கடல் – திரை விமர்சனம்

மணிரத்னம் இதுவரை தான் எடுக்காத களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கடவுள் – சாத்தான் இருவருக்கும் இடையில் ஒரு போட்டி. போட்டியில் இருவருக்கும் நடுவில் சிக்குகிறான் சாமானிய மனிதன் ஒருவன். இடையில் ஒரு தேவதை சாமான்யனுக்கு உதவ வருகிறாள். முடிவில் யாருக்கு வெற்றி? இதுதான் கடலின் மூலத்துளி.

துளி (கதை) புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகனுடையது. வசனத்தையும் அவரே எழுதியிருக்கிறார். திரைக்கதையை மட்டும் இயக்குநரோடு இணைந்து நெய்திருக்கிறார். எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு மணிரத்னத்துக்குச் சரியான வசனகர்த்தா அமையவில்லை என்பது என் கருத்து. (எடுத்துக்காட்டு: இராவணன்). அதை ஜெயமோகன் நிறைவு செய்வார் எனக் கருதுகிறேன்.

கிறித்துவப் பாதிரியார் பயிற்சிப் பள்ளியில் தொடங்குகிறது படம். அர்ஜூனும், அரவிந்தசாமியும் தோன்றுகிறார்கள். அங்கே அர்ஜூனின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

"ஏசுவை விட சாத்தானுக்குதான் பைபிள் நல்லாத் தெரியும். அதுக்கு அப்புறம் எனக்குதான் நல்லாத் தெரியும். நான் சாத்தான்லே!"

பின்னர், இருவருக்கும் பகை மூள்கிறது சவால்களுடன். இதன் பின்தான் தலைப்பு திரையில் வருகிறது, ரம்யமான கடல் காட்சியின் பின்னணியோடு. அடுத்து, நாயகனின் பின்னணி சொல்லும் காட்சிகள். தாயின் உயிரிழப்பு, தந்தை பெயர் தெரியாததால் ஏற்படும் புறக்கணிப்பு எல்லாம் சேர்ந்து அவனை நிம்மதியற்ற நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. சற்றே அப்பட்டமான காட்சியாக்கங்கள். வசனம் கூட அப்படியே வருகிறது!

நாயகனின் ஊருக்குப் பாதிரியாராக வருகிறார் அரவிந்தசாமி. அவரே அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார். படம் தொடங்கிக் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்துதான், கெளதம் கார்த்திக் அலைகளுக்கு நடுவே ‘ஏலே கீச்சான்’ பாடலுடன் தோன்றுகிறார். பளிச்சிடும் கடல்! பல்வேறு கோணங்களில் வண்ணமயமான காட்சிகள்.

அடுத்ததாக, நாயகியின் அறிமுகம். பேருந்துப் பயணத்தில், ஒரு வார்த்தை கூட உரையாடல் இல்லாமல் வெறும் பார்வை மட்டுமே பேசும் துளசி.

இரண்டாம் முறை, படகோட்டியாகத் துளசியிடம் அறிமுகமாகிறார் கௌதம். ‘அடியே’ பாடல் காற்றில் பரவுகிறது. இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, அப்படி இருக்குமோ இப்படியிருக்குமோ என்று நான் ஒரு கற்பனையில் இருந்தேன். ஆனால், புது மாதிரிக் காட்சிகள் அங்கு காணக் கிடைத்தன. அதுதான் மணி!

மீண்டும் அர்ஜூன். பழி தீர்ப்பதற்காக அரவிந்தசாமியிடம் நாடகம் ஆடுகிறார். அதில் வென்று அவரைச் சிறைக்கும் அனுப்புகிறார். இதனால் ஆத்திரம் அடையும் கௌதமை அழைத்துத் தன் பக்கம் சேர்த்து கொள்கிறார்.

