கருட பஞ்சமி

அன்று காலையில் எழுந்த உடனேயே அன்று கருட பஞ்சமி என்று நினைவுக்கு வந்து மனத்துள் ஒரு மெல்லிய பயமும் வெறுப்பும் பரவத் தொடங்கிவிட்டது. அந்த நாள் எந்தக் குழப்பமும் இன்றி, எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மனதுக்குள் இறைவனை வேண்டிக் கொண்டேன். அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். அம்மா, ஈரம் உறிஞ்சுவதற்காகத் தலையில் சுற்றிய துண்டினை அவிழ்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தாள். பூஜை நாட்களில் அம்மாவின் வேலை செய்யும் ஆர்வம் இரட்டிப்பாகிவிடும். இரவு முழுமையாக விடைபெற்றுக் கொள்ளும் முன்பே எழுந்துவிடுவது, எழுந்த கையோடு குளித்து விடுவது, பின்பு தனது மடி கெடாதபடிக்குக் கச்சை வைத்துப் புடவை கட்டிக்கொள்வது என்று அம்மா தனக்கான ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பாள். உறவினர்களில் யாரும் அம்மா அளவிற்கு இவ்வளவு சிரத்தையாக விரதங்களைக் கைக்கொள்வதில்லை. இதைப் பற்றி அம்மா இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி அவர்கள் பெருமைபடப் பேசிக்கொள்வதை நானே கேட்டிருக்கிறேன். கச்சை வைத்துக் கட்டிக் கொள்வதென்பது மடிசாரும் இல்லாமல் சாதாரணப் புடவைபோலும் இல்லாமல் இருக்கும். தெலுங்குக் குடும்பங்களில் இருந்த இம்மாதிரியான புடவை கட்டும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து கொண்டிருக்கிறது. அம்மாவைப்போல் கச்சை வைத்துப் புடவை கட்டிக் கொள்வதென்பது எங்கள் உறவுகளில் பெரும்பாலானவர்கள் மறந்துபோன விசயம். கொஞ்சகாலம் அம்மாவுக்கு போன் செய்தும், நேரில் வந்தும் கச்சை வைத்துப் புடவை கட்டுவது எப்படி என்று தெரிந்துகொண்டு சென்ற ஒரு சில உறவுப் பெண்களும் நாளடைவில் அதைக் கைவிட்டுவிட்டனர். ஆனால், அம்மா அதைத்தான் பண்டிகைக் காலங்களிலும் விரத நாட்களிலும் முதலாவதாகச் செய்வாள்.

"கச்சை வைத்துப் புடவை கட்டுவதென்பது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை. சாதாரணமா புடவை கட்டுறாப்பல ஆரம்பிச்சு ஒரு சுத்து இடுப்பச் சுத்திக் கட்டிக்கோ! அன்னைக்குத் தேதிக்குக் குட்டையான உள்பாவாடைதான் போட்டுக்கணும். பின்னே ஒரு தலைப்ப எடுத்து விசிறி மடிப்பா மடிச்சு அதைக் காலுக்கு இடையிலே, பஞ்சக்கச்சம் கட்டிக்கிறாளோ இல்லையோ? அதேபோல புறத்தால சொருகிக்கணும். இன்னொரு தலைப்ப வழக்கம் போலச் சுத்தி சாதாரணப் புடவைபோலக் கட்டிக்கணும். நாலு தடவ கட்டினாத் தன்னால வர்றது. தெரியலைன்னு கட்டிக்காம இருக்கப்படாது, அப்புறம் தெலுங்கா நாமன்னு எப்படித் தெரியும்?" என்று அம்மா சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

