ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை

பொதுவாக மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் பிழிந்தெடுக்கின்றன என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கற்பனையே. (ஒருவேளை சில விஷயங்கள் உண்மையாகவும் இருந்துவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!!)

மருத்துவ விடுப்பு

இந்த நிறுவனம் இனிமேல் மருத்துவச் சான்றிதழ்களை ஒப்புக் கொள்ளாது. உங்களால் டாக்டரிடம் செல்ல முடியுமானால் வேலைக்கு ஏன் வரமுடியாது?

அறுவை சிகிச்சை

இனிமேல் எந்த ஊழியரும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. நீங்கள் இங்கு பணியாற்ற உங்கள் உடலின் எல்லா உறுப்புக்களும் தேவைப்படும்!! நாங்கள் உங்களுடைய முழு உடலுடன்தான் வேலைக்கு அமர்த்தியுள்ளோம். அப்படியிருக்க, உடலின் ஒரு பகுதியை எடுப்பது வேலை விதிகளை மீறியதாகக் கருதப்படும்.

வருட விடுமுறைகள்

ஒவ்வொரு ஊழியருக்கும் வருடத்தில் 104 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது, ஒவ்வொரு சனி, ஞாயிறும்.

விடுப்பு நாட்கள்

எல்லா ஊழியர்களும் வருடத்தில் ஜனவரி 1, ஜனவரி 26, ஆகஸ்ட் 15 ஆகிய தினங்களில் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இறப்பு விடுப்பு

உற்றார் உறவினர் இறப்பிற்காக விடுப்பேதும் கிடையாது. அவர்கள் இறந்தபிறகு நீங்கள் போய் ஒன்றும் ஆகப்போவதில்லை. குறிப்பிட்ட ஊழியர் சென்றே ஆக வேண்டும் என அவசியம் இருந்தால் உடல் அடக்கத்தைப் பணிநேரம் முடிந்தபிறகு வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் சற்று முன்னதாகவே வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் உணவு இடைவேளையின்போது வேலை செய்து அதை ஈடுகட்டிவிட இந்த நிறுவனம் அனுமதிக்கும். (ஒரே நிபந்தனை – உங்களது அன்றைய வேலையை பாக்கியில்லாமல் முடித்துவிட வேண்டும்)

உங்கள் இறப்பிற்கான விடுப்பு

இந்தக் காரணத்தை நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. ஆனால், நீங்கள் இதுபற்றி இரு வாரத்திற்கு முன்னாலேயே நிறுவனத்திற்குத் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் உங்களிடத்திற்கு வேறு ஒருவருக்குப் பயிற்சி அளிக்க முடியும்.
ஓய்வறை உபயோகம்

பல ஊழியர்கள் பெரும்பாலான நேரத்தை ஓய்வறையிலேயே செலவிடுவதாக அறிகிறோம். இந்த வழக்கத்தைத் தடுக்க, இனிமேல் ஊழியர்கள் அகர வரிசையில் ஓய்வறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உதாரணமாகப் பெயரின் முதலெழுத்து அ வில் ஆரம்பிப்பவர்கள் காலை 8லிருந்து 8.20வரை. ஆ – 8.20லிருந்து 8.40 வரை என. ஒருவேளை அந்த நேரத்தில் உங்களால் செல்ல முடியவில்லையென்றால் நீங்கள் அடுத்தநாள் உங்கள் முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். ரொம்ப அவசரம் என்றால் நீங்கள் உங்கள் சக ஊழியருடன் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த மாற்றம் பற்றி எழுத்தில் தெரிவித்து உயரதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.

உணவு இடைவேளை

மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒரு மணிநேரமும், சாதாரணமான உடலுடன் இருப்பவர்களுக்கு அரைமணி நேரமும், குண்டாக இருப்பவர்களுக்கு ஐந்து நிமிடமுமாக அவரவர் உடலுக்கேற்ற உணவிற்காக நேரம் ஒதுக்கப்படுகிறது.

உடை

உங்கள் சம்பளத்திற்கேற்ற உடையை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 5000 ரூபாய் சம்பாதிப்பவர் தினமும் 1500 ரூபாய் மதிப்பிலான உடை அணிந்தால் அவருக்கு இனி அதிகப் பணம் தேவையில்லை, அதனால் ஊதிய உயர்வு வேண்டாம் எனக் கருதப்படும்.

நீங்கள் நமது நிறுவனத்தின்மேல் காட்டிவரும் பற்றிற்கு நன்றி. நமது நிறுவனம் உங்கள் அனைவருக்கும் எல்லாவிதமான வசதிகளையும் செய்துதரப் பாடுபடுகிறது. அதனால் இந்த சுற்றறிக்கை பற்றிய தங்கள் எண்ணங்கள், யோசனைகள், கோபங்கள், குற்றச்சாட்டுகள், எரிச்சல்கள், ஏமாற்றங்கள் எதுவாக இருந்தாலும் வெளியே இது பற்றி விவாதித்துக் கொள்ளுங்கள். எங்களை அணுகாதீர்கள்.

நன்றி. வாழ்த்துக்கள்!

*********

About The Author

5 Comments

  1. மஞ்சூர் ராசா

    ஆங்கிலத்தில் ஏற்கனவே இதை படித்திருக்கிறேன். தமிழில் மொழிப்பெயர்ப்பும் நன்று.

  2. கிரிஜா மணாளன்.

    ஏற்கனவே ஆங்கிலத்தில் இதை நான் படித்திருந்தாலும், தமிழ் வாசகர்களுக்கு ஏற்றார்போல் நகைச்சுவை இதில் புகுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
    – கிரிஜா மணாளன்.

  3. lakshmi

    பத்மனாபன் சார், இப்படி ஒரு அலுவலகம் இருந்து அதில் ஆட்கள் பணிபுரிவாரே ஆனால் அவர்களின் நிலை அய்யகோ. நல்ல கற்பனை

  4. sundari

    மென் பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டின் சுற்றறிக்கை சிரிககவும் சிந்திக்கவும் வைத்துள்ளது. பாரட்டுக்கள்

  5. Venkatachalam

    Mஇகவும் கர்பனையுடென் வரையப்பட்ட அழகு கட்டுரை.

Comments are closed.