கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

அறுந்தது காது. விளைந்தது போர்!

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய காரணங்களால் நாடுகளுக்கிடையே போர்கள் நிகழ்ந்திருப்பதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், ஒரு காதுக்காக ஒரு யுத்தம் நடந்ததென்றால் காது கொடுத்துக் கேட்பீர்களா?

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு 1731ம் ஆண்டில் பிரிட்டனுக்குச் சொந்தமான ஒரு கப்பலை ராபர்ட் ஜென்கின்ஸ் கடலில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த ஸ்பானிய கப்பல் ஒன்று பிரிட்டன் கப்பலைவழி மறைத்து நின்றது.

அப்போது அமலில் இருந்த ஒரு ஒப்பந்தப்படி பிரிட்டிஷ் அரசு, ஸ்பெயின் நாட்டுக்குத் தேவையான அடிமைகளையும், ஆண்டுக்கு 500 டன் பண்டங்களையும் தொடர்ந்து வழங்க வேண்டும்.

குறுக்கே வந்த ஸ்பானிய கப்பலில் இருந்த ஆட்கள் பிரிட்டன் கப்பலில் நுழைந்து அதில் இருந்த பொருட்களை அத்துமீறி சோதனை செய்தார்கள். மிகவும் கோபம் அடைந்த ஜெர்கின்ஸ் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். ஸ்பானிய நாட்டுக் கப்பலில் இருந்தவர்களுக்கும் ஜென்கின்ஸுக்கும் வாக்குவாதம் முற்ற, ஜென்கின்ஸின் காதை அறுத்தெறிந்து விட்டு, அதோடு நிற்காமல் “இதுதான் உங்கள் மன்னர் ஜார்ஜுக்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்பதையும் போய்த் தெரிவியுங்கள்” என்று எச்சரித்து விட்டு ஸ்பெயின் கப்பல்படை திரும்பியது.

அறுந்த தன் காதை பத்திரமாக ஒரு சீசாவில் போட்டுக் கொண்டார் ஜென்கின்ஸ். ஜென்கின்ஸ் அவமானப்பட்ட தகவல் கேட்டு இங்கிலாந்து மக்கள் பொங்கி எழுந்தனர்.

பிரிட்டிஷ் அரசின் காமன்ஸ் அவை கூட்டத்தில் தான் சீசாவில் பாதுகாத்து வைத்திருந்த தனது அறுந்த காதை எடுத்துக் காட்டி”இது எனக்கு மட்டும் ஏற்பட்ட அநீதி அல்ல; பிரிட்டிஷ் நாட்டு மக்களையும், அரசாங்கத்தையும், மக்கள் அவையையும் இழிவுபடுத்திய செயல்” என்று கூறி விட்டு அவையிலிருந்து ஜென்கின்ஸ் வெளியேறினார். இதைப் பெரும் அவமானமாகக் கருதிய பிரிட்டிஷ் அரசு ஸ்பெயின் மீது 1739ம் ஆண்டு அக்டோபர் 23ந் தேதி போர் தொடுத்தது.

தனது நாட்டின் குடிமகனின் அறுந்த ஒற்றைக் காதுக்காகவென துவங்கிய இந்த யுத்தம், ஸ்பெயினுக்கு அடிமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அனுப்பும் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் காரணங்களும் சேர, ஒன்பது ஆண்டுகள் நீடித்த பிறகு முடிவுக்கு வந்தது.

இதை ஆங்கிலத்தில் "War of Jenkin’s ear" என்று இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.

ஏமாறாத எமன்!

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை!

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கெனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.

பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப் போய் வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ”ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால், ஒரே ஒரு குறைதான்…” என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ”என்னிடமே குறை காண்கிறாயா.. என் பெருமையை அறியாதவனே..” என்று எமதர்மனின் கைகளைப் பிடித்து அகந்தையுடன் உலுக்கிக் கேட்டார். உடனே எமதர்மன், ”தற்பெருமை என்ற ஒரே குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு!” என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

முதன் முதலாக

முதன் முதலாக செக் எழுதும் வழக்கம் 1281ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி ஏற்பட்டது. அந்த செக்கை எழுதியது இங்கிலாந்து மன்னன் முதலாம் எட்வர்ட்.

முதன் முதல் அகராதி 2500 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்ஸிரிய மொழியில் தயாரிக்கப்பட்டது. (அதென்ன மொழி?)

உயில் எழுதுகின்ற வழக்கம் முதன் முதலில் கி.பி 1102 ல் துவங்கியது. சிசிலி நாட்டின் மன்னராக இருந்த ரோஜர் என்பவர் அதைத் துவக்கி வைத்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் எடுக்கும் எண்ணம் பாபிலோனியர்களுக்குத்தான் தோன்றியது கி.மு. 3800ம் ஆண்டில் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்ததாக ஆதாரங்கள் உள்ளதாம்!

About The Author

2 Comments

Comments are closed.