ஒரு பூனை புலியாகிறது (3.1)

விடாதே, பிடி (3.1)

சேரன் ஒற்றையடிப் பாதையில் ஓடினான். பாதை, வளைந்தும் நெளிந்தும் இறங்கியும் ஏறியும் சென்றது. சேரன் எந்த இடத்திலும் தன் ஓட்டத்தை நிறுத்தவில்லை. வேகத்தைக் குறைக்கவில்லை. மலையிலிருந்து கீழிறங்கும் ஆறு போல ஓடினான்.

காலடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. எத்தனை பேர் தன்னைப் பின் தொடர்கிறார்கள்? சேரன் திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பாமல் ஓடிக் கொண்டேயிருந்தான்.

எதிரே ஒரு பள்ளம், சேரன் அதில் பொத்தென்று குதித்து ஓடினான். ஓடும்போது காதைத் தீட்டிக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் பொத்-பொத் என்று இரு சத்தங்கள் கேட்டன.

‘ரெண்டு பேர் வருகிறார்கள்’ என்று உணர்ந்து கொண்ட சேரன் இன்னும் வேகமாக ஓடினான்.
ஒற்றையடிப் பாதை ஒரு சாலையில் சங்கமமானது. அந்தச் சாலையில் இடப்பக்கம் திரும்பிச் சென்றால் விஜயின் பங்களா வரும். அதற்குள் ஓடி நுழைந்து கொள்ளலாம். ஆனால் பின் தொடர்ந்து வருபவர்கள் தான் தங்கியுள்ள இடத்தைத் தெரிந்து கொள்வார்கள். ‘கூடாது! அவர்கள் என் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளக் கூடாது!’

சேரன் வலப்பக்கம் திரும்பி ஓடினான்.

பின் தொடர்ந்து வந்த இருவரில் முன்னே வந்து கொண்டிருந்த ஒருவன், சேரன் வலப்பக்கம் திரும்புவதைப் பார்த்தான். அந்தச் சாலையில் ஏதாவது ஒரு பங்களாவுக்குள் அவன் நுழைந்து விடும்முன் பிடித்து விட வேண்டும் என்னும் ஆவேசத்துடன் கால்களை எட்டப் போட்டான்.
ஓர் உருண்டைக் கல்லின்மீது அவன் கால் வைக்க, கல் அவன் காலை இழுத்துக் கொண்டு பக்கவாட்டில் உருள, அவன் கீழே விழுந்தான்.

விழுந்தவன் எழுந்து கொள்ள முயல்வதற்கு முன், அவனுடன் வந்த மற்றொருவன் அந்த இடத்துக்கு வந்து விட்டான். அவன் நின்று, கீழே விழுந்தவனைத் தூக்கி விடக் கையை நீட்டினான்.
விழுந்தவன் அதைப் பற்றிக் கொள்ளவில்லை.

"முட்டாளே! என்னைப் பிறகு கவனிக்கலாம். ஓடு, அந்தப் பையன் வலப்பக்கம் திரும்பி ஓடினான். அவனைத் தப்ப விடாதே! பிடி அவனை!"

கைநீட்டியவன், தன் கையை இழுத்துக் கொண்டு ஓடினான். சாலையை அடைந்து, வலப்பக்கம் திரும்பி ஓடினான்.

சாலைகளில் விளக்குகள் எரிந்தன. அந்த ஒளியில், தனக்கு முன்னே அந்தச் சிறுவன் எவ்வளவு தூரத்தில் ஓடுகிறான் என்பதை அறிய விரும்பிப் பார்த்தான், எதிரே சாலை நீண்டு சென்று, கீழ்நோக்கிச் சரிந்து இறங்கியது. அந்தச் சரிவு வரை சாலையில் யாரும் இல்லை. அவன் தன் ஓட்டத்தை நிறுத்தாமல் தலையைத் திருப்பிப் பின்னே பார்த்தான். பின்னேயும் சாலையில் யாருமில்லை. ஒற்றையடிப் பாதையில் விழுந்த அவனுடைய கூட்டாளி அப்போதுதான் சாலைக்கு வந்து சேருவதைக் கண்டான்.

பார்வையைத் திருப்பி முன்னே செலுத்தினான். ‘பையன் சரிவில் இறங்கி ஓடிக் கொண்டிருப்பான்’ என்று நினைத்தபடி அவன் ஓடினான். மூன்று நிமிடத்தில் சாலை சரிந்து கீழிறங்கும் இடத்தை அடைந்தான். அங்கும் யாருமில்லை.

அவன் மேலும் ஓடாமல் நின்றான். அதற்குள், விழுந்து எழுந்தவன் அங்கே வந்துவிட்டான். அவன் தன்னை ஏதாவது கேட்கும் முன் தானே அவனிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"ஜாக்கி! பையன் வலப்பக்கந்தான் திரும்பினானா? நல்லா பாத்தையா?"

"நல்லாப் பாக்காமச் சொல்லுவேனா? இந்தப் பக்கந்தான் திரும்பினான். ஏதாவது பங்களாவுக்குள் நுழைஞ்சுட்டானோ? நீ அந்தப் பக்கம் பங்களாக்களைக் கவனி. நான் இந்தப் பக்கம் பார்க்கிறேன்."
பாபு சாலையின் எதிர்ப் பக்கம் நகர, ஜாக்கி, வலப்பக்கத்தைக் கவனித்தான்.

