கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

யார் பரமஹம்சர்?

பரம ஹம்சம் என்றால் தேவ அன்னம் என்று அர்த்தம்.

இந்த தேவ அன்னம் ஆன்மிகத்தின் ஒரு உன்னதமான நிலையை உருவகிக்கிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று புனித நதிகளும் கலக்கின்ற இடம், நீர் சுழித்துக் கொப்பளித்து மிகவும் சலசலப்பாக இருக்கும். அந்த சலசலப்பின் மீதுதான் எந்த சலனமுமே அடையாமல் அமைதியாக நீந்திக் கொண்டிருக்குமாம் அந்தப் பரம ஹம்சம் என்னும் தேவ அன்னம். அது போன்று எந்த நிலையிலும் தன் நிலை இழக்காமல் சலனமில்லாமல் இருப்பவர்தான் பரம ஹம்சர்.

ராமகிருஷ்ணர் பரம ஹம்சர் என்ற பட்டத்தைத் தனக்குத்தானே இணைத்துக் கொள்ளவில்லை!

ஆன்மிகத்தின், பக்தியின் ஒரு பரம நிலையை எய்தியிருந்த அவருக்கு பரம ஹம்சர் என்ற புனித பட்டம் அளிக்க வேண்டுமென உயரிய நிலையில் உள்ள பல ஆன்மீக விற்பன்னர்கள் விரும்பினார்களாம். ஆனால் சிலரிடமிருந்து அதற்கு எதிர்ப்பும் இருந்ததாம். ஆனால், இதைப் பற்றிய கவலையேதுயின்றி, தான் எந்த விதமான சலனமும் இல்லாமல் குழந்தையைப் போலவே சிரித்துக் கொண்டிருப்பாராம் ராமகிருஷ்ணர்.
பலவிதமான கடுமையான ஆன்மீக சோதனைகளுக்குப் பின்பே பரமஹம்சர் என்று பட்டமளிக்கப்பட்டாராம் அந்த தவ சிரேஷ்டர்!

(சுகி.சிவம் அவர்களின் தொலைக்காட்சி உரையில் கேட்டது)

ஞானப் பழம்

பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியொன்றில் எழுத்தாளர் ஷங்கர நாராயணனிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. "கவிதை, சிறுகதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறைகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்களே, அதன் மூலம் ஒருவர் படைப்பாளி ஆகிவிட முடியுமா?" என்கிற அந்தக் கேள்விக்கு, ஷங்கர நாராயணன் பரமஹம்சரின் கதையொன்றினை பதிலாகச் சொன்னார்.

"எனக்கு எப்போது ஸ்வாமி ஞானம் கிடைக்கும்?" என்றான் சீடன். தினமும் மந்திர உச்சாடனம் செய்து அதன் பின் திராட்சைப் பழமும் தின்று வந்தால் ஞானம் கிட்டும் என்றார் ராமகிருஷ்ணர். "எத்தனை திராட்சைப் பழங்கள் தின்ன வேண்டும்?" என்று கேட்டான் சீடன். "எத்தனை தடவை மந்திரம் சொல்ல வேண்டும் என்று கேட்காமல் திராட்சையைப் பற்றி கேட்கிறாயே… உனக்கு ஞானம் கிடைக்க வாய்ப்பே இல்லை" என்றாராம் பரமஹம்சர்.

அற்ப சந்தோஷம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு தடவை பேலூர் காளி கோவிலுக்குப் போயிருந்தபோது, "ஒவ்வொரு நாளும் நாங்க பண்ணுற பிரசாதத்தை எல்லாம்  எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று சொன்னார்களாம்.

இதைக் கேட்டு விட்டு பரமஹம்சர் சொன்னார், "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்பு உள்ளே வராது"

அதே போல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. " உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே.. " என்று எல்லாரும் பரமஹம்சரிடம் கேட்டார்கள்.

"அவைகளும் மனிதர்களும் ஒன்றுதான்" என்றாராம் பரமஹம்சர். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி மேலே போகாமலேயே
இருந்து விடுவார்கள்" என்று சொன்னாராம்.

எனக்குத் தெரியுமே!

ராமகிருஷ்ண பரமஹம்சர் மகத்தான ஞானிதான். ஆனால் படிப்பறிவில் சிறந்தவர் அல்லர். அவரிடம் கேசவந்திரசென் என்ற அறிஞர் வந்து இறைவன் இல்லை என்று வாதிட்டார்.

இடையிடையே பரமஹம்சர் சிரிப்பார், பரவசமடைவார். சுற்றி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . பரமஹம்சர் இறைவன் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டார் என அனைவரும் நினைத்தனர். கேசவந்திரசென் கூட தான் வெற்றி பெற்று விட்டதாக நினைத்தார் .

பேசி ஓய்ந்த கேசவந்திரசென் களைப்படைந்தபோது பரமஹம்சர் சொன்னார். "உங்கள் வாதங்கள் அருமை, அற்புதம். ஆனால், நான் என்ன செய்வேன்! கடவுள் இருப்பது எனக்கு நன்றாகத் தெரியுமே!"

(ஆதாரங்கள் : ராமகிருஷ்ணர் பற்றிய நூல்கள் மற்றும் வலைப்பதிவுகள்)

About The Author

3 Comments

  1. dr sundaram

    wonderul is your e magazine. As written earlier by me, i am unable to get the tamil fonts while reading your e magazine. kindly help /guide me as to what i should do so that I will get tamil reading possible.
    Thank you

  2. ஹாசிம்

    மிகவும் அருமையான பதிவு இதில் நிறைய படிப்பினை உண்டு தொடருங்கள் நண்ப

Comments are closed.