கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஒரு பொறுப்பான பயணம்

உறுப்பு தானத்தை வலியுறுத்தி, சென்னையைச் சேர்ந்த 6 இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் 2000 கிலோ மீட்டர் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டார்கள். அவர்களுடன் குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ வாகனத்தில் மூன்று பேர் பின் தொடர்ந்தனர். இவர்கள் 9 பேரும் 09.09.2009 அன்று காலை 9.09 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டார்கள். சென்னை, வேலூர், சேலம், மதுரை, கோவை, மதுரை, நெல்லை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, புதுச்சேரி ஆகிய 9 ஊர்களை 9 நாட்களில் கடந்து, மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்கள். மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடலிலிருந்து, ஒன்பது உறுப்புகளை எடுத்து ஒன்பது பேருக்குத் தானம் செய்யலாம் என்ற கருத்தினை வலியுறுத்தவே இப்படி ஒன்பதாம் தேதி ஒன்பதாவது மாதம் இந்தப் பயனத்தை மேற்கொண்டார்கள் இந்த இளைஞர்கள்! இறந்தும் வாழமுடியும் என்பதை உணர்த்த இவர்கள் செய்தது பொறுப்பான பயணம் அல்லவா!

********

புல்லட் பாபா! — நம்பிக்கை

குஜராத் சோட்டிலா கிராமத்தில் ஓம் பானா ரத்தோர் என்பவர். இருபது ஆண்டுகளுக்கு முன், தனது ராயல் என்பீல்டு மோட்டார் பைக்கில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது என்பீல்டு ஒரு மரத்தில் மோதி அவர் குழியில் விழுந்து இறந்து போனார். அப்போதைக்கு அந்தச் சம்பவம் கிராமத்து மக்களுக்கு சாதாரணமாகத்தான் இருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள்தாம் அவர்களை பீதியடையச் செய்தன.

ரத்தோரின் விபத்தைப் பதிவு செய்த போலீசார் பல முறை அந்த என்ஃபீல்ட் புல்லட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சங்கிலியால் கட்டி பாதுகாப்புடன் வைத்தும் அந்த புல்லட் காவல் நிலையத்திலிருந்து காணாமல் போய் மறு நாள் விபத்து நடந்த இடத்திலேயே காணப்பட்டதாம்! அவ்வளவுதான்!

அத்தனை பேருக்கும் பேயடித்தாற்போல ஆகிவிட்டதாம். தொடர்ந்து பல விபத்துக்கள் அதே இடத்தில் நடந்தன. பைக் போலீஸ் நிலையத்திலிருந்து வந்ததும், விபத்துக்களும் கிராம மக்களை திகிலடையச் செய்தன.

பைக் மற்றும் ரத்தோருக்கு அதே இடத்தில் கோவில் கட்டினர். ரத்தோர் விழுந்த குழியின் மீது மேடை கட்டி அதில் அவரது படத்தை வைத்தனர். மேடைக்கு அருகில் பைக்கை நிரந்தரமாக நிறுத்தி மாலை போட்டனர். இந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் டிரைவர்கள் அனைவரும் பக்தர்கள் ஆகிவிட்டனர்.

ஒருநாள், டிரைவர் ஒருவர் இந்த இடத்துக்கருகில் தனது வேனோடு விபத்துக்குள்ளானார். குழியில் விழுந்த கிடந்த அவரை இறந்து போன ரத்தோர் வந்து கைகொடுத்துத் தூக்கி காப்பாற்றினாராம். இந்தச் செய்தி புயல் வேகத்தில் பரவியது. இப்போது அந்தச் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் இங்கு சில நிமிடங்கள் நின்று கும்பிட்டு விட்டுச் செல்கின்றன.

கும்பிடும் டிரைவர்கள், தங்கள் கைகளில் மது பாட்டில்களோடு பைக்கை வலம் வருகின்றனர். சில மதுத் துளிகளை பைக்கின் முன் சக்கரத்தில் விடுகின்றனர். காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜை, பஜனைகள் நடக்கின்றன. ரத்தோர் மகிமை பற்றிய பாடல்கள் இப்போது "சிடி’க் களாக கிடைக்கின்றன. மரத்தில் வளையல்கள், கயிறுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ரத்தோர் படம் போட்ட கீசெயின்,மோதிரம், போட்டோக்கள் போன்றவையும் கிடைக்கின்றன.

கைலாஷ் என்ற பக்தர், "இந்தக் காலத்தில் எத்தனையோ பாபாக்கள் இருக்கின்றனர். ஆனால் எங்கள் ‘புல்லட் பாபா’ இருப்பது இங்கு மட்டும்தான்" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

******

எது நீதி?

டாக்டர் அமர்த்தியா சென் ’தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ்’ என்ற தன் புத்தகத்தின் வெளியீட்டிற்காக இந்தியா வந்திருந்தார். நீதி குறித்த புதிய கோட்பாடே இந்த புத்தகத்தின் மையக் கருத்து. 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற அவரின் ஒரு நேர்முகத்தின் தமிழாக்கம் ‘ பாடம்’ மாத இதழில் வெளியானது. பரிபூரண நீதி பெற்றுள்ள சமூகம் என்பதைவிட அநீதி இல்லாமல் இருப்பதே நீதிக்கான இலக்கணம் என்று கூறும் அவரின் நேர்காணலின் ஒரு சிறு பகுதி இங்கே:

“நீதி என்பது ஒவ்வொருவரும் சமமமாக நடத்தப்படுவது பற்றிய ஒரு சிக்கலான கருத்தாக்கம். முழுமையான நீதி நிலவும் ஒரு சமுதாயத்தைக் கனவு கண்டு கொண்டிருப்பதைக் காட்டிலும் இந்த உலகில் நிலவும் அநீதிகளைக் குறைப்பது பற்றிய
முறையான மதிப்பீடுதான் நீதியின் கோட்பாடு. பரிபூரண நீதி குறித்து அனைவரும் ஒருமித்த கருத்து ஒன்றுக்கு வர இயலாமல் இருக்கலாம். ஆனால் நீக்க இயலக்கூடிய பரவலான அநீதிகள் குறித்து நாம் ஒரு ஒத்த கருத்தை எட்டமுடியும். நாடு முழுவதும் காணப்படும் பசிக்கொடுமையையும் , வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தேவையான அளவுக்கு பள்ளிகள் இல்லாமை மற்றும் ஏழைகளுக்குக் கட்டுபடியாகக் கூடிய நல்வாழ்வு சேவைகள் இல்லாமை ஆகியவை கூட உதாரணங்கள்.

அகற்றக்கூடிய அநீதிகளை நாம் நீக்கவில்லையெனில் நடைமுறையில் நாம் நீதி இல்லாமல் வாழ்கிறோம் என்றே பொருளாகிறது. இந்தியாவில் நிலவும் அனைத்து வகையான அநீதிகளையும் அகற்றுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்..
ஆண்-பெண் சமத்துவமின்மையை அகற்ற நாம் போதிய கவனம் செலுத்தாதது அதிர்ச்சிகரமான உண்மை. கருவுற்றிருக்கும் பெண்களிடம் ஊட்டக் குறைபாடு உள்ளது. இது கருவில் வளரும் சிசுவிற்கு அளிக்கப்படும் அநீதி. பாலினப் பாகுபாடு, பாலின சமத்துவமின்மை மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுதல் ஆகியவை பெண்களுக்கு எதிரான அநீதிகளாகும். நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அநீதிகள் இவை“

About The Author