கந்தசாமி – இசை விமர்சனம்

கோடம்பாக்கத்தில் ‘கந்தசாமி’ எனுஞ் சொல் ஏதோ மந்திரம் போல ஆகிவிட்டது. மொத்த சினிமா உலகமும் விக்ரமின் இந்தப் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது!!. கதாநாயகி ஷ்ரேயா இன்னும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டிருக்கிறார். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் மிக மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கிறதாம் இத்திரைப்படம். “திருட்டுப்பயலே”வின் வெற்றிக்குப் பிறகு சுசி கணேசன் ஆரம்பித்த படம் இது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுத்து வருகிறார் மனிதர்.

தெலுங்கு நடிகர் க்ருஷ்ணா, ஆஷிஷ் வித்யார்த்தி, மலையாள நடிகர் இந்திரஜித், பிரபு, விவேக் மற்றும் பலர் நடிக்கும் ‘கந்தசாமி’ ஜுன் பன்னிரெண்டாம் தேதியன்று வெளிவரும் என்று சொல்கிறார்கள். மல்லானா என்ற பெயரில் தெலுங்கிலும் வரப் போகிறதாம். அது மட்டும் அல்லாமல், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியன் மொழிகளிலும் டப்பிங் செய்திருக்கிறார்களாம். அடேங்கப்பா!

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையில் மே மாதம் பதினேழாம் தேதியன்று படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் தேவிஸ்ரீபிரசாத். எல்லா பாடல்களையும் எழுதியிருப்பவர் விவேகா. இந்த இசைத்தட்டில் ஒரு முக்கியமான புதுமை. ஆண் குரல் வரிகள் அனைத்தையும் விக்ரமே பாடியிருக்கிறார். ஆங்காங்கே, சில இடங்களில் விவேகாவும் தன் குரலைத் தந்து உதவியிருக்கிறார். எந்த ஒரு பின்னணிப் பாடகரும் உபயோகப்படுத்தப்படவில்லை. ஆகா!! விக்ரமுக்கு ஒரு “ஓ” போட வேண்டியதுதான்.

இதெல்லாம் டூப்!

இது என்ன விக்ரமின் குரலா! மூச்சு விடாமல் இத்தனை அழகாக பேசுகிறார்!! என்ன பேசுகின்றார்? நம் ஊரில் உள்ள அனைத்து தின்பண்டங்களையும் ஒப்பிக்கிறார். அதன் பிறகு பாடல் ஆரம்பிக்கிறது. பாடல் என்றால் ஒரே வரி, மூன்று முறை வருகிறது. “இதெல்லாம் டூப்! பிட்சாதான் டாப்!” கூடவே அழகான எலெக்ட்ரிக் கிடார் ஒன்று. அதன் பிறகு மீண்டும் ஒப்பித்தல், இம்முறை உறவினர்களின் பட்டியல். அப்புறம், “இதெல்லாம் டூப்! நண்பன்தான் டாப்!” அடுத்த பட்டியல், “சோகம், அழுகை” என்று ஆரம்பித்து, “சகுனி வேலை, புழுகுமூட்டை, அல்லக்கை, டகுல் வேலை, பிச்சாத்து” என்று நீளுகின்றது. பிறகு, “இதெல்லாம் டூப்.ஜாலிதான் டாப்!” மீண்டும் கிடார். கடைசியாக, “சாமி” என்று பெயர் வைத்தவர்களின் பட்டியல், “ஆறுச்சாமி” உள்பட. “இதெல்லாம் டூப், கந்தசாமிதான் டாப்!” மீண்டும் கிடார், பாடல் முடிந்துவிடுகிறது. அப்பப்பா! என்ன ஒரு பாடல்!! இதை ஒரு பாடல் என்று சொன்னால், டூப்தானே!

