கரிசல் காட்டுக் கதை சொல்லி (1)

”எத்தன மணிக்கிங்க வண்டி வரும்” என்று அவள் கேட்டதற்கு ”ஷ்ஷ்…. எக்ஸஸ்ஸைஸ்… பண்ணும் போது…. பேச்சு… குடுத்தா… போச்சு” என்று மூச்சிரைத்தான் அவன்.

”எழுத்தாளர் சார் எக்ஸஸ்ஸைஸ் பண்ணும்போது கூட எதுகை மோனைலதான் பேசுவீங்களாக்கும்” என்று அவன் கன்னத்தைச் செல்லமாய் நிமிண்டினாள் அவள்.

”என்ன இன்னிக்கி எழுத்தாளருக்கு இப்படி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது? எக்ஸஸ்ஸைஸ் ஓவர் டோஸாப் போச்சா என்ன?”

”ஆமாம்மா, கொஞ்சம் அதிகமாத்தான் பண்ணிட்டேன். இன்னிக்கி விழாவுல ஐயாதானே ஹீரோ! மேடையில நிக்கிறபோது நெஞ்ச நிமித்திக்கிட்டு கெம்பீரமா நிக்க வேண்டாமா!”

”நீங்க ஹீரோன்னா, நாந்தானே ஹீரோயின்! நானும் மேடையில கெம்பீரமா இருக்க வேண்டாமா! இருங்க நானும் க்விக்கா ஒரு வாக் போயிட்டு வந்துர்றேன்.”

”சிச்சீ, மேடம் வாக் போறாங்களாம்ல! வாக்கிங்கெல்லாம் வயசாளிங்களுக்கானது. ஒனக்கும் எனக்கும் எதுக்கும்மா அது? இங்க வா ஸிம்ப்பிளா ரெண்டு எக்ஸஸ்ஸைஸ் சொல்லித் தர்றேன். டெய்லி அதச் செய். என்னயே மாதிரி ட்ரிம்மா ஆயிருவ.”

”ஐயேக் கைய விடுங்க. ஒங்க மொரட்டு எக்ஸஸ்ஸைஸெல்லாம் என்னோட நாசூக்கான ஒடம்புக்கு ஒத்துக்காது. நா ஓடிப்போய் ஒரு வாக் போய்ட்டு வந்துர்றேன். எத்தன மணிக்கி வண்டி வரும்னு மட்டும் சொல்லுங்க.”

”மெட்ராஸ்ல சாயங்காலம் ஆறு மணிக்கி ஃபங்ஷன். இங்கப் பாண்டிச்சேரியிலயிருந்து நாம மூணு மணிக்கிப் பொறப்படணும். ரண்டரைக் கெல்லாம் கார் வந்துரும்னு சொன்னங்க!”

கார் வந்தது. விழா அமைப்பாளர்களின் பிரதிநிதியொருவர் டிரைவரோடு முன் ஸீட்டிலிருக்க, இவர்கள் இரண்டு பேரும் பின்னால் அமர்ந்தார்கள்.

ஈஸ்ட் கோஸ்ட் ரோடின் ரம்மியத்தை ரசித்தவாறே பயணப் பட்டுக் கொண்டிருந்தபோது ரகசியமாய்க் கணவனின் காதைக் கடித்தாள். ”ஒங்களப் பாக்கப் பாக்க எனக்குப் பொறாமையா இருக்குங்க. என்ன ஸ்மார்ட்டா இருக்கீங்க! என் ராஜா, நெஜம்மாவே நீங்க ஹீரோதான்!”

”எனக்கு ஒன்னப் பாத்தா பொறாமையாயிருக்கு தெரியுமா! ஒன்னோட மொகமும் ஒடம்பும் எனக்கு நம்ம ஃபஸ்ட் நைட்ல பாத்த மாதிரியே இருக்கு. இந்த வாக்கிங் போயும் வெரதம் இருந்துமே நீ ஒடம்ப இப்படிச் சிக்குன்னு வச்சிருக்கியே, நா சொன்ன மாதிரி ஸிம்ப்பிள் எக்ஸஸ்ஸைஸும் பண்ணினேன்னா…”

”அட ஒங்க எக்ஸஸ்ஸைஸ மூட்ட கட்டி வைய்ங்க. என்னப் பாத்து நீங்க பொறாமப்படறீங்க, ஒங்களப் பாத்து நா பொறாமப் படறேன். நம்ம ரண்டு பேரையும் பாத்து எத்தன பேர் பொறாமப் படறாங்க தெரியுமா!”

