கல்லும் குளமும் (2)

"என்ன புள்ள இந்தப் பக்கமா வந்துட்டே? மச்சான தேடிடுச்சோ?" என்று கேட்டான்.

"வாப்பா உங்களக் கூப்புட்டு வரச்சொன்னாங்க" என்றாள்.

"என்னையா? உங்க வாப்பாவா? ஆச்சரியமா இருக்கே, எதுக்குப் புள்ள கூட்டிட்டு வரச் சொன்னாங்க?"

"தெரியாது மச்சான்."

"மூணாப்பூ படிச்சா போதுமா? என்னான்னு தெரிஞ்சிட்டு வர வேண்டாமா? சரி, வாரேன்னு போயிச் சொல்லு. தம்பி இந்தப்பக்கமா வந்தா அவனக் கடையில் வச்சிட்டு வாரேன்னு சொல்லு."

ஒரு நாளும் கூப்பிட்டு விடாத மனுஷன் எதுக்காம்? யோசிக்கலானான் ஹாக்கீம்.

வீடு தாழிட்டுக் கிடக்கவும் சுபைதா தன் வீட்டுக்குப் போய் இருக்கிறாள் என்பது சுக்கூருக்குப் புரிந்து விட்டது. அவன் வீட்டுக்குள் நுழையாமலேயே மாமனார் வீட்டுக்குத் திரும்பி விட்டான்.

அவன் வந்ததும் அஹமது சாயபுவின் முகத்தில் தெளிர்ச்சி உண்டானது. பக்கத்தில் சுபைதாவும் மாமியும் உட்கார்ந்து இருந்தார்கள். இவனைக் கண்டதும் மாமி எழுந்து முக்காடு இட்டவர்களாய் வெளியேறி, சமையல் கட்டுக்குப் போய் விட்டார்கள்.

ஆசனத்தில் அமரச் சொன்னார், "சொல்லுங்க மாமா, கூப்புட்டு வுட்டீங்களாமே?" என்று கேட்டான் சுக்கூர்.

அஹமது சாயபு இதை எதிர்பார்க்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே இப்படி நேரடியாக வந்து நின்று விடுவான் என்பது தெரியாததால் அவர் இன்னும் சொல்வதற்கு ஆயத்தப்படவும் இல்லை.

"காலையிலே இவ இங்க வந்து இருந்தாளே. அப்ப கூட நீங்க எதுவும் சொல்லி விடல்ல".

"நேரடியாக உங்ககிட்டேயே பேசிக்கிடலாம்னுதான்" என்றார் அஹமது.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னார். "ஒங்க மச்சினன் அன்வருக்கு வெளிநாட்டுல வேலை விசயமா முயற்சி பண்ணுனதுல இப்ப ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. என்னால் இருவத்தஞ்சு வரைக்கும் தேத்திற முடியும். இப்ப இவன் அந்தப் பக்கமா வேலைக்குப் போனாதான் எங்களாலே இனிமே நிமிந்து நிக்க முடியும். அதோட சின்னவள கட்டிக் கொடுத்த வகையில் இன்னும் நாலு பவுன் போட வேண்டி இருக்கு. ரெண்டு வருஷசத்துல போடுறதாச் சொன்னேன். அதுக்குண்டான தவணையும் நெருங்கிடிச்சி. இந்த வருஷம் விவசாயத்துல போட்ட பணம், உழைப்பு எல்லாம் மழை தண்ணி இல்லாம வீணாப் போச்சு. ஒரு வழியும் அடைபடல. அன்வருக்கு அடுத்த வாரத்துக்குள்ள ஐம்பது தேத்தியாவணும். இரண்டு மூணு மாசத்துக்கப்புறம் அவன் பணம் வர ஆரம்பிச்சிரும். ஆனா, அதுக்கு இப்ப என்ன செய்றது? ஒண்ணும் ஓடல. அதுதான் கையப் பெசஞ்சிட்டு இருக்கேன்."

மாமா யோசனையை மட்டுமல்ல, பணத்தையும் ஒரு சேரவே எதிர்பார்க்கிறார் என்பது புரிந்து விட்டது. அனால் இவனும் இந்தப் பணத்தேவைக்காகத்தான் நாளும் பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறான். மாமா தன்னிடம் மனம் திறப்பது போல, அடுத்த மருமகனிடம் திறக்க முடியுமா? அந்த வகையில் இது தனக்கான மரியாதையாகவே பட்டது.

"என்ன செய்யணும்ங்குறீங்க? என்கிட்டேயும் பணமா எதுவும் இல்லியே. இருந்தா குடுத்து உதவிடுவேன்" என்றான் சுக்கூப்.
நிற்கக் கூடாத இடம் எதுவோ, அதில் மருமகன் வந்து நிற்பது அஹமது சாயபுகுக்கு சங்கடமாக இருந்தது. உதவி எப்படிப்பட்டதென்று தன் வாயாலேலே சொல்லிவிட வேண்டியிருக்கிறது. மருமகனிடம் இவ்வளவு நாளும் நிமிர்ந்து பேசியே பழக்கம்.

"உங்க கையில பணமா எதுவும் இல்லேங்கிறதும் எனக்குத் தெரியும்" என்று மருமகனின் முகம் பார்ப்பதற்கு பதிலாக சுபைதாவின் முகம் பார்த்தார் அஹமது.

"சுபைதா கையில கெடக்குற காப்பையும், கழுத்தில கிடக்குற நெக்லஸையும் தந்தீங்கன்னா கொஞ்சம் பணத்தப் புரட்டிறலாம்".
சுக்கூருக்கு இந்தப் பேச்சு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. தன் மகளுக்குப் போட்டு அனுப்பிய நகைகளையும், இவனாய் வலியச் சம்பாதித்துப் போட்டதையும் ஒரு சேர கைவைக்கிறார் மாமனார்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author