப் போகலாம்."

தேனீயின் திட்டம் சிறந்ததுதான். அது நிறைவேறியிருந்தால்! பலா மரத்தின் பின்னே நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்தான். அவனிடம் உள்ள நுட்பமாகப் புகைப்படம் எடுக்கும் மிகச் சிறிய ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லெட் அளவுள்ள கேமிராவால் படம் எடுத்தான். ஒவ்வொரு பக்கமாகத் தள்ளிப் படமெடுத்தான். கடைசிப் பக்கத்தைப் புரட்டி வைத்த போது தடதடவென யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது.

தலைவனும் மற்றொருவனும் அவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து விட்டார்கள் என்பதை உணர்ந்த தேனீ அங்கிருந்து ஓடினான்.
தலைவன் தன்னுடன் வந்த ஆளிடம், "அவன் ஓ.பி.யு-வின் ஆள். நம்ம திட்டத்தைப் படம் எடுத்து விட்டான். அவனைப் பிடி. ஓடு, நான் இன்னும் சிலரை அனுப்புகிறேன்" என்று உத்தரவிட்டான்.
தலைவனுடன் வந்த ஆள் தேனீயைப் பின் தொடர்ந்து ஓடினான்.

தலைவன் தேனீ விட்டுச் சென்ற நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு பங்களாவுக்குள் ஓடினான். அங்கிருந்து சிலரை அனுப்பினான்.

தேனீ வெகுவேகமாக ஓடினான். ஃபெர்ன்ஹில் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்துக்குப் போனான். அங்கிருந்து கடைவீதிக்குள் நுழைந்தான். சேரிங்கிராஸுக்கு ஓடினான். இறுதியாகப் புகழ்பெற்ற அரசினர் பூங்காவில் நுழைந்து விட்டான். அப்போதுதான் அவனால் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.
தேனீயைப் பிடிக்க வந்தவர்களும் பூங்காவில் நுழைந்தனர். ஏராளமான மரஞ்செடிகள் நிறைந்த பல ஏக்கர் பரப்புள்ள பூங்காவில் தேனீ மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டனர்.
வந்தவர்கள் திறமையானவர்கள். அவர்கள் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே முன்னேறினர்.

பூங்காவின் மறுபக்கம் உயரமான இடம். அங்கே ஒரு புதருக்குப் பின் மறைந்திருந்த தேனீயை அவர்கள் பார்த்து விட்டார்கள். அவனைத் தப்பிச் செல்ல விடக்கூடாது என்று ஒருவன் சுட்டான். அது சைலன்சர் பொருத்திய துப்பாக்கி. அதனால் சுட்ட சத்தம் கேட்கவில்லை.

துப்பாக்கிக் குண்டு தேனீயின் வயிற்றைத் துளைத்தது. உயிர் போவது போன்ற வேதனை என்றாலும் தேனீ வாய் விட்டுக் கத்தாமல் அங்கிருந்து வேறு புதருக்குள் நுழைந்து விட்டான்.

தேடி வந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களிடம் சிக்காமல் ஒரு புதரிலிருந்து மறு புதருக்குத் தாவினான். அவர்கள் பார்க்காதவாறு பூங்காவின் உயரமான கிழக்குப் பகுதியை அடைந்தான். அங்கிருந்த முள்வேலியைத் தாண்டி சாலைக்கு வந்தான். சேரன் நடந்த ஒற்றையடிப் பாதை வழியே சென்று, மேலே நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டான்.

"தம்பீ… தம்பீ…"

தேனீ குரலை உயர்த்தியதோடு, கையையும் உயர்த்திச் சேரனை அசைத்தான்.

தேனீ கூறியதைக் கேட்டு வியப்பிலும் திகைப்பிலும் சிலையாகி விட்ட சேரன் உணர்வு பெற்றான்.

"என்னங்கோ?"

"நான் சொன்ன கதையைக் கேட்டுத் தூங்கிட்டேயோன்னு நினைச்சேன். கதை கேட்டா குழந்தைங்க தூங்குவாங்க."

"ஐயோ, நீங்க சொன்னது தூங்கச் செய்யற கதையா! தூங்குறவங்களை எழுப்புற கதைங்கோ. என்னை அனுமதிங்க. நான் டாக்டரைக் கூட்டியாறேன்."

"வேண்டாம் தம்பீ! என்னைக் காப்பாத்த முடியாது. ஆனால் நீ உதவி செஞ்சா உன்னைக் காப்பாத்தலாம்; உன் நாட்டைக் காப்பாத்தலாம்."

தேனீ கூறியபடி தன் கையால், கால் சட்டைப் பையிலிருந்து ஒரு எக்ளேர் சாக்லெட் அளவுள்ள பொருளை எடுத்துச் சேரனிடம் நீட்டினான்.

"தம்பீ! நீ நாட்டுப் பற்றுள்ள தம்பின்னு தெரியுது. என் வரலாற்றைக் கேட்டப்போ உன் முகத்திலே தெரிஞ்ச கோபம்-ஆத்திரம்-வேதனை உன் குணத்தைத் தெரிவித்தன. என் கையிலிருப்பது நான் எடுத்த மைக்ரோ ஃபிலிம். இதைச் சென்னைக்கு நீயே எடுத்துச் செல்ல வேண்டும். சென்னையில் 693641 என்னும் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு ஓ.பி.யு-வின் தமிழ்நாட்டுத் தலைவனிடம் தேனீ கொடுத்ததாகக் கூறி ஒப்படைக்க வேண்டும். செய்கிறாயா?"

