கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 20

யமுனாவை கங்கா ஞாயிற்றுக்கிழமை காலை அழைத்துச் சென்றதும், "நல்ல பொண்ணுடி. நல்ல மரியாதை, புத்திசாலித்தனம். கொலு பொம்மை மாதிரி அழகாவும் இருக்கு" என்றார் மங்கை யமுனாவைக் குறித்து.

"ஆமாம்மா… ஆனா இது கண்ணாடி பொம்மை. ரொம்ப கவனமா ஹேண்டில் பண்ணணும்" என்றாள் விஜி பெரிய மனுஷி போல.

"சரி, சாயந்தரம் விக்கி வர்றான். அப்பா எதோ உங்க கிட்ட முக்கியமா பேசணுமாம். எங்கேயும் போயிடாதே" என்றார் மங்கை.

"முக்கியமாவா? என்னன்னு சொல்லுங்கம்மா. இல்லைன்னா என் தலையே வெடிச்சிடும்" அவசரப்படுத்தினாள் மகள்.

"அடங்க மாட்டியே நீ? ஹாஸ்பிடல் மானேஜ்மென்ட் பற்றியா இருக்கும்" மகளைப் பற்றி நன்கு அறிந்தவர் அவர்.

"ய்யே… இவ்வளவுதானா? சுவாரஸ்யமா பெரிய டாக்டர்கிட்டேர்ந்து ஒண்ணும் எதிர்பார்க்க முடியாது போல" என்று பெருமூச்சு விட்டாள் விஜி.

இரவு உணவுக்கு டைனிங் டேபிளில் நால்வரும் அமர்ந்திருந்த போது விஜியைத் தவிர மற்ற மூவரிடமும் ஏதோவொரு எதிர்பார்ப்பிருந்தது.

அமைதியைக் கலைத்தார் சந்தானம்: "மாயாவைப் பற்றி என்ன நெனைக்கிறே, விஜி?"

"யாருப்பா மாயா?" குறுக்கே புகுந்து கேட்டான் விக்ரம்.

"குமரன் அங்கிள் பொண்ணு. நேத்திக்கு இங்கே வந்திருந்தாங்க" என்றவர் விஜியிடம் திரும்பினார்.

"ரொம்ப கூலான பொண்ணுப்பா. வெரி ஸ்வீட். அமெரிக்காவில வளர்ந்ததுக்கான அறிகுறியே இல்லை"

"ஆமாங்க, யமுனாவுக்குக் கூட அவளை ரொம்பப் பிடிச்சிருந்தது" என்று தன் பங்குக்குச் சொன்னார் மங்கை.

"யமுனாவா?" என்றான் விக்ரம் புருவம் சுருக்கி விஜியைப் பார்த்தபடி.

"நம்ம விஜி ஃப்ரண்ட் யமுனா தெரியாது? அவ இங்கேதான் நாலைஞ்சு நாள் இருந்தா" என்று விளக்கம் தந்தார் மங்கை.

"மாயாவை உனக்குக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம், விக்கி" திடுமெனப் போட்டுடைத்தார் சந்தானம்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்தார்கள் விக்ரமும் விஜியும். விஜிக்கு ஏனோ யமுனாவின் நினைவு வந்தது.

"ம்?" விக்ரமுக்குத் தன் காதில் விழுந்ததை நம்ப இயலவில்லை. வாயிலிருந்ததை விழுங்க முடியாமல் திணறினான்.

"குமரன் அங்கிள் அமெரிக்காவில சொந்த பிஸினஸ் பண்றார். பெரிய மில்லியனர். உனக்கு அவர் பொண்ணைப் பண்ணணும்னு விருப்பப்படறார். நானும் சரின்னு சொல்லிட்டேன்" சந்தானம் பதற்றமேதுமில்லாமல் கூறினார்.

"வ்வ்வாட்?" கோபமும் அதிர்ச்சியுமிருந்தன விக்ரமின் வாயிலிருந்து வெடித்த அந்த ஒற்றை வார்த்தையில்.

"ரிலாக்ஸ், விக்ரம்" என மகனை சாந்தப்படுத்த முயன்றார் சந்தானம்.

"எனக்கு 24 வயசுதாம்பா ஆகுது. இன்னும் படிச்சே முடிக்கலை. கல்யாணம் பற்றியெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கலை"

"அதனாலென்ன? அதுக்குத்தானே நாங்க இருக்கோம்? பசங்களுக்கு எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியாதா?" சந்தானத்திடம் மெல்ல கோபம் எட்டிப் பார்த்தது.

பேச்சு தீவிரமாவதை கவனித்த விக்ரம், "இது பற்றி இனிமே பேச வேண்டாம்பா" என முற்றுப் புள்ளி வைக்க முயன்றான்.