அம்மா, நாட்களையும் வருடங்களையும் பூஜைகளாலும் பண்டிகைகளாலுமே புரிந்து வைத்திருப்பவள். விரதநாட்களில் அவளுக்கு எதுவும் முக்கியமில்லை, விரதத்தைத் தவிர. அன்றைக்கு அவளுக்குப் பிள்ளை, கணவன் என எதுவும் முதன்மையாயிருக்காது. அவளுக்குக் கற்பிக்கப்பட்ட சடங்குமுறைகளை நிறைவேற்றி முடிப்பதிலேயே அவள் கவனமாயிருப்பாள். காலப்போக்கில் மாறியிருக்கும் எந்த மாற்றத்தையும் அவள் அதில் புகுத்துவதில்லை. விஸ்தாரமான பூஜை காரியங்களால் சோர்வடைந்தாலும் அவள் அவற்றைச் சுருக்கிக் கொள்பவள் இல்லை. ஆனால், அப்பா அப்படியில்லை. போகிறபோக்கில் கன்னத்தில் போட்டுக்கொண்டு போவார். காசிருந்தால் பெரிய மாலை, மரியாதை சாமிகளுக்குக் கிடைக்கும். காசு இல்லாவிட்டாலோ அல்லது வேறு தொல்லைகள் வந்து சேர்ந்தாலோ அவர் வாயிலிருந்து புறப்படும் அர்ச்சனைகளுக்கு அஞ்சித் தெய்வங்கள் தங்கள் காதுகளைப் பொத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவருக்கு, அம்மா செய்யும் பூஜைகள் மீது என்ன மரியாதை இருக்கமுடியும்? ஆனாலும் அவர் பெரிய எதிர்ப்பு காட்டாததற்கு, இவற்றையெல்லாம் அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்து உருவாக்கியது அவரது அம்மாதான் என்பதுதான் காரணம் எனலாம். அம்மா தனது மாமியார் சொல்லித் தந்த எந்த முறையையும் இன்றைக்கு வரைக்கும் கைவிட்டதில்லை. தனது அம்மாவே இருந்து அனைத்தையும் செய்வது போன்ற எண்ணம் அப்பாவுக்கு. ஆனாலும் கருட பஞ்சமி நாளில் மட்டும் அவரால் பேசாமல் இருக்க முடிவதில்லை. காரணம், அம்மா அளவுக்கு அதிகமாய் அடையும் உணர்ச்சிவயமும் அதனால் அம்மாவிடமிருந்து உருவாகும் பெரும் அழுகையும். அவை அவரை மிகவும் கோபம் கொள்ளச் செய்துவிடும். எனக்கு விவரம் தெரிந்து இந்தப் பதினைந்து ஆண்டுகளும், அப்பா போடும் பெரும் சண்டையோடும் அம்மாவின் நீண்ட கண்ணீரோடும் முடியாத கருட பஞ்சமி நோன்பு என்று ஒன்று இல்லவேயில்லை. அம்மா பாவம் கணவன், மகன் இவர்களின் நலனுக்காக என்று ஒவ்வொரு விரதத்தையும் கைக்கொள்வது போல அவளோடு பிறந்த சகோதரனுக்காவும், அவனது நலத்துக்காகவும் இந்த நோன்பைச் செய்கிறாள். இதையும் மகிழ்வாகத்தான் அம்மா செய்திருப்பாள், அவளுடைய அண்ணனும் அவள் அருகே இருந்திருந்தால். ஆனால், என்ன செய்வது? அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இருக்கிறாரோ இல்லையோ அதுவே தெரியாது.

கருடபஞ்சமி நோன்பைத் தொடங்குவதற்கு முன்பு அம்மா ஒரு பெரிய நூலினை எடுத்து அதில் ஏழு முடிச்சுகளை இடுவாள். அது எதற்கு என்று கேட்டபோது,"அது ஏழும் அண்ணன் தம்பிகள். ஒரே நூலில் முடிச்சிடப்பட்டதைப் போல ஒரே உயிராய் வாழ்ந்தவர்கள்" என்பாள்.

