கண்ணில் தெரியுதொரு தோற்றம் -6

கருணை இல்லத்தின் ரிசப்ஷனில் "யுவனைப் பார்க்கணும்" என்று விரைப்பாய்ச் சொன்னவளைப் பார்த்துப் புன்னகைத்த அந்தப் பெண், "நீங்க கங்காம்மா மகளா? அப்படியே இருக்கு முகம்" என்றாள்.

ஆம் என்று தலையாட்டியவளுக்கு இவ்வளவு வெளிப்படையாய் நடக்கிறதா இந்தக் கள்ளக்காதல் என்று கோபமுண்டாயிற்று.

"நீங்க வருவீங்கன்னு அம்மா சொல்லவே இல்லையே… தம்பி க்ரௌண்ட்ல வெளையாடிட்டிருப்பான். கூட்டிட்டுவரச் சொல்றேன்" என்று எழுந்து போனாள்.

பின்னாலேயே போய், "எனக்கு எந்தத் தம்பியையும் பாக்கவேண்டாம். யுவனைப் பாக்கணும்" என்றவளை புருவம் நெரித்துப் பார்த்து, "கங்காம்மாவுக்கு மகன்னா யுவன் உங்களுக்குத் தம்பிதானே?" என்று தன் சந்தேகத்தை வெளியிட்டாள் அந்தப் பெண்.

‘தம்பியா?!!!!! இதென்ன புது சோதனை? யுவன் எனக்குத் தம்பியா?’

"ஸாரி… நீங்க வேற யாரையோ சொல்றீங்கன்னு நெனச்சேன்" தடுமாறிச் சமாளித்தாள் யமுனா.

‘ஒருவேளை தளபதி போல அம்மாவுக்குக் கல்யாணத்துக்கு முன் பிறந்தவனோ? எனில் எப்படித் தம்பியாய் இருப்பான்?’

‘அஞ்சலி பாப்பா போல மனநிலை சரியில்லாதவனோ?’

கேள்விகள் தலையைக் குளவியாய்க் குடைந்தன.

யுவன் அவள் முன் கைகட்டி பவ்யமாய் நின்றான். பன்னிரண்டு வயதிருக்கும். யமுனா அவனில் தன் அன்னையின் சாயலைத் தேடினாள்.

‘நிறம் அம்மாவைக் கொண்டில்லை’

‘அந்தக் கண் அம்மாவைப் போல இருக்கிறதோ?’

‘நெற்றி?’

அவள் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாய்ப் பட, யுவன்.

"யமுனாக்காதானே?" என்று கேட்டபோது விழிகளில் நட்சத்திரங்கள் மின்னின.

"உனக்கு என்னைத் தெரியுமா?" யமுனா விழிகள் விரியக் கேட்டாள்.

"ம்… அம்மா ஃபோட்டோவில காட்டியிருக்காங்க"

"அப்படியா?" வியந்த யமுனா, "என்னைப் பற்றி என்ன சொல்வாங்க?" ஆர்வமாய்க் கேட்டாள்.

"நீங்க ரொம்ப சமத்துன்னு"

யமுனாவுக்குக் மளுக்கென கண் ஈரமாயிற்று. அம்மாவைச் சந்தேகப்படுவது சமர்த்துப் பெண் செய்கிற காரியமா?

"அம்மா வர்லையாக்கா?" அவன் ஏக்கமாய்க் கேட்கவும் யமுனாவுக்கு மனது குழைந்தது.

அவன் தன்னிடம் கைகட்டி நின்று பேசுவதைப் பார்த்து வேதனையாய் இருந்தது. யுவனுடன் அந்த வளாகத்துக்குள் உலவிவர ரிசப்ஷன் பெண்ணிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள் யமுனா. அவள் பின்னால் யுவன் பூனைக்குட்டி போல பின் தொடர யமுனா மரத்தினடியிலிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து, "இப்டி உக்கார், யுவன்" என்றாள்.

