கண்களின் அருவியை நிறுத்து (2)

பொறாமை முற்றும் இல்லா
தோழமை தேடிச் சேரும்
நல்லதோர் நட்பினில்தானே
உள்ளத்தின் துன்பம் தீரும் – தோழா
கவலைகள் தீயில் வேகும்

வாழ்க்கையில் விட்டுக்கொடு
விட்டுநீ கொடுக்கும் போது
விண்தொட்டு வளரும் இன்பம்
கொட்டியே கிடக்கும் எங்கும் – தோழா
எட்டியே நடக்கும் துன்பம்

பொருள் தேடி உலகம் ஏறு
பொன்னோடு பண்பும் சேரு
பொருள் கண்ட உன்னையாரும்
பணம் என்று மட்டும் பார்த்தால் – தோழா
பிணம் என்று மட்டும் பாரு

சப்தத்தின் சிரிப்பும் கானல்
மௌனத்தின் புன்னகை வரம்
ரசிக்கின்ற உன்னுளம் தென்றல்
பாராட்டும் ஒளிமுகம் விடியல் – தோழா
பாராட்டும் பண்பே வானம்

மாறாத மகத்துவம் என்று
மண்மீது மாற்றமே உண்டு
இருண்ட உன் இதயமே கேடு
சொர்க்கமும் பூட்டிய கூடு – தோழா
திறவுகோல் உனக்குள் தேடு

கைகளில் அள்ளியே நாளும்
கணக்கின்றி உரித்தென்ன லாபம்
கவலைகள் பெருகியே போகும்
வெங்காயம் வேறென்ன ஆகும் – தோழா
வீசிநீ எறிந்தாலே தீரும்

மோப்பநாய் போலவும் தேடி
ஆனந்தம் காணுவாய் கோடி
பதுங்கியப் பூனைபோல் தாவி
சுகங்களைக் கவ்வியே வாழி – தோழா
சந்தோசம் உனக்கான தோணி

கனவுகள் முயற்சியின் பொறுப்பு
கைகளில் நம்பிக்கை நெருப்பு
கண்களில் வெற்றியின் சிரிப்பு
கவலையின் வேர்களை அறுத்து – தோழா
கண்களின் அருவியை நிறுத்து

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author