கருட பஞ்சமி நோன்பின் உச்சம் அந்த நோன்பு தோன்றிய வரலாற்றைப் பற்றிய கதையினைச் சொல்வதுதான். அம்மா தவறாமல் அந்தக் கதையினைச் சொல்வாள். நானோ அல்லது அப்பாவோ அருகிருந்து அதைக் கேட்க வேண்டும். தவறாமல் இடையிடையே ‘ம்’ கொட்டவேண்டும். இந்தக் கதையினை நான் வேறு சில உறவுப்பெண்களும் சொல்லக் கேட்டதுண்டு. அண்ணி முறையிலான ஒருத்தி, அத்தை முறையிலான ஒரு அம்மாள், பாட்டி முறையிலான ஒரு கிழவி எனப் பலர் சொல்லக் கேட்டதுண்டு. எல்லோர் சொல்லும் கதைக்கும் அம்மா சொல்லும் கதைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனாலும் கதையின் உயிரான விசயம் மட்டும் மாறுவதேயில்லை. அம்மா பூஜை அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

"டேய், குளிச்சிட்டியா? சீக்கிரம் வா, கதை சொல்லணும்."

அப்பா எங்கோ தப்பித்துப் போய்விட்டார் போலும். நான் குளித்துத் தயாராகத்தான் இருந்தேன். அம்மா அருகில் சென்று அமர்ந்துகொண்டேன். அம்மா கதை சொல்லத் துவங்கினாள்.

"அழகாபுரி அழகாபுரின்னு ஒரு கிராமம். அந்தக் கிராமத்துல ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்துல அக்கம்மா அக்கம்மான்னு ஒரு பொண்ணு. அவளுக்கு ஏழு அண்ணன் தம்பிங்க. ம் சொல்லு" என்றாள். அப்போதுதான் ‘ம்’ சொல்ல மறந்தது புரிந்தது. எனக்குப் பல கேள்விகள் எப்போதும் இருக்கும். சின்ன வயதில் அவற்றைக் கேட்டு அம்மாவிடம் திட்டும் அடியும் வாங்கியதுண்டு. அந்த அழகாபுரி கிராமம் எங்கேயிருக்கிறது? ஏழு அண்ணன் தம்பி என்கிறாளே அதில் எத்தனை அண்ணன்கள் எத்தனை தம்பிகள்? அம்மா பதில் சொன்னதேயில்லை. ஆனால், மறக்காமல் ‘ம்’ மட்டும் சொல்ல வேண்டும்.

"ம்".

"அவங்க ஏழு பேரும் விவசாயம் பண்ணிப் பிழைக்கிறவங்க. தினமும் விடிகாலைலயே எழுந்து வேலைபார்க்கக் காட்டுக்குப் போயிடுவாங்க. வெயில் உச்சிக்கு வர்ற சமயத்துல அக்கம்மா அவங்களுக்குக் கஞ்சி கொண்டுக்கிட்டுப் போவா. அன்னைக்கும் அப்படித்தான் போனா."

"ம்."

"ஆகாச மார்க்கத்துல, கருடன் நல்ல பாம்பு ஒண்ணத் தன்னோட கால்ல கௌவிண்டு பறக்கிறது. அந்தப் பாம்பு தன்னோட விஷத்தக் கக்க, அது அக்கம்மா கொண்டு போற கஞ்சிக் கலயத்துல விழுந்துடுறது. இது தெரியாம அக்கம்மா அவளோட அண்ணன் தம்பிகளுக்கு அந்தக் கஞ்சியக் கொடுக்க, அவங்க குடிச்சிட்டு மயங்கி விழுந்து செத்துட்டாங்க. இதைப் பார்த்த அக்கம்மா கதறி அழுதா. நான் என்ன பாவம் பண்ணினேனோ?! என் அண்ணன் தம்பிங்க இப்படி விழுந்துட்டாங்களேன்னு கதறி அழுதா." இதைச் சொல்லும்போது அம்மாவின் குரல் ஒடிந்திருந்தது. அம்மா அழுவதற்கான முகாந்திரமாக அவளிடமிருந்து ஒரு கேவல் வெளிவந்தது. அந்தக் கணத்தில் அம்மா அக்கம்மாவாகவே மாறியிருந்தாள். அக்கம்மாவின் சோகம் அம்மாவிடம் நிறைந்துகொண்டது. சகோதரனை இழப்பதன் துயரம் எவ்வளவு பெரியது என்பதை அம்மா அறிவாள். மயங்கிக் கிடக்கும் ஏழு சகோதரர்களும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன அண்ணன் வடிவிலேயே அம்மாவுக்குத் தெரிகிறார்கள். அம்மாவின் அழுகை பெருகி வெடித்தது.