”அதுக்குப் பேர் பொறாமையா, வயித்தெரிச்சலா? எப்படியும் இருந்துட்டுப் போகட்டும். இங்க பாரும்மா, இன்னிக்கிப் பொறந்த நாள் விழாவ ரொம்ப அமர்க்களமா ஏற்பாடு பண்ணியிருக்காப்பல தெரியுது. விழாவுக்கு எழுத்தாளர்கள் வருவாங்க, அரசியல்வாதிங்க வருவாங்க. சினிமாக்காரங்க வருவாங்க, வாசகர்கள் வருவாங்க. எல்லாக் கண்ணும் ஒரே மாதிரி இருக்காது. கண்ணு பட்டா நல்லதில்ல. ஊருக்குத் திரும்பி வந்ததும் ஞாபகமாத் திருஷ்டி சுத்திப்போடு.”

”ஒங்களுக்கு நா சுத்திப் போடுவேன். எனக்கு?”

”நா சுத்திப் போடறேன். நாந்தானேம்மா ஒனக்கு எல்லாம்.”

முன் ஸீட்டுக்கு எட்டிவிடாதபடி எச்சரிக்கையான தணிந்த குரலில் உரையாடல் நடந்து கொண்டிருந்தது, அந்நியோன்னியமாய். இவன் அவளுடைய கையைப் பிரியத்தோடு பற்றி அழுத்தினான். அவள் இன்னுங்கொஞ்சம் நெருங்கியமர்ந்து, இடைவெளியை இல்லாமலாக்கினாள்.

மவுன்ட் ரோடிலுள்ள அந்த ஏஸி அரங்கம் நிரம்பி வழிந்தது. பாதையெங்கும் போஸ்டர்கள், இந்த எழுத்தாளனின் படத்தோடு. பிரபலமான அரசியல் புள்ளியொருவர் விழாவுக்கு வருகிறதையொட்டி, கட்சிக் கொடிகள் அமர்க்களமாய்ப் பறந்து கொண்டிருந்தன. கட்சித் தலைவர் படத்தோடு, ”வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்” போஸ்டர்கள் வேறே. போஸ்டர் போட்டவர்களெல்லாம் பாவம், பால் குடிக்கிற பாப்பாக்களாயிருக்கும்.

தலைவருக்கு சமமாய் நம்ம விழா நாயகனுக்கும் மேடையில் ஸ்பெஷல் நாற்காலி போட்டிருந்தார்கள். வரவேற்புரை நிகழ்த்திய விழா அமைப்பாளர், தலைவரையும் மற்றெல்லோரையும் முறையாய் வரவேற்ற பின்னால் இந்த விழாவின் மகத்துவத்தை விவரித்தார்.

”….. இந்த விழாவின் நாயகர், கரிசல் காட்டு எழுத்தாளர் திலகம் அவர்களை வாழ்த்தத்தான் நாம் எல்லோரும் பெருந்திரளாய் இங்கே கூடியிருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவர் எண்பத்தைந்தாவது வயதை எட்டுகிற இந்தத் திருநாளில் தான் இவரை வாழ்த்தக் கூடியிருக்கிறோம் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இந்த இளைஞருக்கு எண்பத்தைந்து வயதாகிவிட்டது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?”

அவையோர் ஆரவாரம். ”இல்லை, இல்லை!”

வரவேற்புரையையடுத்து, இந்த விழாவுக்கான செலவை ஏற்றுக் கொண்டிருந்த சினிமா டைரக்டர் மைக்குக்கு வந்தார். மைக்குக்கு வருவதற்கு முன்னால் எழுத்தாளத் தம்பதிகளின் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, அவர்களின் ஆசீர்வாதத்தையும், கூட்டத்தின் ஆரவாரத்தையும் பெற்றார். ”இந்த ரெண்டு பேரும் எனக்கு அப்பா அம்மா மாதிரி” என்று மைக்குக்கு முன்னால் நெகிழ்ந்து போனார் டைரக்டர்.

அடுத்து வாழ்த்துரை வழங்க வந்தார் புத்தம் புதுக் கவிஞர்.
”….. எனக்கு முன் பேசிய இயக்குநருக்கு அடுத்தத் தலை முறையைச் சேர்ந்தவன் நான். இந்த இருவரும் இயக்குநருக்கு அப்பா அம்மா என்றால், எனக்குத் தாத்தா பாட்டி ஆக வேண்டும். நிஜம்மாகவே எனக்கு எண்பத்தைந்து வயதில் ஒரு தாத்தாவும் எழுபத்தைந்து வயதில் ஒரு பாட்டியும் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்….”

தொடர்ந்து, பேச வந்த அனைவருமே எண்பத்தைந்து வயசு எழுத்தாளரைக் குறித்து அநியாயத்துக்கு ஆச்சர்யப்பட்டார்கள்.