Excuse Me, Mr. Kandasamy

தேவிஸ்ரீபிரசாதின் கற்பனையில் வித்தியாசமான ஒரு பாடல். ஷ்ரேயா, விக்ரமை காஃபி சாப்பிட அழைக்கிறார். அவர் வர மறுக்கிறார். அதன் பிறகு ரெண்டு பேரும் பாடல் முழுவதும் சண்டை போடுகிறார்கள். விக்ரம், ஒவ்வொரு வரியிலும் “போடீ” என்று சொல்லிவிட்டு, கடைசியில், “எக்ஸ்க்யூஸ் மீ, மிஸ் சுப்புலக்ஷ்மி, யூர் ஆக்டிவிட்டீஸ் ஆர் தப்பு லக்ஷ்மி, உன் பேச்சும் தாட்டும், ரொம்ப குப்பை லக்ஷ்மி!” என்று விரட்டி அடிக்கிறார். என்ன ஒரு கற்பனை, அப்பப்பா!! முழுப்பாடலும், காதலனும் காதலியும் பேசுவது போலவே அமைந்திருக்கிறது. “கடவுள் இல்லை என்று சொன்னான் ராமசாமி, காதல் இல்லை என்று சொன்னான் கந்தசாமி” என்று ஈ.வே.ரா.பெரியாரை எல்லாம் பாட்டில் இழுத்திருக்கிறார்கள். வரிகளை கவனித்துக் கேட்டால், விழுந்து விழுந்து சிரிப்பது நிச்சயம். “கொஞ்சம் மூடு” என்று விக்ரம் அதட்டுவதும், “ரொம்ப மூட்” என்று பெண் சொல்வதும் டாப்!! பாடல் இவ்வளவு நன்றாக அமைந்திருப்பதற்குக் காரணம் விக்ரமும், ஷ்ரேயாவிற்கு குரல் கொடுத்த சுசித்ராவும்தான் என்று சொன்னால், அது மிகையாகாது.

Allegro

அப்படி என்றால்? இத்தாலிய மொழியில் ‘மகிழ்ச்சி’ என்று அர்த்தமாம். ஐரோப்பிய இசை முறைகள் பற்றி அறிந்தவர்களுக்கு, Allegro என்பது ஒரு விதமான டெம்போவை குறிக்கும் என்பது தெரிந்த விஷயமே! சரி, இதற்கும் கந்தசாமிக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் ஷ்ரேயாவின் அறிமுகப் பாடலாக இருக்கக்கூடும். ஒரு பெரிய ஓபராவின் பின்னணியில், இத்தாலிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து அம்மணி ஆட்டம் போடுகிறாராம். அது சரி, பாடலில் தமிழ் வரிகள் ஏதேனும் உள்ளதா? பயப்பட வேண்டாம், முழுப்பாடலும் தமிழில்தான்! “நான் இந்தியா பொண்ணுதாங்கோ” என்று ஆரம்பிக்கும் இப்பாடலை ரீட்டா பாடியிருக்கிறார். கொஞ்சம் வார்த்தைகளை கடித்துத் துப்பினாலும் பரவாயில்லை. பாடலை வெள்ளித் திரையில் பார்த்தால் இன்னும் ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆமாம், ஷ்ரேயா ஆடுவாரே!!

மாம்போ மாமியா

திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே, பாடல்களைப் பற்றிய விவரங்கள் எப்படியோ மக்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். இப்பாடலை மெக்ஸிகன் முறையில் அமைத்திருக்கிறார்களாம். விக்ரமின் குரல் ரொம்பவும் அருமையாக இருக்கிறது. இவர் ஒரு ‘புரொஃபெஷனல் பின்னணி பாடகர்’ இல்லை என்று சொன்னால், யாராலும் நம்ப முடியாது. அத்தனை கச்சிதமாக பாடியிருக்கிறார். நடுவில் குரலை மாற்றி, இரண்டு மூன்று விதமாக பாட முயற்சி செய்திருக்கிறார். இதுவும் ஒரு காதல் டூயட்தான். பெண் குரல் ரீட்டா. முழுப்பாடலின் இசையும் உபயோகப்படுத்திய கருவிகளும் மெக்சிகன் ஸ்டைலில் அமைந்திருக்கின்றன. இன்னொரு வித்தியாசமான முயற்சி, ரசிக்க முடிகிறது.

