கடவுளின் மொழி!

அறிவியல் வரலாற்றில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் ஐம்பத்தாறே வயதான விஞ்ஞானி பிரான்ஸிஸ் காலின்ஸ்! 2000ம் ஆண்டில் மனித மரபணு பற்றிய முதல் முன்வரைவு வடிவத்தைத் தயாரித்த மாபெரும் விஞ்ஞானி இவர்! மரபணு ஆய்விற்காக இவருக்கு வழங்கப்பட்ட தொகை 48 கோடி டாலர்கள்! அதாவது சுமார் 1920 கோடி ரூபாய்கள்!! மரபணு பற்றிய பிரமிக்கத் தக்க செய்திகளை வழங்கிய இந்த விஞ்ஞானியின் மனம் இப்போது கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு விட்டது.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இல்லை என்றால் எப்படி நிரூபிப்பது? இருக்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?

காலின்ஸ் பயபக்தி வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். தனது ஆராய்ச்சியின் முடிவை ஒரு புத்தகமாக எழுதி அண்மையில் (செப்டம்பர் 2007 வெளியீடு) வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தின் பெயர் :- கடவுளின் மொழி – இறை நம்பிக்கைக்கு ஒரு விஞ்ஞானி ஆதாரம் தருகிறார் (The Language of God – A Scientist Presents Evidence for Belief) வலுவான அறிவியலுடன் தெய்வீகமான இறைவன் முரண்பாடின்றி சேர்ந்து இருக்க முடியும் என்று காலின்ஸ் வலியுறுத்துகிறார். கடவுளுக்கும், விஞ்ஞானத்திற்கும் யுத்தம் இல்லை என்று ஓங்கி உரத்த குரலில் கூறும் இந்த விஞ்ஞானி ஒரு புதிய சமரஸம் உருவாகி விட்டது என்று அறிவிக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் ஒரு நாத்திகர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மிகப் பெரிய கணித சூத்திரங்களில் அடக்கி விடலாம் என அவர் நினைத்தார். ஆனால் கடவுள் வேறு விதமாக நினைத்து விட்டார் போலும்! எழுபதுகளில் சப்பல்ஹில் என்னுமிடத்தில் மருத்துவம் பயிலும் போது ஏராளமான நோயாளிகள் தங்கள் இறை நம்பிக்கை மூலம் பெரும் வலிமையைப் பெறுவதைக் கண்டு அதிசயித்தார்.

சரி, இறைவன் இல்லை என்று சொல்வதற்கு முன்னர் அவன் இருக்கிறான் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் படித்து முடித்து விடலாம் என்று எண்ணி பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். 27ம் வயதில் இவர் மனதில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது! இறை நம்பிக்கையுடன் போட்டி மிகுந்த அறிவியல் உலகில் முன்னேறலானார்.

ரொபாட்டுகளும், கணிணிகளும் மரபணு பற்றிய (ஜீன்ஸ்) வரைபடத்தை இப்போது வெகு வேகமாக உருவாக்குகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் காலின்ஸும் அவரது சகாக்களும் வெறும் கையால் எழுதி எழுதி அனைத்து மரபணுக்களையும் அவை சம்பந்தப்பட்ட நோய்களையும் தொகுக்க ஆரம்பித்தனர்.

கடவுள் படைத்த மனிதன் பற்றிய மரபணு புத்தகம் எவ்வளவு பெரியது என்பதை முதலில் அவர் தான் கண்டார்! 3.1 பில்லியன் – 310 கோடி எழுத்துக்கள் உள்ள செய்முறை வழிகாட்டி புத்தகம் அது! மனிதன் பற்றிய மர்மம், மனித குலம் பற்றிய புதிர் ஆகியவற்றை விடுவிக்கும் புத்தகம் அது. பக்கம் பக்கமாக அதைப் புரட்டிய அவரால் மலைக்காமல் இருக்க முடியவில்லை!

ஆஹா! கடவுளைக் கண்டேன்! அவரது மொழியையும் கண்டேன்! என்று கூறினார் அவர். கடவுளின் மனதில் இருப்பதில் ஒரு சிறு துளியையே இதில் நான் காண்கிறேன் என்கிறார் அவர்.

எந்த மாதிரி சமுதாயம் அமைந்த உலகத்தை நாம் விரும்புகிறோம்? அறிவியலை மட்டுமே எடுத்துக் கொண்டு ஆன்மீகத்தை இழக்கப்போகிறோமா? அல்லது அறிவியலை சந்தேகக் கண் கொண்டு பார்த்து மனிதனின் துன்பத்தைத் துடைக்காமல் இருக்கபோகிறோமா? – இது தான் அவரது கேள்வி! ஆன்மீகம் உடைய அறிவியல் சமுதாயத்தை இவர் விரும்புகிறார். ஜெனோம் புராஜக்டே கடவுளின் புராஜக்ட்! அவரைக் கோவிலிலும் கும்பிடலாம்; சோதனைச் சாலையிலும் கும்பிடலாம் என்பதே காலின்ஸின் திடமான கருத்து!

மனித மரபணு ஒவ்வொன்றிலும் ஒரு ரகசியம் அடங்கி இருக்கிறது. ஒரு தத்துவம் இருக்கிறது. இப்படி ஒரு மரபணுவை வடிவமைத்த பேரறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி பிரமிக்கிறார் அவர். 310 கோடி எழுத்துக்கள் கொண்ட கடவுளின் மொழி ஒரு அறிவியல் அதிசயம் என்றால் அதைப் படித்து பிரமித்த விஞ்ஞானியின் கூற்று இன்னொரு பெரும் அறிவியல் அதிசயம் ஆகி விட்டது. கடவுளை நம்பலாம் இனிமேல் – அறிவியல் ஆமோதிப்புடன்!

நன்றி : பாக்யா தீபாவளி மலர் 2007

About The Author

2 Comments

  1. s muthamizhselvi

    Really good it is. I am searching for this type of article as i am wandering through readisng to know about God

Comments are closed.