"அண்ணா, அண்ணா" என்று கதறி அழுதாள். அவள் கதறி அழவும் அப்பா உள்ளே வரவும் சரியாக இருந்தது. கூடவே, தூரத்து உறவான ராஜி பாட்டியும் வந்தாள். அப்பாதான் அவர்களை அழைத்து வந்திருக்க வேண்டும்.

"என்ன, பைத்தியம் ஆரம்பிச்சிடுச்சா? என்ன இழவு இது? ஒவ்வொரு வருஷமும் இதே கண்றாவியா?"

"டேய் அம்பி! கொஞ்சம் வாய மூடு. என்னத்துக்கு நீ இப்படி பேசுற? அவ மனசோட அடச்சிண்டுருக்கிற துக்கம், ஏதோ இந்த நாள்ல வெளிவர்றது. தினமும் என்ன இப்படியா அழுதுண்டுருக்கா? நான் பாத்துக்கிறேன், நீ உள்ளே போ" என்று ராஜி பாட்டி அப்பாவை அதட்டி அப்புறப்படுத்தினாள். அம்மா அருகிலிருந்து நான் நகர்ந்துகொண்டேன்.

"அழாதேடி குழந்தே! கண்ணத் தொடச்சிக்கோ! பாதில கதைய நிறுத்திட்டு அழப்படாது. நீ என்னத்துக்கு அழற? உன் அழுகைக்கான பதில் மீதிப் பாதிக்கதையில் இருக்கோல்லையோ? பின்ன என்ன? கண்ணத் துடச்சிண்டு நோம்ப முடிச்சிடுடி. மீதிக் கதையச் சொல்லு! நீ சொல்றியா இல்ல நான் சொல்லவா?" என்றாள் ராஜி பாட்டி. பூசாரி சொன்னதும் அடங்கிப்போகும் சாமியாடி போல அம்மா அடங்கினாள். காற்றும் கண்ணீரும் அடைத்துக் கொண்டிருக்கும் தன் குரல் இடுக்கிலிருந்து, "நானே சொல்றேன்"என்றாள். அருகிலிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள். கொஞ்சம் தண்ணீர் குடித்தாள். சில நொடிகள் கண்களை மூடி இருந்துவிட்டுக் கதையைச் சொல்லத் தொடங்கினாள். ராஜி பாட்டி கதை ஆரம்பிப்பதற்கு முன்னமே பெரிய ‘ம்’ கொட்டினாள்.

"அக்கம்மா அழுதுண்டுருக்காளா, அப்போ ஆகாசமார்க்கமா பார்வதி பரமேஸ்வர் போயிக்கிட்டு இருந்தாங்க. அக்கம்மா குரல் கேட்டதும் பார்வதி ஒரு நொடி தயங்கி நின்னா. ‘சுவாமி, ஒரு பொண்ணோட அழுகுரல் கேக்குதே! ஒரு நிமிஷம் நில்லுங்க’ன்னா. அதுக்குப் பரமேஸ்வரனோ ‘எப்பப் பாரு உனக்கு இதே வேலை! பொம்பள அழுகுற குரல் கேக்கக் கூடாதே’ன்னு கிண்டல் செய்தார். அதுக்குப் பார்வதி, ‘ஒரு பொண்ணோட சோகம் ஒரு பொண்ணுக்குத்தான் புரியும்’ன்னு சொல்லிட்டு, பரமேஸ்வரனையும் கூட்டிக்கிட்டு வேஷம் மாறிக்கிட்டு அக்கம்மா கிட்டப் போனாங்க."