மியாவ் மியாவ் பூனை

எல்லா பாடல்களும் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டால், தேவிஸ்ரீபிரசாதின் பழைய பாடல்களை நினைவூட்டும் விதத்தில் இந்தப் பாடல். இதுவும் காதல் டூயட்தான். விக்ரமுடன் இணைந்து பாடியிருப்பவர் ப்ரியா ஹிமேஷ். இசையமைப்பாளரின் வழக்கமான பீட்ஸ், அபத்தமான வார்த்தைகள் – இப்பாடலைப் பற்றி வேறேதும் சொல்வதற்கு இல்லை.

பம்பர கண்ணாலே

அதெப்படி, பழைய பாடல் ஒன்றின் ரீமிக்ஸ் இருந்தாக வேண்டுமே!! சந்திரபாபுவின் பழைய பாடலை எடுத்து, முதல் இரண்டு வரிகளை படாத பாடு படுத்தியிருக்கின்றார்கள். அதனுடன், “எம் பேரு மீனாகுமாரி” என்று ஏதோ வரிகளைச் சேர்த்து, அத்துடன் ஆங்கில வார்த்தைகள் கலந்து… கொடுமை! போக்கிரி படத்தில் நடித்த முமைத்கான் ஆட்டம் போடும் “ஐடம் நம்பர்” என்கிறார்கள். பாடியிருப்பது “மன்மத ராசா” மாலதி. வரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – அபத்தமோ அபத்தம். மீண்டும் தேவிஸ்ரீபிரசாதின் மாமூல் சரக்கு.

தீம் இசை

கந்தசாமியைப் போற்றி ஒரு பாடல். தேவிஸ்ரீபிரசாத் பாடியிருக்கிறார். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என்று இதைக் கேட்டால் தெரிகிறது. “பட்டினியா வாடுகின்ற பாவமான ஜீவனுக்கு, ஏழு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான். ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பார்த்துப்புட்டா, எட்டி எட்டி மூஞ்சி மேல உதை விடுவான்!” அப்படியே செய்தி!! இத்திரைப்படம் “தி ப்ரேக்ஃபாஸ்ட் க்ளப்” என்ற படத்தின் தழுவலா என்று கேட்கப் பட்டபோது “இல்லை, இது ராபின்ஹுட் தழுவல்” என்று பதில் வந்தது. அது உண்மையாக இருக்கலாமென்று இப்பொழுது புரிகிறது.

சொல்லாமல் சொல்வான்

இதுவும் ஏதோ தீம் ம்யூசிக் போலத்தான் இருக்கிறது. மீண்டும் கந்தசாமியைப் பற்றி! “எல்லோருக்கும் கொடுக்க வந்த சாமி” கந்தசாமியாம். இப்பாடலில் எத்தனை முறை “கந்தசாமி” என்று வருகிறது என்று போட்டி வைக்கலாம். இதற்கு முன் கேட்ட தீம் ம்யூசிக்கில் வந்த அதே வரிகள் இதிலும் இடம் பெற்றிருக்கின்றன. இரண்டு நிமிடங்களில் முடிந்து விடுகிறது.

இப்படத்திற்கு இரண்டு மூன்று வித்தியாசமான பாடல்களைத் தந்ததற்காக இசையமைப்பாளரைப் பாராட்ட வேண்டும். விக்ரமையே பாடவைத்தது ஹைலைட். இவ்வளவு அழகாக மனிதர் பாடுகிறார், இன்னும் நிறைய பாட வேண்டும். பாடல்களை திரையில் பார்த்துக் கொண்டே கேட்டால், இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது..

About The Author

2 Comments

  1. Rishi

    விக்ரம் வாய்ஸ் நல்லா இருந்தது. சுசித்ராவின் வாய்ஸ் கிறங்க வைக்கிறது. எக்ஸ்கியூஸ் மீ பாடல் இஸ் த பெஸ்ட் ஒன்.

    குண்டக்க மண்டக்க என்ன வார்த்தையாவது போட்டு, கோர்த்து அதையும் ஒரு பாட்டுன்னு சொன்னா அது மியாவ் பாட்டுக்குப் பொருந்தும்.

Comments are closed.