அவன் அவளிடமிருந்து சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். கையை இன்னும் மார்புக்குக் குறுக்காய்க் கட்டியிருந்தான். கண்களில் லேசான மிரட்சி இருந்தது.

"அம்மாகிட்டே இப்படித்தான் கை கட்டிக்கிட்டுப் பேசுவியா?"

இல்லையென்று தலையசைத்தான்.

அவன் கையைப் பிரித்துவிட்டாள். அவன் பாதுகாப்புக் கவசம் பறிபோனதுபோல் சற்றுப் பின்னகர்ந்தமர்ந்தான்.

"என்னைப் பார்த்தால் பயமாருக்கா, யுவன்?"

"இல்லைக்கா" பயமில்லை எனில் தயக்கமோ?

"நீ ஏன் வீட்டுக்கு வரதில்லை?"

"நீங்க கூட்டிட்டுப் போறீங்களா?"

அந்த நியாயமான கேள்வியில் சற்று தடுமாறினாள்.

"அப்பா வருவாரா, யுவன்?"

"எனக்கு அப்பா இல்லைக்கா. நான் பொறக்கறதுக்கு முன்னாலேயே இறந்துட்டாருன்னு அம்மா சொல்லிருக்காங்க"

அவனிடம் என்னென்ன விபரங்கள் எவ்விதம் சொல்லப்பட்டிருக்கின்றன எனத் தெரியாததலால் அவனிடம் கவனமாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பேச்சை மாற்றினாள்.

"உனக்கு என்ன பிடிக்கும், யுவன்?"

"அம்மா ரொம்பப் பிடிக்கும்கா" யோசிக்காமல் சொன்ன அந்தச் சிறுவனின் மேல் ஏனோ அவளுக்கு அன்பு சுரந்தது. அவனைச் சூழ்ந்திருந்த மர்மங்களையும் தாண்டி அவனிடம் ஒரு தூய்மை இருந்ததாய்ப் பட்டது அவளுக்கு.

"வேறென்ன பிடிக்கும் – சாப்பிடறதுக்கு? விளையாடறதுக்கு?"

"வியாழக்கிழமை போடற வாழைப்பூ பொரியல் பிடிக்கும்கா. கிரிக்கெட்னா உயிர். நான் ஸ்பின் பௌலிங் போடுவேன். நேத்துகூட அஞ்சு விக்கெட் எடுத்தேன்" துறுதுறுவென்று ஆர்வம் கொப்பளிக்கப் பேசினான்.

"வெரிகுட். அப்புறம்… என்ன படிக்கப் போறே?"

"கிரிக்கெட்டரா வரணும்னுதான்கா ஆசை"

தம்பி தெளிவாகத்தான் இருக்கிறான்!

"உன் பிறந்தநாள் எப்போ, யுவன்?"

"ஆகஸ்டு 15"

"வாவ்! நாடே கொண்டாடுமா உன் பிறந்த நாளை?"

வெட்கமாய்ப் புன்னகைத்தான்.

"இன்னும் ஒரு மாசம்தானே இருக்கு? உன்னை நான் வொண்டர் கிட்ஸ் கூட்டிட்டுப் போகட்டுமா? தீம் பார்க் போயிருக்கியா முன்னால?"

"போனதில்லைக்கா. ஆனா இங்கே யாருமே பார்த்ததில்லைக்கா"

இத்தனை சின்ன வயதில் எத்தனை பொறுப்பான பதில்! இன்னும் கொஞ்ச நேரம் அவனிடம் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்புகையில், "அம்மாகிட்டே நான் வந்ததை சொல்ல வேண்டாம், என்ன?"

அவனுக்கு அதில் உடன்பாடில்லாததை அவன் உடல்மொழி கூறியது.

"அம்மாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப்போறேன், அதான்" அவளின் சமாதானம் வேலை செய்தது. சரியெனத் தலையசைத்தான் யுவன்.

(தொடரும்)

About The Author