வெகு தூரத்திலிருக்கும் சென்னைக்கு அவன் அதுவரை சென்றதே இல்லை. தேனீ கொடுக்கும் ஃபிலிமைச் சென்னையில் உள்ள ஓ.பி.யு தலைவனிடம் சேர்க்க முடியுமா? செய்ய முடியாததைச் செய்வதாக வாக்களிப்பது தப்பல்லவா?

சேரன் தயங்கினான்.

"தம்பீ! தயங்காதே! நாட்டுக்காக இதைச் செய்!"தேனீ சொன்னான்.

"நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்."

சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது! "வீட்டுக்குச் சேவை செய்ய முடியாத என்னால் நாட்டுக்குச் சேவை செய்ய முடியுமா?" – சேரன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

"தம்பீ, தயங்காதே! முயன்றால் செய்ய முடியாதது எதுவும் இல்லை."

சேரன், கையை மெல்ல நீட்டித் தேனீயின் கையிலிருந்த மைக்ரோ ஃபிலிம் ரோலை எடுத்துக் கொண்டான்.

"தம்பீ, இதை நவம்பர் பதினாலாம் தேதிக்குள் சென்னையில் சேர்த்துவிட வேண்டும். சதிக் கூட்டத்தாரின் நோட்டிலிருந்த கடைசிப் பக்கத்தை நான் படம் பிடிக்கவில்லை. அதில் என்ன இருந்தது தெரியுமா? வரும் நவம்பர் பதினாலாம் தேதியில் சென்னையில் ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அது முன்னோடி. அது வெற்றி பெற்றால், டிசம்பர் முதல் தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ் வாய்ந்த, அரசியல்வாதிகளைக் கொலை செய்யப் போகிறார்கள். நவம்பர் பதினாலாம் தேதி யாரைக் கொல்லப் போகிறார்கள் என்பது அதில் இருந்தது. டிசம்பர் முதல் தேதி யாரைக் கொல்லப் போகிறார்கள் என்பது அதில் இல்லை. ஆனால் அக்கொலைகளைச் செய்யப் போகும் கொலைகாரர்களின் பட்டியல் ஃபிலிமில் உள்ளது."

தேனீக்கு மூச்சு வாங்கியது!

அதே நேரத்தில் தூரத்தில் யாரோ பேசும் குரல் கேட்டது.

தேனீ மிரண்டான்.

"தம்பீ, என்னைத் தேடுபவர்கள் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் நீ சிக்கக் கூடாது. அவர்கள் உன்னைப் பார்க்கவும் கூடாது! ஓடு! இந்த ஃபிலிமை நீயே கொண்டு சென்று சென்னையில் சேர்க்க வேண்டும்."

"செய்கிறேன் ஐயா! என் உயிரே போனாலும் கவலையில்லை. கொலையாளர்களின் பட்டியலை நீங்கள் குறிப்பிட்டவரிடம் சேர்த்து விடுகிறேன். ஐயா, சென்னையில் நவம்பர் பதினாலாம் தேதி யாரைக் கொலை செய்யப் போகிறார்கள்?"

சேரன் கேட்டான்.

அதே நேரம் பேச்சுக் குரல் நெருங்கியது. காலடி ஓசை கேட்டது.

தேனீயின் முகத்தில் மிரட்சி. சேரனைப் போய் விடுமாறு சைகை செய்தான்.

சேரன் எழுந்து நின்றான்.

"கொலையாகப் போகிறவர் யார் ஐயா?"

தேனீ மூச்சு வாங்க வாயைத் திறந்தான். குரல் எழும்பவில்லை.

"கு… கு… ம… ம…"

நாக் குழறிய தேனீயின் தலை சட்டென்று பக்கவாட்டில் சாய்ந்தது. தேனீ இறந்து விட்டான் என்பதைச் சேரன் தெரிந்து கொண்டான்.

அப்போது…

பளீர் என்று டார்ச் ஒளி சேரன் முகத்தில் பட்டது.

மேலே சாலையில் சிலர் நின்றிருந்தனர்.

டார்ச் ஒளி நகர்ந்து, கீழே கிடந்த தேனீ மீது படர்ந்தது.

மறுகணம்…

"அதோ அவன்!"என்று ஒரு குரல் கேட்டது!

சேரனுக்கு வந்தவர்கள் யார் என்பது தெரிந்து விட்டது.

அவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான்.

"அந்தப் பையனைப் பிடி! விடாதே!"ஒரு குரல் எழுந்தது!

 தொடர்ந்து சிலர் ஓடி வரும் காலடி சத்தம் கேட்டது.

சேரன் புலியைக் கண்ட புள்ளி மானைப் போல ஓடினான்.

வந்தவர்களில் இரண்டு பேர் அவனைப் பின் தொடர்ந்து ஓடினர்.

காலடி ஓசை தன்னை நெருங்குவதை உணர்ந்த சேரன் அப்போதும் திரும்பிப் பார்க்காமல் ஓடினான்.

–புலி வளரும்…

About The Author