”….. என்னுடைய தாத்தா எழுபத்தஞ்சு வயசிலேயே போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால் இந்த மேடையில் கம்பீரமாய் அமர்ந்திருக்கிற இந்த விழா நாயகன் இந்த எண்பத்தஞ்சு வயதிலும் கம்பீரமாயிருக்கிறார் என்றால் அது அவருடைய படைப்புகள் அவருக்குத் தருகிற பலம் என்றுதான் சொல்வேன். அவருடைய எழுத்தாற்றல் தருகிற மனோபலத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பார்….

…. பாண்டிச்சேரியில் இளைஞர்களே தள்ளாடுவார்கள். ஆனால் இந்தத் தள்ளாத வயதிலும் இவர் தள்ளாடாமலிருக்கிறார் என்றால், காரணம் இவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்தும் கூட மதுப்பழக்கம் இல்லாத ஒழுக்க சீலர் என்பது தான்….

….. தமிழ் நாட்டின் தலைசிறந்த படைப்பாளி ஒருவருக்கு இன்றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய விழா நாயகனுக்கு இன்றைக்கு எண்பத்தைந்து வயதாகிறது. அவருடைய துணைவியாருக்கு எழுபத்தைந்து வயது. இந்த முதிய வயதிலும் இந்த இருவருக்குமிடையே நிலவுகிற அந்நியோன்னியத்தை அறிந்து கொள்கிற பேறு இன்றைக்கு எனக்குக் கிட்டியது. நான்தான் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு அவர்களைக் காரில் அழைத்து வந்தேன். முன் ஸீட்டில் நானும் டிரைவரும், பின் ஸீட்டில் இந்த அன்புத் தம்பதி. இந்த முதிர்ந்த வயதிலும் அவர்களுக்கிடையே இருக்கிற நெருக்கம் ஜாடை மாடையாய் என்னுடைய கண்களில் இடறிய போது, ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் நெகிழ்ச்சியும் கொண்டேன்….

…..நம்முடைய கரிசல் காட்டுக் கதாநாயகன் அவர்கள் இந்தியாவின் முதன்மையான இலக்கிய விருதான ஞானபீட விருது பெறுவதற்கு எல்லாத் தகுதியும் உடையவர். வழக்கமாக வயது முதிர்ந்த எழுத்தாளர்களுக்குத்தான் ஞானபீட விருது வழங்கப் படுகிறது. அப்படிப் பார்த்தால், அந்தத் தகுதியை இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்று விட்டார். இந்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, மேலும் காலம் தாழ்த்தாமல் இவருக்கு ஞானபீட விருதினை வழங்கிட வேண்டுமென்றும், அந்த கவுரவத்தை இவர் உயிரோடிருக்கிற காலத்திலேயே வழங்கி இவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்….

இப்படியாய்ப் பற்பல முத்துக்கள் உதிர்க்கப்பட்ட பின்னால், அரசியல் தலைவர் பேச எழுந்தார். கரிசல் காட்டில், எழுத்தாளரின் வீட்டில், பல வருஷங்களுக்கு முன்பு அவரை சந்தித்ததை மனநிறைவோடு நினைவு கூர்ந்தார்.

கரிசல் காட்டரசரின் சிறுகதையொன்றைத் தன்னுடைய பாணியில் எடுத்து விட்டு அனைவரயும் அசத்தினார்.

”…. எண்பத்தைந்தாவது பிறந்த நாள் சென்னையில் இன்றைக்குக் கொண்டாடப்படுவது போலவே, இன்னும் பதினைந்து வருடங்கழித்து இந்தப் படைப்புலகப் பெரியவருடைய நூறாவது பிறந்த நாள், இவர் பிறந்து வாழ்ந்த கரிசல் மண்ணில் கொண்டாடப்பட வேண்டும். நூறு வயது வரை இந்தப் படைப்பாளி இருப்பாரா என்றால், நிச்சயம் இருப்பார். இவருடைய உடல் ஆரோக்யமும், நல்லொழுக்கமும் கட்டுப்பாடான வாழ்க்கையும் இனிமையான இல்லறமும் இவர் நிச்சயம் நூற்றாண்டு காண்பார் என்பதைப் பறைசாற்றுகின்றன. ஆனால் இப்போதே அறுபத்தைந்தைத் தாண்டி விட்ட நான், இன்னும் பதினைந்து வருடங்கள் வாழ்வேனா என்பது தான் கேள்விக்குறி. நான் உயிரோடிருக்கும் பட்சத்தில், அந்த நூற்றாண்டு விழாவை நானே தலைமையேற்று நடத்துவேன் என்று இந்த சபைக்கு உறுதி கூறுகிறேன்….”

ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது.

ஏற்புரைக்கு எழுத்தாளரை அழைத்தபோது, அவர் மிகுந்த சிரமத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்தார்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author