"ம்."

"என்னம்மா, என்ன ஆச்சு அப்படின்னு கேக்க, அக்கம்மா நடந்ததெல்லாம் சொன்னா. ‘நான் என்ன பாவம் பண்ணினேனோ தெரியல. என் அண்ணன் தம்பிங்க எல்லாம் நான் தந்த கஞ்சிய குடிச்சதும் இப்படி மூர்ச்சையாயிட்டாங்க’ அப்படின்னு சொல்லி அழுதா. உடனே பார்வதி, ‘கவலப்படாதே! இதுக்கெல்லாம் காரணம் இருக்கு. போன ஜென்மத்தில நீ பண்ணின பாவம்தான் இதுக்கெல்லாம் காரணம். அதப் போக்க வழியிருக்கு. நான் சொல்ற விரதத்த நீ செய்’ அப்படின்னு சொன்னா."

"ம்."

"அம்மா, இப்போ என்கிட்ட எதுவுமே இல்லையே! நான் எத வச்சி நோன்பு நோக்கிறது’ன்னு அக்கம்மா கேக்க, பார்வதி ‘அத நான் பாத்துக்கிறேன். நீ போய்ப் பக்கத்துல இருக்கிற சுனைல குளிச்சிட்டு வா’ன்னு சொன்னா. அக்கம்மா குளிக்கப்போன நேரத்தில பார்வதி அங்க இருந்த மண்ணாலயே பூஜைக்குத் தேவையான எல்லாத்தையும் செஞ்சா. அக்கம்மா திரும்பி வந்ததும் பார்வதி அக்கம்மாவ இந்த விரதத்தச் செய்யச் சொல்லி தானே முன்ன நின்னு செஞ்சு வச்சா. விரதம் முடிஞ்சதும் அங்க இருந்த புத்து மண்ணெடுத்து அக்கம்மா கையில கொடுத்து ‘இத உன் அண்ணன் தம்பிங்க வலது தோள்ள போடு’ன்னு கொடுத்தா. பரமசிவன் எல்லாத்தையும் பேசாமப் பாத்துக்கிட்டு இருக்காரு. அக்கம்மா புத்துமண்ண அண்ணன் தம்பிங்க தோள்ள போட, எல்லாரும் தூங்கி எழுந்தாப்புல எழுந்தாங்க. அக்கம்மாவுக்குப் பெரிய சந்தோஷம். அவளும் அவ சகோதரங்களும் ஆட்டமும் பாட்டமுமா ஊருக்குத் திரும்பினாங்க. ஏதுடா இது ஒருநாளும் இல்லாத திருநாளா இப்படி ஆட்டமும் பாட்டமுமா இந்த ஏழைங்க வர்றாங்களேன்னு பாத்த ஊரு ஜெனங்க என்னனு விசாரிக்க, அக்கம்மா நடந்ததெல்லாம் சொன்னா. உடனே அந்த ஊரு ஜெனங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமாகி, நல்லது தர்ற அந்த விரதத்த நாமும் பண்ணுவோம்னு சொல்லி எல்லோரும் அதப் பண்ணினாங்க. அதோட மகிமையப் புரிஞ்ச பெரியவங்க இந்த விரதத்த நம்ம தலைமுறை தலைமுறையா செய்யச் சொன்னாங்க. நம்ம பெரியவங்க சொல்லி நாம செய்யுற இந்த விரதத்த நாமும் நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி நம்ம பரம்பரையில இதைத் தொடர்ந்து செய்யணும்" என்று சொல்லி அம்மா கதையை முடித்தாள். அவளுக்குள் இருந்து அக்கம்மா விலகிக் கொண்டுவிட்டாள். அவளுக்கென்ன, விரதம் முடிந்து மண்ணை வலது தோளில் போட்டதும் அவளது சகோதரர்கள் விழித்து அவளுக்குக் கிடைத்துவிட்டார்கள். ஆனால், அம்மாவால் அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மா கையிலும் இருக்கின்றன புற்று மண்ணும் அட்சதையும். ஆனால், அவள் போட்டு வணங்க அவள் அண்ணன் அருகில் இல்லை. அம்மா இன்னும் துக்கத்தின் பிடியில்தான் இருந்தாள். ராஜி பாட்டி அம்மாவின் தோள்களைப் பற்றித் தேற்றினாள்.