"பாரு விக்ரம். அவங்க பையன் ஷங்கருக்கும் விஜியைக் கேக்கறாங்கடா" மங்கை அவனை சம்மதிக்க வைக்க இது உதவும் என நினைத்தார்.

விஜிக்குள் பட்டாம் பூச்சிகள் பறந்தன. ஜிவ்வென வில்லிலிருந்து விடுபட்டு வானத்தில் பறந்த அம்புபோல உல்லாசமாய் இருந்தது. தன் சந்தோஷம் வெளிப்படையாய்த் தெரிய வேண்டாமென தலையைக் குந்து கொண்டாள்.

‘தடியா… இதுக்காகவாவது ஒத்துக்கோடா’ மனதுக்குள் அண்ணனிடம் வேண்டிக் கொண்டாள்.

விஜியை அரைப் பார்வையில் அளந்தவன் எழுந்து கைகழுவினான்.

"ஸாரிப்பா" தீர்க்கமாகச் சொல்லிவிட்டு வெளியேறப் போனவனிடம்,

"யாரையாவது லவ் பண்றியாடா?" எனக் கோபத்தோடு கேட்டார் மங்கை.

"தெரியலைம்மா" என்று துணிவாய்ப் பதிலளித்தான் மகன்.

***

நேற்று வீட்டில் தகராறென்று விஜி சோகமாய்ச் சொன்னதும், "வெல்கம் டு த க்ளப். வாழ்க்கை சுவாரஸ்யமா இல்லைன்னு நீதானே சொன்னே?" தோழியை வெறுப்பேற்றினாள் யமுனா.

"எல்லாம் உன்னாலதான்" என விஜி தன்னைக் குற்றம் சாட்டியதும் திடுக்கிட்டாள் யமுனா.

"ஸாரிடி… நான் ஏதாவது தப்புப் பண்ணிட்டேனா?" படபடப்பாய்க் கேட்டாள்.

நேற்று வீட்டில் நடந்ததை விவரித்தவள் யமுனாவின் மாறும் முகபாவங்களை உற்றுக் கவனித்தாள். நொடிக்கு ஆயிரம் உணர்ச்சிகள் ஓடிய அந்த முகத்திலிருந்து எதையும் புரிந்து கொள்ள இயலவில்லை.

"இதில நான் என்ன செய்தேன்?" அப்பாவியாய் மெல்லிய குரலில் கேட்ட யமுனாவிடம்,

"உனக்குத் தெரியாது?" அழுத்தமாய்க் கேட்டாள் விஜி.

"ப்ராமிஸா எனக்குத் தெரியலைடி" தழுதழுத்தாள் யமுனா.

"நீயும் விக்ரமும் லவ் பண்றீங்கதானே?"

"என்னது?" தோழியின் அதிர்ச்சி விஜிக்கு வியப்பைத் தந்தது.

யமுனா புரியாதது போலக் கேட்டாலும் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தாள் விஜி.

"ஏண்டி இப்படிக் கேட்டே? நான் உங்கண்ணனை மொத்தமா நாலு முறை பார்த்திருப்பேன். அதுவும் நீ இருக்கும்போது"

"ஸோ வாட்? அதான் லவ் பண்றியா இல்லையான்னு தெரியலைன்னு சொன்னான் போலிருக்கு"

"அவர் சொன்னது என்னை இல்லை"

இப்போது விஜி அதிர்ந்தாள்.

"அவரை வேறொரு பொண்ணோட பார்த்தேன்" யமுனா மனசுக்குள் போட்டு வெம்பிக் கொண்டிருந்ததை சமயம் கிடைத்ததும் தோழியிடம் பகிர்ந்து கொண்டாள்.

"என்ன பார்த்தே?" விஜி நம்பிக்கையில்லாமல் கேட்டாள்.

"ப்ச்… வேண்டாம் விடு. உங்கண்ணன் சொன்னது நானில்லை. அவ்வளவுதான்"

"அடிப்பாவி… உன்னாலதான் ஷங்கர் எனக்குக் கிடைக்கலைன்னா கொஞ்சமாவது மனசைத் தேத்திக்கலாம். ஆனா இப்போ வீட்ல போட்டுக் கொடுக்கறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலை"

"டீ… டீ… என்னால வீட்ல பிரச்சினை வேண்டாண்டி"

"வெறும் பிரச்சினை இல்லை, மகளே! போர்! போர்!" என்று வீராவேசமாய்க் கிளம்பிப் போனவளைக் கவலையோடு பார்த்தாள் யமுனா.

About The Author

3 Comments

  1. Suj

    கதை ரொம்ப நன்றாக செல்கிறது . ஆவலுடன் அடுத்த வாரத்திற்கு காத்திருக்க வைக்கிறது

Comments are closed.