கந்தர்வ வீணைகள் (18)

இது என்ன இடம்..?

தலையில் விண்,. விண்ணென்று வலித்தது.. காலில் பெரிய கட்டு.. கையை அசைக்க முடியவில்லை..

எனக்கு என்னவாயிற்று..? குமார் என்னை அந்தப் பாலத்திலிருந்து கீழே தள்ளி விட்டான். பிறகு.. பிறகு.. என்ன நடந்தது..?

ராமசாமி பார்த்தார்.

சுற்றிலும் போலீஸ் காவல் இருந்தது..

இவரையே குற்றவாளி என்று அந்தக் குமார் நிரூபித்துவிட்டானா..?

கடவுளே.. மீண்டும் நான் தவறு செய்துவிட்டேனே..?

டாக்டர் வர.. அவருக்குப் பின் காவல்துறை அதிகாரி வர.. அவருக்குப் பின்னே சஞ்சய்யும், ப்ரவீணாவும்..

”சஞ்சய் நான் கொலை பண்ணலை சஞ்சு.. என்னை.. என்னை..”

டாக்டர் கையமர்த்த.. ப்ரவீணா ராமசாமியின் கரங்களை அன்புடன் பிடித்துக் கொண்டாள்.

”ஐயா கவலைப்படாதீங்க.. நீங்க கொலைகாரர் இல்லை.. கவலைப்படாதீங்க..”

”ஆமாம் மிஸ்டர் ராமசாமி.. இவங்க.. இந்த ப்ரவீணா தன் செல்போன் கேமிரால எல்லாத்தையும் படம் பிடிச்சிருக்காங்க.. குமார் சொன்னது.. உங்களை அவன் ஆத்துல தள்ளிவிட்டது எல்லாமே பதிவாகியிருக்கு. இனி அவன் தப்ப முடியாது.. சரியான ஆதாரம்.. நீங்க இவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்..”

ராமசாமி வியப்புடன் ப்ரவீணாவைப் பார்த்தார்.

அன்றைய தினம் என்ன நடந்தது..?

நிகழ்ச்சிகளை ப்ரவீணா மீண்டும் தன் மனதுள் நினைவுப்படுத்திக் கொண்டாள்.

அந்தக் காலை நேரத்தில் அமைதியும், அழகும், பசுமையும், கறவை மாடுகளின் ஒலியும், பறவைகளின் சப்தங்களும்..

ஆண்டாள் பாடுவதைப் போல கீசு கீசுவென்று ஆனைச்சாத்தான் குருவிகள் பேசிய பேச்சவரம் கேட்டிலையோ? என்று பாடத் தோன்றியது.இவள் அந்த மங்கிய காலை நேரத்தில் நடந்தபடி யோசித்தாள்.

அந்தக் குமாரை கண்டுபிடிக்க வேண்டும். அவன் இருப்பிடம் தெரிய வேண்டும். முன்பு இந்தக் கிராமத்தில்தான் வீடு எடுத்துத் தங்கியிருந்தானாம்.. அதன் பின் ராமசாமியிடம் ஒட்டிக் கொண்டு விட்டானாம்.. அந்த வீடு அப்படியே பாழடைந்துதான் இருக்கிறதாம். இத்தனை நாட்களாக வராதவன் இப்போதுதான் அண்ணி இறந்ததற்காக வந்திருக்கிறான்.
அவன் வீடு எங்கேயிருக்கும்..?

இவள் யோசித்தபடி நடந்தபோதுதான் அந்த ஆற்றுப் பாலத்தில் இருவர் நடந்து வருவது தெரிந்தது..

அட.. இது ராமசாமி இல்லை.. சஞ்சயின் தந்தை.. கூட வருவது குமார்.. இவள் தேடிய அதே குமார்தான்.தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அடர்ந்த மரத்தின் மறைவில் இருந்தபடி அவர்கள் பேசியதைக் கேட்டாள் ப்ரவீணா.காமிரா செல்போன் கையோடு இருந்தது வசதியாக இருந்தது.

குமாரின் பேச்சு துல்லியமாகப் பதிவாகிவிட்டது..

நிசப்தமான காலை நேரம்.. ஆள் நடமாட்டம் இல்லாத ஆற்றுப் பாலம்..

அப்போதுதான் திடீரென்று குமாரசாமி தன் அண்ணனைத் தாக்கியது தெரிந்தது..

சட்டென்று அந்த நிகழ்ச்சியையும் கேமிரா போனில் பதிவு செய்து கொண்டாள்.

”மேடம்..”

இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.

”யெஸ்.. உங்களுக்கு சம்மன் வரும். நீங்க சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரணும்..”

”கண்டிப்பா வருவேன். என் அக்காவோட ஆத்ம சாந்திக்காக நான் கட்டாயம் இதைச் செய்தே ஆகணும்..”
ராமசாமி ஏதோ சொல்ல முற்பட.. இன்ஸ்பெக்டர் தடுத்தார்.

”டேக் ரெஸ்ட்.. உங்க வாக்குமூலத்தையும் வாங்கிக்கிறோம்.. இவங்க.. இந்த ப்ரவீணா யாருன்னு சொல்லலையே..?” –

இன்ஸ்பெக்டர் கேட்டார்..

ராமசாமி சிரித்தபடி கூறினார்..

”ப்ரவீணா என் மருமக.. இதோ இந்த சஞ்சய் என் மகன்.. ப்ரியா என் பேத்தி. ஊட்டி கான்வென்ட்டிலே படிக்கிறா..”

ப்ரவீணாவும், சஞ்சயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சில அற்புதங்கள் இப்படித்தான் திடீரென்று நிகழும். சஞ்சய் பிரமித்துப் போனான். தன் காதலைச் சொல்லாமலேயே ப்ரவீணா இவனுக்குக் கிடைக்கப் போகிறாள்.

அதிலும் இவனை வெறுத்த இவன் தந்தையே திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார்.

”அம்மா.. நீ தெய்வம்.. உன் ஆசி எனக்குக் கிடைத்துவிட்டது. என் திருமணத்தில் அப்பாவுடன் அருகில் நின்று என்னை ஆசீர்வதியம்மா..”

மனதுக்குள் அழுதான் சஞ்சய்..

ப்ரவீணாவும் தன் மனதில் கூறிக் கொண்டாள்.

அப்பா.. என் முதல் புத்தகத்தின் முதல் பிரதியை ஒரு நல்ல நண்பனாக சஞ்சய் பெற்றுக் கொண்டார்.

”இப்போது இந்த இரண்டாவது புத்தகமான கந்தர்வ வீணையின் கதாநாயகனே நீங்கள்தான்.. நீங்கதான் இந்தப் புத்தகத்தை வெளியிடப் போறீங்க..? உங்க மருமகளா அதை நான் வாங்கிப்பேன்.. இந்த கந்தர்வ வீணைகள் என் சகோதரி மாலதிக்கும், என் நாத்தனார் சுருதிக்கும் அர்ப்பணம்..”

இனி நான் முற்றும் போட்டுவிடுவேன்.

(முற்றும்)

About The Author