"கவலப்படாதே குழந்தே! நீ கும்பிடுற சாமி உன்னைக் கைவிடாது. ஒருநாள் உன் அண்னன் நிச்சயம் வந்து நிப்பான்" பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் யாரோ வாசலில் வந்து நிற்பது தெரிந்தது. அம்மா யாரென்று பார்த்தாள்.
"யாரோ யாசகம் கேட்டு வந்திருக்காங்க" என்றாள் ராஜி பாட்டி. ஆனால் அம்மா பரபரப்படைந்தாள். வேகவேகமாக எழுந்துகொண்டு வாசல் சென்றாள். வந்திருந்தவர் ஒரு யாசகர்தான். ஆனால், அம்மாவுக்குத் தன் அண்ணன் போலவே தோன்றியிருக்கிறது. பெரிய தாடியும் காவி உடையுமாக இருந்த அந்த மனிதரின் கையைப் பிடித்து அம்மா அவரை உள்ளே அழைத்து வந்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றமடைந்திருந்தார். அவரை ஒரு பலகையில் அமரச் சொல்லிவிட்டு, அம்மா உள்ளே போய்ப் புற்று மண்ணையும் அட்சதையையும் அவர் வலது தோளில் போட்டாள். திடீரென்று அவர் காலில் விழுந்து வணங்கினாள். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா தலையில் அடித்துக்கொண்டு வெளியேறினார். பின்பு, அந்த மனிதரை உட்கார வைத்து வயிறார சாப்பிட வைத்து அனுப்பினாள். அவர் வெளியேறவும் அப்பா உள்ளே வரவும் சரியாக இருந்தது. அம்மா அப்பாவை வழிமறித்தாள்.

"இன்னைக்கு நடந்தது பைத்தியக்காரத்தனமில்ல, என் விரதத்துக்கான பிரத்தியட்சமான பலன். வந்த சாமியாரப் பாத்தீங்கல்ல? அவர் என் அண்ணன் போலவேதான் இருந்தார். என் அண்ணனும் சாமியாராகணும்னு சொல்லித்தான் எங்களுக்குச் சொல்லிக்காம காணாம போயிட்டார். அவர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார்ன்னு நம்புறதுக்கு இதுக்கு மேல என்ன உதாரணம் வேணும்? இன்னைக்கு வந்தவர் மாதிரி ஒருநாள் என் அண்ணனும் வந்து நிப்பார். அப்போ தெரியும் நான் செய்கிற பூஜாபலன் என்னன்னு." அம்மா, அப்பாவிடம் பொறிந்து தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டாள். அப்பா கொஞ்சம் அதிர்ந்து போனவர்போல அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