இங்கே இடைவேளை. பின்னர், கௌதமின் கேங்ஸ்டர் காட்சிகள் தடதடக்கின்றன. நர்சிங் மாணவி துளசியுடனான எதிர்பாராத சந்திப்பு ஒன்றில், அவர் பிரசவம் பார்க்கப் போன இடத்தில் கௌதம் உதவி செய்ய நேர்கிறது. ஒரு பிறப்பை அருகிலிருந்து பார்த்ததால் மனதில் பரவசம் பரவ, கடவுளை உணர்ந்த நிலைக்குப் போகிறார் கௌதம். திருந்த நினைக்கிறார்.

துளசியுடன் நெருக்கம் அதிகரிக்கிறது. அவள் இருக்கும் இடத்திற்கே சென்று, அங்கு இருக்கும் மதர் சுப்பீரியரிடம் கௌதம் பேசும் காட்சிகள் நல்ல ரசனை.

கௌதம்: நான் பியா (துளசி)வைப் பார்க்கணும்.
மதர்: ஏன் பார்க்கணும்?
கௌதம்: அவளைப் பார்க்காம இருக்க முடியல. அதான் பார்க்க வந்தேன்.
மதர்: நீங்க சொல்றத நான் சரியா புரிஞ்சுக்குறேன்.

துளசி சிறுவயதில் மனதளவில் பாதிக்கப்பட்டவள், அவளிடம் வயதுக்கேற்ற மனமுதிர்ச்சி இல்லை என்பதை அறிந்த பின் வரும் காட்சியிலும், பாடலிலும் முகபாவனைகளிலேயே அசத்துகிறார் கௌதம்.

‘மூங்கில் தோட்டம்’ பாடல் கண்களுக்கு விருந்து. கடலும் அதன் கரையும்தான் களம். ராஜீவ் மேனனின் உழைப்பு நம்மைக் கண்ணிமைக்காமல் இருக்க வைக்கிறது.

காதலால் மீண்டும் நல்லவனாகிறார் கௌதம். பின்பு என்ன நடந்தது?… காதலர்கள் சேர்ந்தார்களா?… போட்டியில் வென்றது கடவுளா சாத்தானா என்கிற கேள்விகளுக்கு விடை கடலில்.

உச்சக்கட்டக் காட்சிகள் கடலின் நடுவே ஒரு படகில் நடைபெறுகின்றன. படபடக்க வைக்கும் காட்சிகள். இன்னும் சொல்லலாம்… அது படம் பார்க்காதவர்களுக்கு முதல்முறை பார்க்கும்பொழுது ஏற்படும் சுவாரசியத்தைக் குறைத்துவிடும். அதனால் இது போதும்!

பின்னணி இசை அளவாக, ஆழமாக, அழகாக ஒலிக்கிறது. அதுவும் ‘அடியே’ பாடலில் அவ்வப்போது வரும் ஹம்மிங் சிலிர்க்க வைக்கிறது!

அடுத்ததாகக் கலை. படத்தில் வரும் தேவாலயம் படத்துக்காகப் போடப்பட்ட அரங்கம்தானாம். தத்ரூபமாக இருக்கிறது!

வசனங்கள் அருமை. எடுத்துக்காட்டு,

"பாவம் செய்யச் சொல்றது நடக்கச் சொல்லிக் குடுக்குற மாதிரி, காலோடவே
வந்துரும். நன்மை செய்யச் சொல்றது பறக்க சொல்லிக் குடுக்குற மாதிரி".

மணிரத்னத்தின் மேஜிக் தீர்ந்து விட்டதாக இராவணன் வெளிவந்தபோது நாளிதழ்களில் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது மேஜிக் தீரவில்லை. இங்கே கடலாகத் திரண்டு நிற்கிறது. ‘மூங்கில் தோட்டம்’ பாடல் காட்சி ஒன்று போதும், அனைவரையும் கட்டிப்போடும்.

நான் இந்தப் படத்தை அடுக்குத் திரையரங்கில்தான் (Multiplex) பார்த்தேன். அங்கேயே கைதட்டினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

கடல் – காண்போரை நனைக்கும்.

About The Author