அரைமணி நேரம் சென்றது. இருவரும் சந்தித்தனர். அவர்கள் டார்ச் ஒளியில் பார்த்த பையன் எங்கே ஒளிந்து கொண்டான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘இடப் பக்கம் திரும்பியிருக்கலாம்’ என்று பாபு சொன்னதை ஜாக்கி, சில முறை மறுத்தான். பிறகு ‘சரி, அங்கும் பார்க்கலாம்’ என்று கூறி அவனுடன் சென்று தேடினான். அவர்கள் தேடிய பையனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சாலையிலிருந்த பங்களாக்களுக்குள்ளே சென்று தேட அவர்களுக்குத் தைரியம் இல்லை. அதனால் வெளியிலிருந்தபடியே அலசிப் பார்த்தார்கள். பையன் கிடைக்கவில்லை. அவன் நிச்சயம் சாலை சரிந்து இறங்குவதற்கு முன்னேயுள்ள ஏதோ ஒரு பங்களாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தான் ஜாக்கி. அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் ஜாக்கியும் பாபுவும் தம் மற்ற கூட்டாளிகள் இருக்கும் இடத்துக்கு-தேனீ இறந்து கிடக்கும் இடத்துக்குப் போனார்கள்.
சேரன் எங்கே போனான்?

வலப்பக்கம் திரும்பி ஓடிக்கொண்டிருந்தான் சேரன். அப்போதே எதிரே வந்த காரின் விளக்கு அவன்மேல் பட்டது. சேரன் காரைப் பார்த்தான். அது விஜயின் கார். உடனே குறுக்கே நின்று கையைக் காட்டினான். டிரைவருக்குச் சேரனைத் தெரியும். அதனால் வண்டியை நிறுத்தினான். சேரன் பின் சீட்டின் கதவைத் திறந்து காரில் ஏறிக்கொண்டான்.

"என்ன தம்பீ, இப்படி ஓடி வர்றே?"

டிரைவரின் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையில் சேரன் இல்லை.

"அப்புறம் சொல்றேங்க."

டிரைவர் மேலும் ஒன்றும் கேட்காமல் காரைச் செலுத்தினான். கார், ஒற்றையடிப் பாதை சேரும் இடத்தைக் கடந்த பிறகுதான் பாபு சாலைக்குள் வந்தான். அதனால் கார் அவன் பார்வைக்குத் தப்பியது.

காரிலே டிரைவரைத் தவிர யாருமில்லை. விஜயின் தந்தை, தமது ‘ஜேம்ஸ்பாண்ட் பெட்டி’யைப் பங்களாவில் விட்டுவிட்டு வந்துவிட்டார். அதைக் கொண்டு வருவதற்காக வந்த கார் சேரனைக் காப்பாற்றியது.

சேரன் பங்களாவில் இறங்கிக் கொண்டான். சிறிது நேரத்தில் டிரைவர், பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

பங்களாவின் மாடிக்குச் சென்ற சேரன், ஒரு கண்ணாடிச் சன்னலின் பின்னே நின்று சாலையைப் பார்த்தான். வெகுநேரத்துக்குப் பிறகு இரண்டு பேர், இருபுறங்களிலும் இருந்த பங்களாக்களை நோட்டமிட்டவாறு வருவது தெரிந்தது. அவர்கள் விஜயின் பங்களாவைத் தாண்டிச் சிறிது தூரம் சென்றார்கள். பிறகு வந்த வழியே திரும்பினார்கள்.

அவர்கள் தன்னை விரட்டி வந்தவர்களே என்பதைச் சேரன் உணர்ந்தான். ‘அவர்கள் மீண்டும் வரலாம். ஒருவேளை பொழுது விடிந்த பிறகு வரலாம். அவர்களிடம் சிக்கக்கூடாது. உடனே கோயமுத்தூர் போய்விட வேண்டும்’ என்று நினைத்தான் சேரன்.

நினைத்தவுடனே அவனால் புறப்பட முடியுமா? விஜய் வரும் வரை காத்திருக்க வேண்டும்! அதைத் தவிர வேறு வழியில்லை.

இரவு எட்டு மணிக்கு, சமையற்காரனின் வற்புறுத்தலால் சேரன் ஓரளவு சாப்பிட்டான். அதன்பின், விஜயை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

மணி ஒன்பதாயிற்று!

விஜய் வரவில்லை.

சேரன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தான். கம்பளியைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டான். அறைக்குள் இருந்த ஹீட்டரின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டே, அறைக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இமைகள் மெல்லக் கீழிறங்கின!

"தூங்கக் கூடாது! தூங்கக் கூடாது" என்று கூறிக் கொண்டே சேரன் படுக்கையிலிருந்து இறங்கினான். அறைக்குள்ளேயே நடந்தான்.

மணி ஒன்பதரை!

சேரன் இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு விஜய் உள்ளே வந்தான். அறைக்குள்ளே, கூண்டில் அடைக்கப்பட்ட புலியைப்போல நடை போட்டுக் கொண்டிருந்த சேரனைப் பார்த்ததும் வியப்படைந்தான்.

"சேரா! நீ இன்னும் தூங்கலையா?"

விஜய் கேட்டான். அவனைக் கண்டதும் சேரன் முகம் மலர அவனருகே வந்தான்.

"விஜய்! நான் இப்பவே கோயமுத்தூர் போகணும். பஸ்ஸிலோ, டிரெய்னிலோ அனுப்பி வைச்சுடு, ப்ளீஸ்!"

–புலி வளரும்...

About The Author