கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

அன்பு – ஒரு சங்கிலித் தொடர்

விக்டோரியா ராணி ஒருமுறை ஹெலன் கெல்லரிடம் கேட்டார். "நீங்கள் கண் பார்வை அற்றவராகவும், காது கேளாதவராகவும் இருந்தும் கூட எப்படி உங்களால் இவ்வளவு சாதிக்க முடிந்தது?"

ஹெலன் கெல்லர் சொன்ன பதில் : "அதற்குக் காரணம் என்னுடைய குருவின் அர்ப்பணிப்புதான்".

உண்மைதான். அவரது ஆசிரியர் அன்னி சலைவன் மட்டும் இல்லாவிட்டால் ஹெலன் கெல்லரின் பெயர் இந்த உலகத்தில் யாருக்கும் தெரிந்திருக்காது.

ஆனால் அந்த அன்னி சலைவனே சிறுவயதில் ஒரு நோயாளி. அவள் அனுபவிக்காத கஷ்டங்களே இல்லை. மனநிலைக் குறைபாடு இருந்ததால் பாஸ்டனுக்கருகிலுள்ள மனநலக் காப்பகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தாள். அவளுக்குப் பார்வை வேறு சரியாகத் தெரியவில்லை. பல சமயங்களில் தன்னைப் பார்க்க வருபவர்களைத் தாக்க முயற்சி செய்வாள். சிகிச்சையளிப்பது இயலாது என்று எல்லோரும் கை விட்டாலும் ஒரு வயதான நர்ஸுக்கு மட்டும் அவளைச் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்னி சலைவன் அந்த நர்ஸை ஒதுக்கி விரட்டினாலும், விடாமல் தினமும் ஒரு முறை அன்னியை அவர் சென்று பார்ப்பார். தினமும் அன்னிக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு செல்வார். அன்பான வார்த்தைகளைப் பேசுவார். குட்டி அன்னி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அன்னி சலைவன், அன்பு செலுத்தினால் ஒருநாள் நிச்சயம் குணம் அடைவாள் என்ற நம்பிக்கை இருந்தது அந்த மூத்த நர்ஸிற்கு.

நிஜம்தான். கொஞ்சம் கொஞ்சமாக குட்டி அன்னியிடம் முன்னேற்றங்கள் தெரிந்தன. அவளது பார்வையிலிருந்த கோபமும் வெறுப்பும் மறைந்தன. அதற்குப் பதிலாக அன்பும் மென்மையும் தெரிந்தன. முற்றிலுமாக குணமடைந்து அன்னி வெளியில் வந்த அந்த நாளும் வந்தது.

இந்த அன்னி சலைவன் வளர வளர, அவளிடம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வளர்ந்தது. அந்த மூத்த நர்ஸ் மட்டும் தன்னிடம் அன்பு காட்டியதைப் போல தானும் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

அவருக்கு ஹெலன் கெல்லரைப் பார்த்ததும் அவரைத் தன்னால் சரி செய்ய முடியும் என்ற எண்ணமும் அவரிடம் ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்றும் தோன்றியது. அதனால், ஒன்றுக்கும் பயனில்லாதவர் என்று கருதப்பட்ட ஹெலன் கெல்லரிடம் அன்பு காட்டினார், அவரை முறைப்படுத்தினார். அவரோடு விளையாடி அவருக்கு ஊக்கம் கொடுத்தார். அதனால் அணையும் அகலாக இருந்த ஹெலன் கெல்லர் ஒரு கலங்கரை விளக்கமாக மாறினார். அன்னி, ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மாற்றினார் என்பது உண்மைதான். ஆனால் அந்த மூத்த நர்ஸ் மட்டும் அன்னியை இந்த அளவுக்கு மாற்றியிருக்காவிட்டால் ஹெலன் கெல்லருக்கு ஒரு அருமையான ஆசான் கிடைத்திருக்க மாட்டார்.

அன்பு ஒரு தொடர் சங்கிலி. நாம் ஒருவரிடம் அன்பு காட்டும்போது அது அவரிடமிருந்து அடுத்தவருக்குத் தொடர, முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும். அன்பு என்பது ஒரு தீபம் போன்றது. ஒருமுறை ஏற்றி வைத்தால் அது என்றும் அணையாது.”

About The Author