******
அன்றைக்குக் காலையில் வாசல் தெளிக்கப்போன அம்மா போட்ட சப்தத்தில் எல்லோரும் எழுந்துகொண்டோம். வாசலில் போய்ப் பார்த்தபோது வயதான ஒரு மனிதர் நின்றிருந்தார். அம்மா அங்கிருந்து உள்ளே ஓடிப் பூஜை அறைக்குள் நுழைந்து கொண்டதும் புரிந்துவிட்டது, வந்திருப்பது யார் என்று. இவர் நிச்சயம் அம்மாவின் அண்ணன்தான் என்று. எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால், அப்பா ஒரு சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டார். மாமாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்தார். மாமாவின் பின்னாலே பாலிஸ்டர் புடவையால் முக்காடிட்ட, பெரிய வளையங்களைக் காதில் அணிந்த குண்டான பெண்மணி ஒருத்தியும் பின்னாலேயே வந்தாள். அம்மா நீண்ட நேரம் அறையை விட்டு வெளியே வரவில்லை. பின்பு, வெளியே வந்தாள். மாமா அப்பாவிடம் தனது கடந்தகாலம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

"கால்ல நடக்கத் தெம்பு இருக்கிற வரைக்கும் நடந்துக்கிட்டே இருந்தேன். கொஞ்சநாள் எதுவும் சாப்பிடல. பசி மயக்கம், நடக்க வேற முடியலை, மயங்கி விழுந்தப்போ இவ வீடு. மயங்கி விழுந்த நான் கண்முழிக்கவே நாலு நாள் ஆகியிருக்கு. நாலு நாளும் இவதான் என்னப் பாத்துக்கிட்டு இருந்திருக்கா. அவளுக்குன்னு யாரும் இல்ல. என் உயிர வேற காப்பாத்திருக்கா. அதனால் அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கு நாலு மாடு இருந்தது. அதைப் பாத்துக்கிட்டு ஜீவனம் பண்ணினோம். இன்னைக்கு வரைக்கும் குறையில்லை. சந்தோஷமாத்தான் இருக்கோம். என்ன ஒண்ணு, எங்களுக்குன்னு ஒரு வாரிசில்ல. சரி வாரிசுதான் இல்ல, சொந்த பந்தமாவது இருக்கட்டுமேன்னு சொன்னா. அதான் உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். என்னடி? எப்படியிருக்க?" என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டார். அம்மா அந்தப் பெண்மணியையே உற்று நோக்கினாள். பழுப்பு நிறத்தில், தொப்புள் தெரிய தொந்தி சரிய அவள் புடவை கட்டியிருக்கும் விதத்தை அம்மா உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டாள். மாமா அதன் பின்பு சில நாட்கள் எங்களுடனேயே தங்கியிருந்தார். மாமிகூட ஒருநாள் சப்பாத்தி செய்து கொடுத்தாள். அப்பா அதை ரசித்துச் சாப்பிட்டார். அப்பாவும் மாமாவும் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால், அம்மா யாரிடமும் பேசவேயில்லை. அதையெல்லாம் மாமா பெரிதுபடுத்தவோ பொருட்படுத்தவோயில்லை. ஒருநாள் காலையில் சொல்லிக் கொண்டு கிளம்பிப் போனார். அம்மா கொஞ்சம் சகஜமானாள். எனக்குள்ளாக அம்மா பல்வேறு கேள்விகளை எழுப்பிவிட்டிருந்தாள். அடுத்த வருடம் அம்மா கருடபஞ்சமி நோன்பைச் செய்வாளா? அப்படியே செய்தாலும் கதையைச் சொல்வாளா? அப்படியே சொன்னாலும் அக்கம்மாவாகி அழுவாளா? எதுவும் புரியவில்லை. காத்திருக்கிறேன் அடுத்த கருடபஞ்சமிக்கு.

About The Author

1 Comment

  1. S Ramakrishnan

    நினைத்து நினைத்து நோன்பு இருந்து எதிர்பார்த்து இருக்கும் பொழுது, காத்திருந்தது உண்மையில் கிடைத்து விட்டால், மனம் ஏற்பதில்லை. காத்து கொண்டே இருக்க மனம் விரும்பும். அடுத்த கருட பஞ்சமியை அவர் கொன்டடுவார். கதை நன்ராக இருக்கிறது.

    ராம கிருஷ்ணன்”

Comments are closed.