கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஹா! ஹா! ஹரசியல்!

அரசியல்வாதிகளுடன் நாம் பல விஷயங்களில் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அவர்கள் செயல்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு அளிக்கும் நகைச்சுவை இருக்கிறதே! அதை ரசிக்கச் சொல்லுகிறார் துக்ளக் சத்யா. அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசியதைக் கேட்டுச் சிரித்தவர்கள் ஜ. ப. ர. நீங்களும் ரசிக்கலாமே…!

இப்போதெல்லாம் ஆட்சி செய்வது ரொம்ப சுலபம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டியதில்லை; உதவிப்பணம் கொடுத்தால் போதும். வறுமையை ஒழிக்க வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக இலவச வேஷ்டி சட்டை கொடுத்தால் போதும். குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக சத்துணவு, முட்டையுடன் கொடுத்தால் போதும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக இலவச டி.வி., கேஸ் ஸ்டவ் கொடுத்தால் போதும்.

தேர்தலில் வெற்றி பெறுவதுதான் கஷ்டம். அது கூட இப்போது சுலபமாகி விட்டது – கறி விருந்தளித்து, இலைக்கடியில் ரூபாய் 2000 வைத்தால் போதும். நல்லவர்கள் தேர்தலில் நிற்பதில்லை; நின்றாலும் தோற்று விடுவார்கள். கண்ணதாசன் சொன்னார், “ஏன் நல்லவர்களைத் தேர்தலில் நிறுத்தி அவர்களையும் கெட்டவர்களாக்க வேண்டும்?” என்று.

கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை உண்டு. பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது, காங்கிரசை ஆட்சி செய்யவிடக் கூடாது. இந்த விஷயத்தில் முதல் நான்கு வருடங்கள் அவர்களுக்கு வெற்றிதான்! காங்கிரசுக்கும் ஆட்சி செய்வதை விட ஆட்சியில் இருந்தால் போதும் என்ற நிலை!

காவல் நிலையத்திலேயே துப்பாக்கிகளை போலிஸ் முன்னாலேயே எடுத்துக் கொண்டு போன சம்பவம் சமீபத்தில் நடந்தது. “சரி.. துப்பாக்கியால் நமக்கு ஏதும் பிரயோசனமில்லை, அவர்களாவது எடுத்துக் கொண்டு போகட்டுமே” என்று காவல் நிலையத்தில் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது!

இன்னொரு இடத்தில் போலிஸ் துப்பாக்கியைத் திருடியவர்களை "எப்படி துப்பாக்கியைத் திருடிக்கொண்டு ஓடினாய்? நடித்துக் காட்டு” என்றார்கள். அவனும் துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடினான், திரும்பி வரவேயில்லை. இவர்கள் காத்துக் கொண்டிருந்ததுதான் மிச்சம். நல்லவேளை! “எப்படித் துப்பாக்கியால் சுட்டாய், சுட்டுக் காட்டு” என்று சொல்லவில்லை!

முந்தைய பட்ஜெட்டில், விவசாயிகள் கடனை 60000 கோடி ரூபாய்க்கு ரத்து செய்தார்கள். பல விவசாயிகள் ‘ஐய்யய்யோ! வாங்கின கடனைத் திருப்பிக் கட்டி ஏமாந்து போய் விட்டோமே..’ என்று வருத்தப்பட்டார்கள். இப்போது தேர்தல் வரப்போகிறது. அதனால் அக்கம் பக்கத்தில் வாங்கும் கடன்களைக் கூட அரசு ரத்து செய்யக் கூடும். அதனால் நிறையக் கடன் வாங்குங்கள், யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்!

விலைவாசி உயர்ந்தால், அரசு விலைவாசி உயர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பார்கள். பிரதமர் ‘விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது’ என்பார். மாநில அரசு மத்திய அரசின் கூட்டுக் கட்சியாக இருந்தால் பிரதமர் கவலை தெரிவிப்பது ஆறுதல் அளிக்கிறது என்பார்கள். எதிர் அணியாக இருந்தால் “இதைச் சொல்வதற்கா உன்னைப் பிரதமர் ஆக்கினோம்” என்பார்கள்.

ஒவ்வொரு நாளும் தொழில் ஆரம்பிப்பதாக தொழில் அதிபர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். இதனால் இத்தனை நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கூட்டிப் பார்த்தால் இதுவரை தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் இரண்டு வேலை கிடைத்திருக்க வேண்டும்!

கூட்டணி தர்மம் என்று சொல்கிறார்கள், கூட்டணிக்கும் தர்மத்துக்கும் சம்பந்தமே கிடையாது! அணுசக்தி ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, கலைஞருக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இரண்டு பேரையும் சமாளிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை. இந்த நிலையில் அவர் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டும் என்றும், காங்கிரஸ் அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் பேசி தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்தார்!

மற்றக் கட்சிகளெல்லாம் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று யோசிப்பார்கள். பாஜக ஏதாவது கூட்டணி கிடைக்குமா என்று யோசிக்கும். கலைஞரைப் பொறுத்தவரை பாமகவைக் கூட்டணியில் வைத்துக் கொண்டால் சங்கடமா, கூட்டணியை விட்டு வெளியில் அனுப்பினால் சங்கடமா என்று தீர்மானிக்க முடியவில்லை. உள்ளே இருந்தாலும் தொந்தரவு, வெளியில் போனாலும் தொந்தரவு.

இப்படி அரசியலால் நமக்குக் கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம் நகைச்சுவைதான். அரசியல்வாதிகளின் தினசரி பேச்சுக்களையும், அறிக்கைகளையும் கவனித்தாலே போதும், ஒரு நகைச்சுவை மன்றத்தில் கலந்துகொண்ட உணர்வு ஏற்படும்!

About The Author

1 Comment

  1. cnsone

    கலைஞர் அண்மையில் ஜயலலிதாவின் கனவு பலிக்காது என்றார். அதாவது தான் அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வெடுத்தால் உடனே அ. இ. தி. மு. க ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு காண்கிறதென்றார்.

    ஓய்வெடுத்துக்கொண்டு ஸ்டாலினை முதல்வராக்கி ஜயலலிதாவின் ஆசையை நாசமாக்கக்கூடதா?

Comments are closed.