கவரிங்

இரண்டு அதிர்ச்சிகள் ஒரே நேரத்தில்.

நிலை தடுமாறித்தான் போய்விட்டேன். புவனாவா.. இப்படி. இந்த ஏழு வருட தாம்பத்தியத்தில் முதல் முறையாய் அபசுரம்.

நேற்றுவரை அவளுக்கு என்ன நகை போட்டிருக்கிறது என்ற தகவல் கூடத் தெரியாது.

கல்யாணத்தின் போது அலங்கரித்து பக்கத்தில் உட்காரவைத்த போது எது அசல், எது போட்டோவிற்கான ஜோடனை என்று வித்தியாசப்படுத்தக்கூடத் தெரியவில்லை, இன்று காலை விசாரிக்கும்வரை.

"புவி.. அவசரமா உன்னோட செயின் வேணும். தரியா"

"எதுக்குங்க"

சரி. அவளுக்குத் தெரிந்தால் என்ன. சொன்னேன். நண்பன் கடன் கேட்டதை. கையில் அவ்வளவு பணம் இல்லை. நகையை வைத்து வாங்கிக் கொடுத்து, பிறகு மீட்டுத் தருவான் என்பதை.

"வந்து.. இல்லீங்க"

"என்ன சொல்றே. கல்யாணத்துல போட்டாங்களே. நீயும் தெனம் போட்டுகிட்டு நிப்பியே" என்றேன் குழப்பமாய்.

"மன்னிச்சுருங்க. அந்தப் பேச்சு வேணாம். விட்டுருங்க"

"என்னம்மா இது, அவசரத் தேவைன்னு சொல்றேன். புரியாம பேசறியே"

என் வற்புறுத்தல் அவளது படபடப்பை அதிகமாக்கியது.

"வந்து.. அது அசல் இல்லீங்க. கவரிங். எங்கப்பா கடைசி நிமிஷத்துல பணம் புரட்ட முடியாம…"

கவரிங்! புவனா இதை இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருக்கிறாள். இன்று தேவை என்று வந்ததும் இந்த உண்மை. ஆடிப் போனேன் உள்ளுக்குள்.

நண்பனிடம் மழுப்பினேன். அடுத்த நாலைந்து மாதங்கள் சுவாரசியமின்றி ஓடின. வருவது.. சாப்பிடுவது.. தூங்குவது.. என் ஊமைக் கோபம் அவளுக்கும் புரிந்தது.

ஆனால் சமாதானம் செய்யவோ மன்னிப்பு கேட்கவோ எதற்கும் முயற்சி செய்யவில்லை. வழக்கம் போல எதுவும் நிகழாத மாதிரி தன் கடமைகளில் மூழ்கியிருந்தாள்.

இன்று அலுவலகத்தில் ஒரே பரபரப்பு.

"விஷயம் தெரியுமா? நம்ம மணி ஒருத்தர் விடாம கடன் கேட்பானே.."

"ஆமா. அவனுக்கென்ன"

"வேற சகவாசம்ப்பா. அவ அரிச்சுப் புடுங்கியிருக்கா. இவன் நம்ம தலையில மொளகா அரைச்சுட்டான். எப்படித் திருப்பி வாங்கப் போறேனோ.."

அவரவர் புலம்பினார்கள். என்னைத் தவிர.

வீடு திரும்பியபோது என்னுள் குற்ற உணர்வு. காரணமின்றி இவள் மீது ஏன் கோபம்? நகை தராததினால் எந்த நஷ்டமுமில்லையே. அசலாக இருந்திருந்தால் இழந்திருப்பேனே.

விளக்கினேன்.

"ஆனா எப்படியும் அது எனக்கு இல்லை" என்றேன் இடக்கு விடாமல்.

சிரித்தாள். "அது அசல்தான்"

"எ..ன்ன"

"பொய்தான் சொன்னேன். ஒரு தடவை அந்த நண்பரை நம்ம வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருந்தீங்க. நீங்க கவனிக்காதப்ப என்னைப் பார்த்து விஷமமா கண்ணடிச்சார். அப்பவே புரிஞ்சுகிட்டேன். மனுஷன் சுத்தமில்லேன்னு. சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. அதனால கவரிங்னு மழுப்பிட்டேன்" என்றாள் நிதானமாக.

"கில்லாடிதான் நீ" மனசாரப் பாராட்டினேன்.

About The Author

1 Comment

  1. Lakshmi

    Very nice story, but while using the language of a particular community like those of brahmins, there is slight variation in its usage at some places. e.g.பண்ணிரலாம்” should be பண்ணிடலாம். As I enjoy reading your work, thought should share this suggestion too”

Comments are closed.