கடைசியாகச் சிரித்தவன் (2)

வெற்றி மிதப்பில் கொக்கரித்தேன். அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. பெருந்தன்மையாக ஒரு அம்சத்தில் விட்டுக் கொடுப்போமே என்று, "ஆனா ஒண்ணு. ஒத்துக்கறேன். பிறருக்குத் துன்பம் தரக்கூடாது. அவ்வளவுதான். ஒரு குறுகிய அர்த்தத்திலே, பிறருக்கு ஏதாவது துன்பம் கொடுத்தா பாவம்னு ஒத்துக்கலாம். இன்னும் விரிந்த தத்துவார்த்த ரீதியிலே பார்த்தா கஷ்டம், சுகம் இதுக்கெல்லாம் கூட அர்த்தம் இல்லே!"

வேணு சும்மா அசந்து போய் விட்டான். "சீட்டாட்டம் பாவமா, இல்லியா?"

"அதிலென்ன பாவம்? உன் பணம். நீ ரிஸ்க் எடுக்கறே! தோத்துப் போறவன்தான் பாவம் என்று ‘ஃபன்’னினேன்.

சிறிது நிறுத்தி விட்டுச் சொன்னேன், "இந்த அளவுகோலை வெச்சுண்டு பார். யாருக்கும் கஷ்டம் தருகிறோமா? அது பாவம். இல்லையா? அது பாவம் இல்லே. அவ்வளவுதான். ஒரு ஏழை அடுத்த வேளை சாப்பாட்டுக்காகப் பணம் வெச்சிருக்கான், அதை நீ திருடறே.. .. அந்தப் பணம் இல்லாம அவன் பட்டினி கிடக்கணும். இந்த இடத்திலே உன் திருட்டு ஒரு பாவம். அதே நேரத்திலே தன் தேவைக்கு அதிகமா ஒருத்தன் வெச்சிருக்கற பணத்திலே நீ கை வெக்கறே. அந்தப் பணம் காணாமப் போறதெப் பத்தி அவன் கவனிக்காம கூட இருக்கலாம். அந்த மாதிரி இடத்திலே அது பாவமே இல்லே. சமுதாயத்திலே பொதுவா ஒத்துக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின்படி அது தவறா இருக்கலாம். அவ்வளவுதான்!"

நான் புதிது புதிதாக வியாக்கியானம் செய்ததில் வேணுவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவன் முகத்தைப் பார்த்தபோதே அது தெரிந்தது. "சாரே! போகிற போக்கிலே, கொலை செய்யறது கூடப் பாவம் இல்லேம்பே போல இருக்கே"

"இல்லை. அவஸ்தைப்படற பிராணியைக் கொல்லறது சரின்னு காந்திஜியே சம்மதிச்சிருக்காரே?"

சிரித்தே விட்டான் வேணு. "என்னடா இது, பஞ்சமா பாதகத்தையும் justify பண்ணிண்டே போறே? சரி, விபசாரமாவது பாவமா, இல்லையா?"

நானும் சிரித்தேன். இவ்வளவு அசடாக இருக்கிறானே? "உன்னுடைய ஆரோக்கியத்தையும் சமுதாயத்தினுடைய ஆரோக்கியத்தையும் நீ கெடுக்கல்லேன்னா விபசாரத்திலே தப்பே இல்லே. பாரேன் ஒரு உதாரணம் சொல்லறேன். ஒரு ஏழைப் பெண் இருக்கிறாள். அவள் கணவன் படுத்த படுக்கையில் இருக்கிறான். சாகக் கிடைக்கிறான். ஒரு விலை உயர்ந்த மருந்து கிடைத்தால்தான் அவன் பிழைப்பான். நீ அந்தப் பெண்ணுக்கு பூராப் பணத்தையும் இலவசமாகவோ கடனகவோ கொடுக்கத் தயார். ஆனால் அவளால் அவ்வளவு பெரிய தொகையைத் திருப்பித் தர முடியாது. தானமாகப் பெற்றுக் கொள்ளவும் அவ தயாரா இல்லே. பிச்சை எடுக்கறது பாவம்னு அவ நினைக்கறா. அவளுடைய உடம்பை நீ எடுத்துண்டு அதுக்குப் பதிலாத்தான் அந்தப் பணத்தைத் தரணும்னு நிபந்தனை போடறா. அப்படி இல்லேன்னா அவ பணத்தை வாங்கிக்க மாட்டா. அவ கணவனும் செத்துப் போயிடுவான். இந்த சந்தர்ப்பத்திலே நீ என்ன பண்ணுவே?"

தயங்கினான் வேணு. "இப்ப நீ எதுக்கு வரே?"

"நீ அவளை ஏற்றுக் கொண்டால்தான் புண்ணியம்; புரிந்ததா?" என்று விட்டுக் கடகட வென்று சிரித்தேன்.

"என்னடா அக்கிரமம், விபசாரத்தைக் கூட இப்படி நியாயப் படுத்திப் பேசறே?.. மணமான பெண் ஒருத்தியுடன் மாற்றான் ஒருவன் உறவு வெச்சுக்கறத்தைப் பற்றிச் சர்வ சாதாரணமாகச் சொல்லிட்டே!"

எனக்கு படுகுஷி!

"நான் சொன்ன அளவுகோலை வெச்சுண்டு பாரு.. துன்பம் தந்தாப் பாவம். கணவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்து அதுனாலே அவங்க ஒற்றுமையான குடும்பத்திலே விரிசல் வந்தா, நீ செய்யற காரியம் பாவம். கணவனுக்கு இந்த விஷயம் தெரியாமலே இருக்குன்னு வெச்சுக்கோ. இதிலே துன்பம் எங்கே வந்துது. பாவம் எங்கே வந்துது?"

"டேய், நீ புரிஞ்சுண்டுதான் பேசறியா? கணவனுக்குத் தெரியாம அவன் மனைவியோடெ இன்னொருத்தன் தொடர்பு வெச்சுண்டாப் பாவம் இல்லேங்கிறியா?"

இதிலென்ன இவனுக்கு இத்தனை கிளுகிளுப்பு?

அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். ‘ஆமாம். ஆமாம். ஆமாம்.’

ஏன் இப்படிச் சிரிக்கிறான் இந்த வேணு? "ஹய்யா! நான் பாவி இல்லே. வரேன் சாரோவ்!" என்று உள்புறம் பார்த்தபடிக் கூவி விட்டு…

ஏன் இப்படி ஓடுகிறான்? பைத்தியம் கியித்தியம் பிடித்து விட்டதா என்ன?

About The Author

1 Comment

Comments are closed.